‘பிஎன்-னா, பக்காத்தானா? வேதா உடனே முடிவு செய்ய வேண்டும்’

1 hindrafஇண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி வரப்போகும் தேர்தலில் அவரின் ஆதரவு யாருக்கு என்பதை அறிவிக்க வேண்டும் என்று அவ்வியக்கத்தின் முன்னாள் தலைவர்களும் ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னாள் இண்ட்ராப் தகவல் பிரிவுத் தலைவர் ஜெயதாஸ், அவ்வியக்கத்தின்  முன்னாள் ஆதரவாளர்கள் சூழ கோலாலும்பூரில் நடந்த செய்தியாளர் கூட்டமொன்றில் கலந்துகொண்டார்.

“மக்கள் குழப்பமடைய இடமளிக்கக் கூடாது; இது இந்திய சமூகத்தின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விவகாரம். இந்திய சமூகத்தை வைத்து சூதாட்டம் ஆட வேண்டாம்”, என்றாரவர்.

இந்தியர்களின் மேம்பாட்டுக்காக அவ்வியக்கம் தயாரித்துள்ள செயலாக்கத் திட்டம் குறித்து கடந்த மாதம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை வேதமூர்த்தி சந்தித்தது அவர்களுக்கு எரிச்சலைத் தந்துள்ளது.

“13வது பொதுத் தேர்தலுக்கு சில வாரங்கள் இருக்கும் வேளையில்  செயல்திட்டத்தை ஏற்றுக் கொண்டார் என்பதற்காக நஜிப் அப்துல் ரசாக்கைத்தான் இந்தியர்கள் நம்ப வேண்டும் ஆதரிக்க வேண்டும் என்று வேதமூர்த்தி கூறுவது முறையாகுமா?

“56 ஆண்டுகளாக பிஎன் இந்தியர்களைக் கவனிக்காமல் புறக்கணித்தது வாட்டி வதைத்தது என்றாலும்கூட வேதமூர்த்தியின் இண்ட்ராப் அணியினர், பின்னை ஆதரிப்பது என முடிவு செய்துள்ளனர்”, என்றாரவர்.

1 hindraf 2இண்ட்ராப் முன்பு பக்காத்தான் ரக்யாட்டையும் சந்தித்தது. ஆனால், அதன் செயல்திட்டத்தை பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் (வலம்) ஏற்கவில்லை. இண்ட்ராப் கோரிக்கைகள்  ‘புக்கு ஜிஞ்கா’வில் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன என்றவர் கூறிவிட்டார்.

இப்போது பிகேஆரில் உள்ள ஜெயதாஸ் பிஎன் இன்னும்கூட தன் போக்கை மாற்றிக்கொள்ளத் தயராக இல்லை என்றார்.

“போலீஸ் காவலில் இறந்துபோன சி.சுகுமாரின் உடல் செர்டாங் மருத்துவமனையின் சவக் கிடங்கில் இன்னும் கிடக்கிறது. அவரது உடலின்மீது இரண்டாவது சவப் பரிசோதனை செய்ய தாய்லாந்து மருத்துவர் டாக்டர் போர்னிப் (ரொஜனாசுனான்)புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

‘வாக்களிக்காமல் இருப்பது தவறு’

பக்காத்தான், பிஎன் இரண்டுமே தங்களின் செயல்திட்டத்தை ஏற்காவிட்டால் இரண்டுக்குமே வாக்களிக்க வேண்டாம் என்று வேதமூர்த்தி கேட்டுக்கொண்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

1 hindraf 3“இந்தியர்கள் வாக்களிக்காதிருந்தால் அது பிஎன்-னுக்குத்தான்  நன்மையாக முடியும்.

“பிறகு ஸ்ரீலங்காவில் நிகழ்ந்ததுதான் இங்கும் நடக்கும். (விடுதலை புலிகளின் தலைவர்) வி. பிரபாகரன் தமிழர்களை வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அதனால் மகிந்தா ராஜபக்‌ஷே அதிபரானதும் அவர்களையே ஒழித்து விட்டார்”, என்றாரவர்.

இண்ட்ராப் இந்தியர் சமூகம் முழுமைக்கும் சொந்தமானது. வேதமூர்த்தி ஒருதலைப்பட்சமாக அதை அம்னோ பக்கமாகக் கொண்டு செல்லக்கூடாது என்று ஜெயதாஸ் குறிப்பிட்டார்.

வேதமூர்த்தியின் இண்ட்ராப் அணி, நாடு முழுக்க உள்ள இண்ட்ராப் ஆதரவாளர்களினதும் பொதுவாக இந்திய சமூகத்தினதும் உணர்வுகளையும் அவாக்களையும் மதிக்க வேண்டும்.

“வேதமூர்த்தி பிஎன்னைத் துறந்து 13வது பொதுத் தேர்தலில் பிஎன்னின் தோல்விக்காக பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்”, என்றவர் வலியுறுத்தினார்.

மனித உரிமைக் கட்சி என்ற பெயரில் பி. உதயகுமார் தலைமையில் இயங்கும் இண்ட்ராபின் இன்னொரு அணி பொதுத் தேர்தலில் போட்டியிடத் திட்டமிடுகிறது.

TAGS: