தேர்தல் கொள்கை அறிக்கை வாக்குவாதம்: பக்காத்தான் பிஎன் -னைக் ‘காப்பி’ அடித்தது என்கிறார் முஹைடின்

muhaiபக்காத்தான் ராக்யாட் தனது தேர்தல் கொள்கை அறிக்கையைத் தயாரித்த போது பிஎன் சிந்தனைகளைக் ‘காப்பி’  அடித்தது என முஹைடின் யாசின் திருப்பிச் சாடியுள்ளார்.

அந்த இரு கூட்டணிகளின் தேர்தல் கொள்கை அறிக்கையில் காணப்படும் ஒரே மாதிரியான கருத்துக்கள் பற்றி  இரு தரப்புக்கும் இடையில் வாக்குவாதம் தொடரும் வேளையில் முஹைடின் அவ்வாறு கூறியுள்ளார்.

பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையிலிருந்து ‘திருடப்பட்டதாக’ கூறப்படுவதை மறுத்த அவர், டோல்  கட்டணங்களை குறைப்பது, கார் விலைகளைக் குறைப்பது போன்ற பிஎன் சிந்தனைகளும் கொள்கைகளும்  ‘காப்பி’ அடிக்கப்பட்டு பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிஎன்  துணைத்தலைவருமான அவர் சொன்னார்.

ஆசியான் சுயேச்சை வாணிகப் பகுதி உடன்பாட்டின் கீழ் கார் விலைகளைக் குறைக்கும் நடவடிக்கை முற்றாக
அமலாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இறக்குமதி வரிகள் அகற்றப்பட்டதும் ‘யாருடைய யோசனையும் இல்லாமல்’ அதனை அடைய முடியும் என
அவர் மேலும் சொன்னார்.

கோம்பாக்கில் நிருபர்களிடம் பேசிய அவர், பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையில் காணப்படும்
பெரும்பாலான அம்சங்களை பிஎன் ஏற்கனவே அமலாக்கி விட்டதாக முஹைடின் குறிப்பிட்டார்.

தேர்தலுக்கு முந்திய இனிப்புக்களை வழங்கியதின் மூலம் ‘மக்களைக் கவரும்’ நடவடிக்கைகளை எடுப்பதாக
பிஎன் குறை கூறப்பட்டாலும் அதனைத் தற்காத்துப் பேசிய முஹைடின், நிதி அம்சங்கள் விரிவாக
பரிசீலிக்கப்பட்டுள்ளதாகச் சொன்னார்.

பிஎன் தேர்தல் கொள்கை அறிக்கையை அமலாக்குவதால் அரசாங்கக் கடன்கள் அதிகரிக்க மாட்டா என்றும்
அவர் சொன்னார்.

TAGS: