பிகேஆர்: நஜிப் பொது நிதிகளைப் பயன்படுத்துகிறார்

najibபராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தமது தோற்றத்தை மேம்படுத்திக் கொள்ள பொது  நிதிகளைப் பயன்படுத்துவதாக பிகேஆர் பொருளாளர் வில்லியம் லியோங் குற்றம் சாட்டியுள்ளார்.

மீடியா பிரிமா-விலும் ஆஸ்ட்ரோ-விலும் விளம்பரம் செய்யும் அமைப்புக்களில் பிரதமர் துறை முதலிடம்  வகிப்பதாக மே பாங்க் முதலீட்டு வங்கி ஆய்வு தெரிவித்துள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

“13வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு தமது தோற்றத்தை மேம்படுத்திக் கொள்ள தேர்தல் பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்னரே நஜிப் 36.1 மில்லியன் ரிங்கிட் பொது நிதியைச் செலவிட்டுள்ளார்,” என லியோங் இன்று விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார்.

najib1கடந்த பிப்ரவரி மாதம் நஜிப் காணப்பட்ட சீனப் புத்தாண்டு விளம்பரம், நாளேடுகளில் வெளியிடப்பட்டதுடன் தேசியத் தொலைக்காட்சியிலும் இணையத்திலும் ஒளிபரப்பானதை அவர் சுட்டிக் காட்டினார்.

“நஜிப் மக்கள் பணத்தை விவேகமாகச் செலவு செய்யத் தவறி விட்டார். (அதாவது அந்தப் பணத்தை பொது நன்மைக்குப் பயன்படுத்த வேண்டுமே தவிர தனிப்பட்ட ஆதாயத்துக்காக அல்ல) ஆகவே பிரதமர் என்ற முறையிலும் நிதி அமைச்சர் என்ற முறையிலும் அவர் தோல்வி கண்டுள்ளார்,” என செலாயாங் எம்பி-யுமான லியோங் சொன்னார்.

பிஎன் கூடுதலாக 4.9 மில்லியன் ரிங்கிட்டைச் செலவு செய்துள்ளது என்றும் மே பாங்க் முதலீட்டு வங்கி ஆய்வு தெரிவித்துள்ளது.

“பிரதமர் துறை விளம்பரச் செலவுகளில் உயர்ந்த இடத்தை வகிக்கிறது. அது விளம்பரங்களுக்காக 36.1  மில்லியன் ரிங்கிட்டை செலவு செய்துள்ளது. 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான மொத்த விளம்பரச் செலவுகளில் அது ஏழு விழுக்காடு ஆகும்.” என அந்த ஆய்வு குறிப்பிட்டது.

பிரதமர் துறைக்கு அடுத்த நிலையில் யூனிலிவர் மலேசியா உள்ளது. அது 13 மில்லியன் ரிங்கிட்டை செலவு செய்துள்ளது. இதில் ஆர்வத்தைத் தூண்டும் இன்னொரு அம்சம் விளம்பரங்களுக்கு 4.9 மில்லியன் ரிங்கிட் செலவு செய்துள்ள தலையாய 20 அமைப்புக்களில் பிஎன் கூட்டணியும் இடம் பெற்றிருப்பதாகும்.

“13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக விளம்பரங்கள் தொடரும்”

najib2“பெரும்பாலும் இந்த மாதம் நிகழும் என எதிர்பார்க்கப்படும் தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் துறையும் பிஎன்-னும் தொடர்ந்து விளம்பரங்கள் செய்யும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.”

பிஎன் -னுடைய முறைகேடான அரசாங்க நிர்வாகத்தை மறைப்பதற்கு விளம்பரங்கள் செய்யப்படுவதாக லியோங்  கூறிக் கொண்டார்.

அதற்கு நேர்மாறாக முக்கிய ஊடகங்களில் தோன்றுவதற்கு பக்காத்தான் ராக்யாட்டுக்கு வாய்ப்புக்  கொடுக்கப்படவில்லை என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

எதிர்க்கட்சிகள் ஆர்டிஎம் என்ற மலேசிய வானொலி தொலைக்காட்சியில் முன் கூட்டியே பதிவு செய்யப்பட்ட  தங்கள் தேர்தல் கொள்கை அறிக்கையை ஒளிபரப்புவதற்கு தகவல் அமைச்சு கடந்த மாதம் முன் வந்தது.  ஆனால் எதிர்க்கட்சிகள் அதனை நேர்மையற்றது என வருணித்து நிராகரித்து விட்டன.

கடந்த சனிக்கிழமை பிஎன் தேர்தல் கொள்கை அறிக்கையை ஆர்டிஎம்-மில் வழங்க இரண்டு மணி நேரம் எடுத்துக் கொண்டார்.

TAGS: