13வது பொதுத் தேர்தல்: ஏப்ரல் 20-ல் வேட்பாளர் நியமனம், மே 5-ல் தேர்தல்

datesமிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட 13வது பொதுத் தேர்தல் மே 5ம் தேதி நிகழும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 20ம் தேதி வேட்பாளர் நியமன நாளாகும்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட ஒரு வாரத்தில் புத்ரா ஜெயாவில் தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம்  நடைபெற்ற பின்னர் அந்தத் தேதிகளை ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் இன்று அறிவித்தார்.

பிரச்சாரத்துக்கு 15 நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று தசாப்தங்களில் இது மிகவும் கூடுதலான காலமாகும்.

பல தொலைக்காட்சி நிலையங்கள் அந்த அறிவிப்பை ‘நேரடியாக’ ஒளிபரப்பின. பிற்பகல் மணி 12.34க்கு அந்த நேரடி ஒளிபரப்பு தொடங்கியது.

சரவாக் தவிர்த்த மற்ற மாநிலங்கள் அனைத்திலும் சட்டமன்றத் தேர்தல்களும் நாடாளுமன்றத் தேர்தல்களும்  ஒரே நேரத்தில் நடைபெறும். சரவாக்கில் அடுத்த சட்டமன்றத் தேர்தல் 2016ம் ஆண்டுதான் நடத்தப்பட  வேண்டும்.

இந்த முறை வாக்களிப்பதற்கு 13.2 மில்லியன் மலேசியர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அந்த  எண்ணிக்கையில் 3 மில்லியன் பேர் முதன் முறையாக வாக்களிக்கப் போகின்றவர்கள்.

dates2இந்த நாட்டு வரலாற்றில் மிகவும் நெருக்கமான போட்டியாக 13வது பொதுத் தேர்தல் இருக்கும் என  எதிர்பார்க்கப்படுகின்றது.

நஜிப் அப்துல் ரசாக் தலைமையில் இயங்கும் பிஎன் 2008ல் நாடாளுமன்றத்தில் தான் இழந்த மூன்றில் இரண்டு  பங்கு பெரும்பான்மையைப் பெறுவதற்கு தீவிரமாக உழைத்து வருகிறது.

அன்வார் இப்ராஹிம் வழி நடத்தும் பக்காத்தான் ராக்யாட் 2008ல் நிகழ்ந்த ‘அரசியல் சுனாமியை’ மேலும்  அதிகமான மாநிலங்களுக்குக் குறிப்பாக தென் பகுதியில் விரிவுபடுத்தி புத்ரா ஜெயாவைக் கைப்பற்ற எண்ணம்  கொண்டுள்ளது.

2008ல் மக்களவையில் பிஎன் -னுக்கு 140 இடங்களும் பக்காத்தானுக்கு 82 இடங்களும் கிடைத்தன.

அப்போது 12 மாநிலச் சட்டமன்றங்களுக்கு நிகழ்ந்த தேர்தலில் பக்காத்தான் ஐந்து மாநிலங்களைக் கைப்பற்றியது. அதில் பினாங்கு, பேராக், சிலாங்கூர், கெடா ஆகியவற்றை முதன் முறையாக பக்காத்தான் கைப்பற்றியது. கிளந்தானை  பாஸ் கட்சி மீண்டும் தக்க வைத்துக் கொண்டது. ஆனால் பேராக் மீண்டும் பிஎன் கட்டுக்குள் சென்று விட்டது.

மொத்தம் செலுத்தப்பட்ட வாக்குகளில் 50.27 விழுக்காடு வாக்குகள் பிஎன்-னுக்குச் சென்ற வேளையில் 46.75 விழுக்காடு வாக்குகள் பக்காத்தானுக்குச் சென்றன.

TAGS: