மாட் சாபு : சுங்கை ஆச்சே-யில் மும்முனைப் போட்டி இருக்காது

pasசுங்கை ஆச்சே தொகுதி மீது பாஸ் கட்சிக்கும் பிகேஆர் கட்சிக்கும் இடையிலான பேச்சுகள் வேட்பாளர்  நியமன நாளுக்கு முன்னதாக முடிந்து தீர்வு காணப்படும் என பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு நம்பிக்கை  கொண்டுள்ளார்.

அந்தத் தொகுதியில் மும்முனைப் போட்டி இருக்காது இரு முனைப் போட்டியே இருக்கும் என மாட் சாபு என்றும் அழைக்கப்படும் அவர் சொன்னார்.

அந்த விவகாரத்தைக் கோலாலம்பூரில் பாஸ், பிகேஆர் மத்தியத் தலைமைத்துவம் விரைவில் விவாதித்து தீர்வு  காணும் என அவர் மேலும் கூறினார்.

“நாங்கள் அது பற்றி விவாதிப்போம். காலக் கெடு வேட்பாளர் நியமன நாள் காலை 9 மணி வரை,” என்று அவர் பினாங்கு டிஏபி தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்.sabu

அது தமது சொந்தக் கருத்து என்றும் பாஸ் கட்சி தமக்கு மட்டும் சொந்தமானது அல்ல என்றும் மாட் சாபு  தெரிவித்தார்.

“நாம் அது குறித்துப் பேசி இறுதித் தீர்வு காண வேண்டும் என்பதே என் சொந்தக் கருத்தாகும்,” என அவர்  மேலும் சொன்னார்.

அந்த நிலை வரும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் ராக்யாட் அடைவு நிலையைப் பாதிக்குமா என  வினவப்பட்ட போது அப்படி நான் நினைக்கவில்லை என்று மாட் சாபு தெரிவித்தார்.

“நாங்கள் நூற்றுக்கணக்கான இடங்களுக்கு தீர்வு கண்டுள்ளோம். இது ஒன்று மட்டுமே எஞ்சியுள்ளது.”

டிஏபி தலையிடாது

சுங்கை ஆச்சே தொகுதி குறித்து பினாங்கு மாநில பாஸ் ஆணையாளர் சாலே மான் -னும் மாநில பிகேஆர் தலைவர் மான்சோர் ஒஸ்மானும் வெளியிட்டுள்ள அறிவிப்புக்கள் பற்றி மாட் சாபு கருத்துரைத்தார்.

அந்தத் தொகுதியில் பாஸ் கட்சியின் மாநில இளைஞர் தலைவர் யூஸ்னி மாட் பியா போட்டியிடுவார் என சாலே அறிவித்துள்ள வேளையில் Solidariti Anak Muda Malaysia தலைவர் பத்ருல் ஹிஷாம் ஷாஹாரின் (Chegubard) அங்கு நிறுத்தப்படுவார் என்பதை மான்சோர் உறுதி செய்துள்ளார்.

அந்தத் தொகுதியில் பாஸ் போட்டியிட வேண்டும் என்பதில் சாலே உறுதியாக இருக்கிறார். கோலாலம்பூரில் உள்ள கட்சித் தலைமைத்துவம் அதனை முடிவு செய்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

இதனிடையே பிகேஆர்-க்கும் பாஸ் கட்சிக்கும் இடையிலான இட ஒதுக்கீட்டுப் பேச்சுக்களில் டிஏபி தலையிடாது என அதற்கு முன்னர் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார். சுங்கை ஆச்சே-யில் மும்முனைப் போட்டி இருக்காது என அவர் நம்புகிறார்.

கோலாலம்பூரில் உள்ள அந்தக் கட்சிகளின் தலைமைத்துவத்திடம் இரு தரப்பு விவாதங்களை டிஏபி விட்டு விடும் என்றும் அவர் சொன்னார்.

TAGS: