‘நஜிப் மூன்று இளம் பக்காத்தான் வேட்பாளர்களைக் குறி வைத்துள்ளார்’

1anvarகிள்ளான் பள்ளத்தாக்கில் போட்டியிடும் பக்காத்தான் ரக்யாட்டின் இளம் வேட்பாளர் மூவரைக் கவிழ்க்க வேண்டும் என்று பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்  தம் கட்சியினருக்கு உத்தரவிட்டிருக்கிறார் என்ற தகவல் தமக்குக் கிடைத்திருப்பதாக பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார்..

“லெம்பா பந்தாயில் போட்டியிடும் நுருல் இஸ்ஸா, பாண்டானில் ரபிஸி ரம்லி, பெட்டாலிங் ஜெயா (உத்தாரா)வில் டோனி புவா ஆகியோரே அம்மூவருமாவர்”.

நேற்றிரவு பண்டார் துன் ரசாக்கில் 4,000 பேர் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசியபோது அன்வார் இதனைத் தெரிவித்தார்.

1anvar1புவாவை வீழ்த்த முடியாது என்று அன்வார் (இடம்) கூறினார். ஏனென்றால் பெட்டாலுங் ஜெயா உத்தாரா நாடாளுமன்றத் தொகுதியில் 90 விழுக்காட்டு வாக்காளர்கள் சீனர்கள்.

தம் புதல்வி நுருல் இஸ்ஸாவும் பிகேஆர் தேர்தல் வியூக இயக்குனர் ரபிஸியும்தான் கடுமையான எதிர்ப்பைச் சந்திப்பார்கள் என்றவர் குறிப்பிட்டார்.

“சிலர் நுருல் இஸ்ஸாவுக்கு ஒரு பாதுகாப்பான இடத்தைக் கொடுக்க வேண்டும் என்றார்கள். நான் அவரிடம் அது பற்றிப் பேசியதற்கு, ‘இல்லப்பா, அவர்கள் என் மக்கள். லெம்பா பந்தாயில்தான் போட்டியிடுவேன்’ என்று கூறிவிட்டார்”, என்றார்.

கோலாலும்பூர் கூட்டரசு பிரதேசத்துக்கான மேலும் நான்கு பிகேஆர் வேட்பாளர்களையும் அன்வார் அந்நிகழ்வில் அறிவித்தார். தியான் சுவா (பத்து), அப்துல் காலிட் இப்ராகிம் (பண்டார் துன் ரசாக்), டாக்டர் டான் கீ குவோங் (வங்சா மாஜு), இப்ராகிம் யாக்கூப் (சித்தியாவங்சா) ஆகியோரே அந்நால்வருமாவர்.

1 anvar2இப்ராகிம், 1973-இலிருந்து 1983 வரை கோலாலும்பூர் மேயராக இருந்த யாக்கூப் லத்தீபின் புதல்வராவார்.

அவர் 2008-இல், சித்தியாவங்சாவில்  அம்னோவின் சுல்ஹஸ்னானிடம் 8,134 வாக்குகளில் தோற்றார்.

டான், முன்னாள் துணை அமைச்சர். அத்துடன், முன்பு பிரபலமாக இருந்த மாற்றரசுக்கட்சி அரசியல்வாதியான டாக்டர் டான் சீ கூனின் புதல்வர். 2008-இல் அவர் கெராக்கானை விட்டு வெளியேறினார்.

வங்சா மாஜுவில் முன்பு போட்டியிட்ட வீ சூ கியோங்குக்குப் பதிலாக அவர் களமிறக்கப்படுகிறார். பிகேஆர் வேட்பாளராக அங்கு போட்டியிட்டு 150வாக்குகளில் வென்று எம்பி ஆன வீ, பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி ஒரு சுயேச்சை எம்பி ஆனார்.

இப்ராகிம் அலியை மலேசியாகினி சந்தித்துப் பேசியபோது அவர் சித்தியாவங்சாவைக் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

சித்தியாவங்சாவில் 12,500 இராணுவ அஞ்சல் வாக்குகள் இருப்பதாக அவர் சொன்னார். அதுதான், நாட்டில் அதிகமான இராணுவ அஞ்சல் வாக்குகளைக் கொண்ட தொகுதி. அஞ்சல் வாக்குகள் இல்லையென்றால் 2008-இல் அங்கு பிகேஆர் வெற்றி பெற்றிருக்கும் என்றாரவர்.

அஞ்சல் வாக்குகளில் 5,000 வாக்குகள் பிகேஆருக்குச் சாதகமாக திரும்பினால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று இப்ராகிம் கூறினார்.

முன்னாள் ஆயுதப்படைத் தலைவர்கள் ஐவர், அண்மையில் பக்காத்தானில் சேர்ந்தது பாதுகாப்புப் படையினரின் கூடுதல் ஆதரவைப் பெற உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.