வான் அசிசா: காலிட் மீண்டும் எம்பி ஆவது உறுதியில்லை

1 azizahபிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா இஸ்மாயில், சிலாங்கூரில் மாற்றரசுக் கட்சி மீண்டும் வெற்றிபெற்றால் அப்துல் காலிட்  இப்ராகிம்தான்  மந்திரி புசார் ஆவார் என்பதில்லை,  தகுதி படைத்த வேறு பலரும் கட்சியில் உள்ளனர் என்று கூறியுள்ளார்.

என்றாலும்,  பக்காத்தான் ரக்யாட் ஆட்சியில் சிலாங்கூரை நல்லவிதமாகவே காலிட் நிர்வகித்து வந்தார் என்றும் அவர் பாராட்டினார்.

“எங்களிடம் ஆற்றல் வாய்ந்த தலைவர்கள் இருக்கிறார்கள்.

“அவரைப் பொறுத்தவரை சிறந்த பணியாற்றியுள்ளார். ஆனாலும், ஒரு குழு இருக்கிறது, அதுதான் மந்திரி புசார் யார் என்பதை முடிவு செய்யும்”, என்றாரவர்.

1 azizah 1சிலாங்கூர் மந்திரி புசார் பதவி பற்றிக் கருத்துரைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். வான் அசிசா தாம் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் அறிவித்தார்.

“நான் போட்டியிட மாட்டேன்.   ஆனால், தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவேன்”, என்றார்.

அடுத்த மந்திரி புசார் யார்?

வான் அசிசா, 2008-இல் பெர்மாத்தாங் பாவ் எம்பி பதவியைத் துறந்தார் என்பதால் இப்போது அவர் நாடாளுமன்றத் தொகுதி எதிலும் போட்டியிட முடியாது. அவர் காலி செய்த பெர்மாத்தாங் பாவில் ஓர் இடைத் தேர்தல் நடந்து அதில் வென்று அவரின் கணவர் அன்வார் இப்ராகிம் ஒரு எம்பி ஆனார்.

வான் அசிசாவின் அறிவிப்பு அவர் சிலாங்கூர் சட்டமன்றத்துக்குப் போட்டியிடுவார், தேர்தலில் பக்காத்தான் வென்றால் மந்திரி புசாரும் (எம்பி)  ஆவார் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

1 azizah 2ஆனால், கட்சித் தலைவர்கள் பலர் எம்பி  பதவிமீது கண் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலியும் (வலம்) அவர்களில் ஒருவராம்.

இதனிடையே, காலிட் மாநிலச் சட்டமன்றத்துக்கு எந்த இடத்தில் போட்டியிடுவார் என்பது தெரியவில்லை.   சிலர், அவர் ஈஜோக் தொகுதியைத் தக்கவைத்துக்கொள்ள முயலலாம் என்றும் வேறு சிலர்  போர்ட் கிள்ளானில் போட்டியிடலாம் என்றும் கூறுகின்றனர்.

காலிட், தம் பண்டார் துன் ரசாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்கவைத்துக்கொள்வார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. நேற்றிரவு அவரே அதை உறுதிப்படுத்தினார்.

சிலாங்கூர் பிகேஆர் அதன் முழு வேட்பாளர் பட்டியலை ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கும்.

TAGS: