நேர்மையாக நடந்து கொள்ளுமாறு ஒசிபிடி-களுக்கு ஐஜிபி அறிவுரை

1igpபோலீஸ் படையின் நேர்மையை நிலை நாட்டும் பொருட்டு தேர்தல் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் எந்தத்  தரப்பு பக்கமும் சாய வேண்டாம் என தேசியப் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் எல்லா மாவட்ட போலீஸ் தலைவர்களுக்கும் (ஒசிபிடி) அறிவுரை கூறியுள்ளார்.

“தேர்தல்களின் போதும் போலீசாரின் பங்கும் கடமையும் வழக்கமானதே- அதாவது அமைதி, பாதுகாப்பு, பொது  ஒழுங்கு ஆகியவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகும்.”

இஸ்மாயில் போலீஸ் முகநூல் பக்கத்தில் சேர்த்துள்ள அறிக்கையில் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

13வது பொதுத் தேர்தல் சுமூகமாக நடைபெறுவதற்கு உதவியாக போதுமான போக்குவரத்து, தொடர்பு வசதிகளைத் தயாராக வைத்திருக்குமாறு அவர், எல்லா போலீஸ் துறைகளுக்கும் பட்டாளங்களுக்கும் ஆணையிட்டார்.

“தேர்தலின் போது எழக் கூடிய சவாலையும் சூழ்நிலையையும் சமாளிக்க, கடமையில் இருக்கும் போலீஸ்காரர்கள் தொழில் ரீதியாக நடந்து கொள்ளவும் வேண்டும்,” என்றார் அவர்.

இதனிடையே வாக்காளர்களை அச்சுறுத்த வேண்டாம் என தேசியப் போலீஸ் படைத் தலைவர் செயலகம், தனிநபர்களையும் அமைப்புக்களையும் அரசு சாரா அமைப்புக்களையும் எச்சரித்துள்ளது.

அத்தகைய அச்சுறுத்தல்கள் சட்டத்திற்குப் புறம்பானது என்பதுடன் அவை ஜனநாயக நடைமுறைகளையும் கீழறுப்புச் செய்வதாகவும் அதன் பொது உறவு உதவித் தலைவர் ஏசிபி ராம்லி முகமட் யூசோப் கூறினார்.

“வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளுக்கு செல்வதைத் தடுக்கும் பொருட்டு அவர்களுடைய அடையாளக் கார்டுகளை சோதனை செய்வதற்குச் சாலை தடுப்புக்களை அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.”

“அதிகாரம் இல்லாமல் அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வது கிரிமினல் குற்றமாகும்,” என அவர் நேற்று புக்கிட் அமானில் நிருபர்களிடம் கூறினார்.

வாக்காளார்களை மிரட்டுவது உட்பட தேர்தல் நடைமுறைகளுக்கு இடையூறு செய்யும் குழுக்களை போலீசார் கண்காணிப்பர் என்று தெரிவித்த ராம்லி, அத்தகைய அச்சுறுத்தல்கள் வந்தால் அவை பற்றிப் போலீசில் புகார் செய்யுமாறு வாக்காளர்களுக்கு அறிவுறுத்தினார்.

-பெர்னாமா

TAGS: