பக்காத்தான் ராக்யாட் மூத்த தலைவர் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட அண்மைய செக்ஸ் வீடியோ ‘போலியானது’ என பாஸ் உதவித் தலைவர் ஹுசாம் மூசா கருதுகிறார்.
“அது ஜோடிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட வீடியோக்களைக் கூட அவர்கள் தயாரிக்க முடியும் என்றால் யாரையும் சம்பந்தப்படுத்தி அவர்கள் வீடியோவை உருவாக்க முடியும்.”
“அதனை பாஸ் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை,” என அவர் இன்று காலை நிருபர்களிடம் கூறினார்.
வேட்பாளர் நியமன நாளுக்கு இன்னும் எட்டு நாட்கள் இருக்கும் வேளையில் மூத்த பாஸ் தலைவர் ஒருவர் அடையாளம் தெரியாத மாது ஒருவருடன் செக்ஸ் உறவு வைத்திருந்ததாக கூறப்பட்ட வீடியோ ஒன்று பல அம்னோ வலைப்பதிவுகளில் நேற்று தொடக்கம் வலம் வந்து கொண்டிருக்கிறது.
ஹோட்டல் அறை ஒன்றில் எடுக்கப்பட்டதாக நம்பப்படும் அந்த வீடியோவில் ஒர் ஆடவர் அடையாளம் தெரியாத மாது ஒருவருடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதையும் பின்னர் ஆடைகளை உடுத்திக் கொள்வதையும் அந்த வீடியோ காட்டுகின்றது.
அந்த மாது-வுக்கு பிகேஆர் பணம் கொடுத்ததாக அம்னோ ஆதரவு வலைப்பதிவாளர் பாப்பாகாமோ கூறிக் கொண்டுள்ளார். எதிர்த்தரப்புப் பக்காத்தான் ராக்யாட் கூட்டணிக்குள் உட்பூசல் நிகழ்வதாகவும் அவர் சொன்னார்.
இன்று காலை சோதனை செய்த போது யூ டியூப் இணையத் தளம் அந்த வீடியோவை அகற்றி விட்டது தெரிய வந்தது.
‘குற்றவாளிகள் இறைவனுடைய சீற்றத்தை எதிர்கொள்வர்’
இன்று புத்ராஜெயாவில் பாஸ் கட்சி ஆதரவாளர்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஹுசாம், அந்த வீடியோவுக்குப் பின்னணியில் உள்ளவர்கள் இறைவனுடைய சீற்றத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றார்.
வரும் தேர்தலில் அவர் புத்ராஜெயா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதனிடையே அந்த வீடியோவை விநியோகம் செய்ததாகக் கூறப்பட்ட இருவரை நேற்று தாங்கள் கைது செய்துள்ளதாக திரங்கானு போலீசார் அறிவித்துள்ளனர். அவர்கள் பிகேஆர் உறுப்பினர்கள் எனச் சொல்லப்பட்டது.
மிகவும் கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பக்காத்தானுக்கு எதிராக இன்னும் அதிகமான செக்ஸ் வீடியோக்களை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அன்வார் அண்மையில் எச்சரித்திருந்தார்.
“அடுத்த இரண்டு வாரங்களில் எனக்கு இடையூறுகள் அதிகரிக்கும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தரப்பிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.”
“என் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையை சிதறடிக்க அவர்கள் விரும்புகின்றனர். அந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மையா இல்லையா என்பது பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை,” என பத்து தொகுதியில் செராமா நிகழ்வு ஒன்றில் அன்வார் சொன்னார்.
அதே போன்று களங்கப்படுத்தப்படுத்துவதற்கு முயற்சி செய்யப்பட்ட மற்ற பக்காத்தான் தலைவர்களில் லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார், நடப்பு சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் ஆகியோரும் அடங்குவர்.