பாஸின் ஆயர் ஈத்தாம் வேட்பாளராக பாஸ் ஆதரவாளர் காங்கிரஸ் (பிஎஸ்சி) தலைவர் ஹு பாங் செள அறிவிக்கப்பட்டுள்ளார். அந்த இஸ்லாமிய கட்சியின் வேட்பாளராக முஸ்லிம்-அல்லாத ஒருவர் களமிறக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
பாஸ் ஆன்மிகத் தலைவர் நிக் அசிஸ் நிக் மாட் இன்று காலை ஜோகூர் பாருவில் அந்த அறிவிப்பைச் செய்தார்.
ஜோகூரில் நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் பாஸ் வேட்பாளர்கள் எண்மரில் ஹூ-வும் ஒருவராவார். அவர், மசீச இளைஞர் தலைவர் வீ கா சியோங்கை எதிர்த்துக் களமிறங்குவார் எனத் தெரிகிறது.
2008-இலும் பாஸ் முஸ்லிம்-அல்லாத ஒருவரை (குமுதா ரஹ்மான்)க் களமிறக்கியது. அவரும் பாஸ் ஆதரவாளர் காங்கிரசைச் சேர்ந்தவர்தான். ஆனால், அவர் பிகேஆர் வேட்பாளராகப் போட்டியிட்டார்.
அதன்பின்னர், பாஸ் அதன் ஆதரவாளர் காங்கிரசைத் தரமுயர்த்தி கட்சியின் ஒரு சிறகாக இணைத்துக்கொண்டது. இது முஸ்லிம்-அல்லாதாரும் பாஸ் கட்சியின் சின்னத்தில் போட்டியிட வகை செய்தது.