ஞாயிற்றுக்கிழமை தேர்தலில் கிறிஸ்துவர்கள் அதிருப்தி

1 christதேர்தல் ஆணையம் மே 5 ஞாயிற்றுக்கிழமை வாக்களிப்பை வைத்திருப்பதை கண்டித்த சரவாக் கிறிஸ்துவர்கள், தேர்தல் ஆணையம் தங்களைக் கவனத்தில் கொள்ளவில்லைபோல் தெரிகிறது என்று குறைபட்டுக்கொண்டனர்.

மலேசியா பல இனங்களையும் சமயங்களையும் கொண்ட நாடு என்பதையும் இங்கு மக்கள்தொகையில் சுமார் 10 விழுக்காட்டினர் கிறிஸ்துவர்கள் என்பதையும் ஆணையம் மறந்ததுபோலும் என்றவர்கள் சாடினார்கள்.

சரவாக்கில் மக்கள் தொகையில் பெரும்பாலோர் கிறிஸ்துவ சமயத்தைச் சேர்ந்தவர்கள்.

1 christ1“மே 5, ஒரு ஞாயிற்றுக்கிழமை. அதை வாக்களிப்பு நாளாக நிர்ணயித்திருப்பது தேர்தல் ஆணையம் (இசி) சரவாக், சாபா கிராமப்புற மக்களில் பெரும்பாலோர் கிறிஸ்துவர்கள் என்பதைப் பொருட்படுத்தவில்லை என்பதைத் தெளிவாகவே காண்பிக்கிறது”, என்று சரவாக் டிஏபி தலைவர் சொங் சியெங் ஜென் (படத்தில் இடம் இருப்பவர்) கூறினார்.

“இசி வேட்பாளர் நியமன நாளையும் வாக்களிப்பு நாளையும் அறிவித்தவுடன் பலர் என்னிடம் முறையிட்டனர்.

“எங்கள் ஆதரவாளர்களுக்கும் வாக்காளர்களுக்கும் அதனால் பல அசெளகரியங்கள் ஏற்படும்”, என்று குறிப்பிட்ட அவர், கிராப்புற மக்களில் பெரும்பாலோரான கிறிஸ்துவர்கள் காலையில் தேவாலயம் செல்வார்கள் என்பதையும் சிலர் வாக்களிக்க நெடுந் தொலைவு செல்ல வேண்டியிருக்கும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“இது போக, கிராமப்புறங்களில் சில இடங்களில் வாக்குச் சாவடிகளை பிற்பகல் மணி ஒன்று அல்லது இரண்டுக்கெல்லாம் மூடி விடுவார்கள்”, என்றாரவர்.

வாக்களிப்பு நேரத்தில் பிரச்னை

ஆழ்ந்த சமயப்பற்றுள்ள ஜோசம் டாவெக், ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்துவர்கள் தேவாலயம் செல்லும் நாள் என்பதை ஆணையம் மறந்துவிட்டதை எண்ணித் தாமும் தம்மைப் போன்ற மற்றவர்களும் அதிருப்தியுறுவதாகக் கூறினார்.

1 christ2“திங்கள்கிழமை தொடங்கி சனிக்கிழமைவரை எத்தனையோ நாள்கள் உள்ளன. எதற்காக ஞாயிற்றுக்கிழமை? அதுதான் எனக்குப் புரியாத புதிராக உள்ளது”, என்று முன்னாள் படைவீரரான ஜோசம் குறிப்பிட்டார்.

வாக்களிப்பு நிலையங்கள் காலை எட்டு மணியிலிருந்து மாலை 5 மணிவரைதான் திறந்திருக்கும். வாக்காளர் எண்ணிக்கை குறைவாக உள்ள இடங்களில் ஒரு மணிக்கெல்லாம் மூடி விடுவார்கள் என்றாரவர்.

“அந்த நேரக்த்தில் கிறிஸ்துவர்களில் பலர் தேவாலயத்தில்தான் இருப்பார்கள்”, என்றார்.

“வாக்களிக்கச் செல்ல வேண்டும் என்பதால் கிறிஸ்துவர்களில் பலர் அன்று தேவாலயம் செல்ல முடியாமல் போகலாம். இது தவறாகும். ஞாயிற்றுக்கிழமை ஒவ்வொரு கிறிஸ்துவரும் கண்டிப்பாக தேவாலயம் செல்ல வேண்டும்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

இதனிடையே, சரவாக் தேவாலயங்கள் சங்கத்தின் (ஏசிஎஸ்) செயலாளர் அம்ப்ரோஸ் லினாங், மாநிலத்திண் 60 விழுக்காடு கிறிஸ்துவர்களைப் பிரதிநிதிக்கும் ஏசிஎஸ் இதன் தொடர்பில் பின்னர் அறிக்கை வெளியிடும் என்றார்.

TAGS: