BR1M பெற்றவர்களுக்கு பிஎன் தலைவர் நஜிப் கடிதம் அனுப்பியுள்ளார்

najibBR1M என்ற ஒரே மலேசியா உதவித் தொகை (BR1M) பெற்றவர்களுக்கு பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்  கடிதம் அனுப்பியுள்ளார். நேற்று அவர்களுக்கு அந்தக் கடிதங்கள் கிடைத்தன.

“BR1M, அரசாங்கத்தின் அக்கறையைக் காட்டுகின்றது. உங்கள் நல்வாழ்வை உறுதி செய்ய வாழ்க்கைச் செலவுச்  சுமையைக் குறைக்கும் முயற்சியே அதுவாகும்.”

“வரும் ஆண்டுகளில் நாங்கள் மக்களுக்கு நிறையச் செய்யத் திட்டமிட்டுள்ளோம். அனைத்து  மலேசியர்களுடைய நன்மைக்காக இன்னும் நிறையச் செய்யப்படும் என்பதே அதன் அர்த்தமாகும்,” என நஜிப்  மனம் திறந்து எழுதியுள்ள அந்த மடலில் குறிப்பிட்டுள்ளார்.

13வது பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் நியமன நாள் இன்னும் ஒரு வாரம் இருக்கும் வேளையில் நஜிப்பின் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

பிரதமர் அலுவலகம் வழியாக BR1M உதவியைப் பெற்றவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதங்களில் எந்த அரசியல் கட்சியின் சின்னமும் பொறிக்கப்படவில்லை. “பராமரிப்பு அரசாங்கப் பிரதமரிடமிருந்து வரும் உண்மையான குறிப்பு” என்று மட்டும் அவற்றில் எழுதப்பட்டுள்ளது.najib1

“நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள் என முகமட் நஜிப் அப்துல் ரசாக் என்ற நான்  நம்புகிறேன். உங்களுக்கு BR1M உதவித் தொகை கிடைத்திருக்க வேண்டும் என்றும் நான் கருதுகிறேன்,” என கூட்டரசு அரசாங்கச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்த அந்தக் கடிதத்தில் நஜிப் எழுதியுள்ளார்.

நஜிப் கடந்த வாரம் பிஎன் தேர்தல் கொள்கை அறிக்கையை அறிவித்த போது தேர்ந்தெடுக்கப்பட்டால் பிஎன்  அரசாங்கம் இப்போது குடும்பத்திற்கு 500 ரிங்கிட்டாக இருக்கும் BR1M உதவித் தொகையை அடுத்த  தவணைக்கால முடிவுக்குள் இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்து ஒரு குடும்பத்துக்கு 1200 ரிங்கிட்டாக  உயர்த்துவதாக வாக்குறுதி அளித்தார்.

தனி நபர்களுக்கு வழங்கப்படும் தொகை 250 ரிங்கிட்டிலிருந்து 600 ரிங்கிட்டாக கூட்டப்படும் என்றும் அவர்  சொன்னார்.

ஆனால் அந்த நடவடிக்கை வாக்குகளை வாங்குவது அல்ல என்றும் மாறாக குறிப்பிட்ட பிரிவினருக்கு உதவித்  தொகை வழங்குவதாகும் என்று நஜிப் வலியுறுத்தினார்.

BR1M இரண்டாவது சுற்றில் 4.3 மில்லியன் குடும்பங்களுக்கும் மாதம் ஒன்றுக்கு மூவாயிரம் ரிங்கிட்டுக்கும் குறைவாக வருமானம் உள்ள திருமணமாகாத 2.7 மில்லியன் தனிநபர்களுக்கும் BR1M உதவித் தொகை கொடுக்கப்பட்டது.

பல்வேறு பிரிவுகளுக்கு ரொக்க உதவித் தொகைகளை வழங்குவதாக பக்காத்தான் ராக்யாட்டும் பிஎன் தேர்தல் கொள்கை அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளன. பக்காத்தான் மூத்த குடிமக்களுக்கு ரொக்க உதவி கொடுப்பதாக தெரிவித்துள்ளது.

TAGS: