தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதை ஹிண்ட்ராப் இன்னும் முடிவு செய்யவில்லை

hindraf13வது பொதுத் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதை ஹிண்ட்ராப் என்ற இந்து உரிமை நடவடிக்கைக் குழு  இன்னும் முடிவு செய்யவில்லை.

ஏனெனில் மலேசிய இந்திய ஏழைகளை உயர்த்துவதற்கு தான் வழங்கிய பெருந்திட்டத்துக்கு பிஎன், பக்காத்தான்  ராக்யாட் அங்கீகாரத்துக்காக அவற்றுடன் ஹிண்டராப் இன்னும் பேச்சு நடத்திக் கொண்டிருப்பதாக அதன்  தேசிய ஆலோசகர் என் கணேசன் கூறினார்.

“நாங்கள் இலக்கு வைத்துள்ள தேதி ஏப்ரல் 18 ஆகும். அன்றைய தினம் எங்கள் கதவுகள் மூடப்படும்.
அதற்குள் பக்காத்தான் அல்லது பிஎன் -னிடமிருந்து எங்களுக்கு கிடைக்கலாம். அடுத்து நாங்கள் பிஎன்
அல்லது பக்காத்தானுக்கு வாக்களிக்குமாறு நாடு முழுவதும் உள்ள இந்தியர்களைக் கேட்டுக் கொள்வோம்.”

“அவை இரண்டும் ஒப்புக் கொண்டால் நாங்கள் எடுப்பதற்கு இன்னொரு முடிவு உள்ளது அல்லது அவற்றில் யாரும் ஒப்புக் கொள்ளாவிட்டால் வாக்களிப்பதில் எந்த வேறுபாடும் இல்லை என்ற நிலையைக் கடைப்பிடித்து  வாக்களிக்கச் செல்ல வேண்டாம் என நாங்கள் கேட்டுக் கொள்வோம்,” என கணேசன் இன்று கோலாலம்பூரில்  நிருபர்களிடம் கூறினார்.

பிஎன் -னைச் சந்தித்ததின் மூலம் ஹிண்ட்ராப் தன்னை விற்று விட்டதாகக் குற்றம் சாட்டுவது நியாயமல்ல என  அவர் மேலும் சொன்னார். காரணம் நாங்கள் இன்னும் பக்காத்தானுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். நாளை  இன்னொரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் கணேசன்.

கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் ஹிண்ட்ராப் ஆறு முறை அதிகாரப்பூர்வமாகவும் 15 முறை அதிகாரப்பற்றற்ற  முறையிலும் பக்காத்தானைச் சந்தித்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

“கடைசியாக ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி மருத்துவமனையில் இருந்த போது பக்காத்தானுடன் ஏப்ரல் 1ம்  தேதி பேசப்பட்டது. அதில் பாஸ் உதவித் தலைவர் ஹுசாம் மூசாவும் கோலா சிலாங்கூர் எம்பி டாக்டர் hindraf1சுல்கிப்லி அகமட்டும் பங்கு கொண்டனர்,” என்றார் கணேசன்.

இப்போது பக்காத்தானுக்கு ஆதரவாக இருக்கும் முன்னாள் ஹிண்ட்ராப் உறுப்பினர்கள், அந்த இயக்கத்தைத் தாக்குவதற்குப் பதில் ஹிண்ட்ராப் பெருந்திட்டத்தை எதிர்த்தரப்புக் கூட்டணி அங்கீகரிக்க உதவ வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

பிஎன் -னை ஹிண்டராப் சந்தித்ததை கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கிப் பேசிய பக்காத்தான் ஆதரவு
ஹிண்ட்ராப் போராளிகள் பொதுத் தேர்தலில் யாரை ஆதரிக்கப் போவதை தெளிவுபடுத்த வேண்டும் எனக்
கேட்டுக் கொண்டனர்.

இதனிடையே மார்ச் 25ம் தேதி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சந்தித்த பின்னர் பிஎன் -உடன் மூன்று  கூட்டங்களை ஹிண்ட்ராப் நடத்தியுள்ளதாகவும் கணேசன் தெரிவித்தார்.

“அடுத்த மூன்று கூட்டங்களும் பிரதமர் நியமித்த குழுவுடன் நடத்தப்பட்டது. அந்தச் சந்திப்புகளில் எங்கள் பிரச்னைகள் விவாதிக்கப்பட்டன. இன்னும் முடிவு தெரியவில்லை. என்றால் வெகு விரைவில் எங்களுக்குத்  தெரிய வரும்.”

hindraf2அந்தக் குழுவில் அரசியல்வாதிகளும் அரசாங்க ஊழியர்களும் இடம் பெற்றிருந்தனர் எனச் சொன்னதைத் தவிர பேச்சுக்களின் விவரங்களை வெளியிட கணேசன் மறுத்து விட்டார். பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தொகுதிகளுக்கான வேண்டுகோள் பிஎன் உடன் நடத்தப்பட்ட விவாதங்களில் இருந்ததா என வினவப்பட்ட போது அவர் அவ்வாறு சொன்னார்:

“நாங்கள் இன்னும் விவாதங்களின் மத்தியில் இருக்கிறோம். இன்னும் அந்தக் கட்டத்துக்கு முன்னேறவில்லை.  நாங்கள் இன்னும் பிஎன் -னிடம் அந்த வேண்டுகோளை கொடுக்கவில்லை.”

பக்காத்தானுடன் நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது ஹிண்டராப் ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளையும் 10 சட்டமன்றத் தொகுதிகளையும் கோரியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்த்தரப்புக் கூட்டணியுடன் நடத்தப்பட்ட பேச்சுக்கள் தோல்வி காண அது தான் காரணம் அல்ல என கணேசன் சொன்னார்.

“எங்கள் கவனம் எப்போதும் பெருந்திட்டம் பற்றியதாகும். தோல்வி ஏற்பட்டதற்கு பெருந்திட்டம் தான் காரணம்.   அதனைச் சொன்னால் நன்றாக இருக்காது என்பதால் இடங்கள் என்று காரணம் கூறப்பட்டது,” என்றார் அவர்.

ஹிண்ட்ராப் பெருந்திட்டத்தை பக்காத்தான் கொள்கை அளவில் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் அதன் அமலாக்கத்திற்கு வகை செய்ய ஹிண்டராப் விடுத்த ஒப்பந்த ஏற்பாட்டை அது நிராகரித்து விட்டது என கணேசன் தெரிவித்தார்.

என்றாலும் ஹிண்டராப் கதவுகள் இன்னும் எல்லாத் தரப்புக்களுக்கும் திறந்துள்ளதாக அவர் சொன்னார்.

“நாங்கள் இந்த நாட்டில் எந்த அரசியல் கட்சிக்கும் கடன்பட்டிருக்கவில்லை. நாங்கள் பிரதிநிதிக்கும் மக்களுக்கே  நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்,” என்றும் கணேசன் சொன்னார்.

வாக்களிப்பதிலிருந்து இந்திய சமூகம் ஒதுங்கினால் அது காலப் போக்கில் செல்வாக்கை இழந்து விடுமா என வினவப்பட்ட போது கணேசன் சொன்னார்: “பல ஆண்டுகளாக வாக்களிப்பு இந்தியர் நலன்களுக்கு உகந்தததாக இருந்ததாக நான் எண்ணவில்லை.”

“வாக்களிக்காததின் மூலம் இந்தியர் வாக்குகளுடைய முக்கியத்துவம் மீது கவனம் செலுத்தப்படும்… அவர்கள் விலகிக் கொண்டதால் ஏற்பட்ட தாக்கத்தை வெற்றியாளர்களும் தோல்வி அடைந்தவர்களும் உணர முடியும்,” என்றார் அவர்.

TAGS: