நாட்டில் வறுமையும் இல்லாமையும் அதிகரித்தால் அமைதி நிலவாது: அதற்கு பக்கத்தான் தீர்வு என்ன?

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், ஏப்ரல் 13, 2013

XavierJayakumarஐந்து ஆண்டுகளுக்கு முன் நாட்டில் சில மாநிலங்களில் சிறிய ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்த மக்கள் வழங்கிய அதிகாரத்தைக் கொண்டு எவ்வளவு நேர்மையாக, உண்மையாக மக்களுக்குச் சேவையாற்ற முடியுமோ அதைச் செய்தோம். குறிப்பாக, சிலாங்கூர் மக்களுக்கு 5 ஆண்டுகள் சேவையாற்ற வழங்கிய வாய்ப்பில் நல்ல பல பாடங்களைக் கற்றுக்கொண்டோம்.

நிர்வாகத்துறையில் புதிய அனுபவங்களைப் பெற்ற நாங்கள் இந்த மாநில அரசிடம் உள்ள சிறு அதிகாரத்தின் வழி மிகச் சிறிய 160 கோடி வெள்ளி வரவு செலவு திட்டத்தின் வழி மக்கள் நலன் போற்றும் பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

மத்திய அரசின் பரந்த அதிகாரம் மற்றும்  251,600 கோடி வெள்ளி மொத்தப் பட்ஜெட்டுடன் ஒப்பிட்டால் சிலாங்கூர் மாநிலப் பட்ஜெட் 0.00063 விழுக்காடு என்பது தெரியும். அதாவது 160 விழுக்காடு சிறியது. ஐந்தே ஆண்டில்  இம் மாநிலத்தின் மொத்த வரவும் கையிருப்பும் கூடி நிர்வாகச் செலவும் ஊழலும்  கட்டுப்படுத்தப் பட்டதால் 40 விழுக்காடு உபரி வருமானம் கிட்டியுள்ளது.

அதனைப் பயன்படுத்தி மக்களுக்குப்  பல புதிய திட்டங்களை இம்மாநில  அரசால் வழங்க முடிகிறது. ஆனால் இப்படிப்பட்ட பணப் பலம் கொண்ட ஒரு நாட்டில்  நமது ஜனத் தொகையுடன் ஒப்பிட்டு உலக நாடுகளைக் கவனித்தால், இந்த நாட்டின் வருமானம் எப்படியோ, எங்கோ  ஆவியாக மறைவதை உணர முடிகிறது.

ஆனால்  எல்லாவற்றிலும் இரகசியக் காப்பு சட்டங்களை வைத்து அரசாங்க முறைகேடுகளை, ஊழலை மக்களிடம் இருந்து  மறைக்கும்   ஓர் அரசாங்கம் கடந்த 56 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறது என்றால் மலேசியாவைத் தவிர வேறு எந்த நாடாக இருக்க முடியும்?

இந்த செல்வம் கொழிக்கும் பூமியில் 40 விழுக்காடு மக்களின்  குடும்ப வருமானம் 1500 வெள்ளிக்கும் குறைவாக உள்ளது.

இந்த நாட்டின்  34 விழுக்காட்டு தொழிலாளர்கள்  மாதம் 700 வெள்ளிக்குக் குறைவான மாத வருமானத்தைப் பெறுகின்றனர்.

30 விழுக்காட்டுக்கும்  குறைவான மக்களே  உயர்கல்வியைப் பெற முடிகிறது. 50 ஆண்டுகளுக்கு முன் நம்மை விடப் பின் தங்கியிருந்த  தென் கொரியர்கள் இன்று 96.1 விழுக்காட்டினர்  உயர்கல்வி கற்றவர்களாக இருக்கின்றனர்.

ஆக, ஏழ்மையில் எல்லா இன மக்களும் அவதிப்படுகின்றனர். அதனால் நாம் நமது நாட்டை கடும் சுரண்டலிலிருந்து காப்பாற்ற வேண்டும். நாம் நமது சகாக்களை, நமது சமுதாயத்தை  ஏழ்மையிலிருந்து மீட்க வேண்டும்.

எந்த தேசத்தில் வறுமையும் இல்லாமையும்  அதிகரிக்கிறதோ அங்கே  அமைதி நிலவாது.

ஆக, அந்த அடிப்படையிலேயே பக்காத்தான் ராயாட் வெளியிட்ட தேர்தல் அறிக்கை உள்ளது. இந்நாட்டில் நிலவும் பல பலவீனங்களை மேம்படுத்த பக்காத்தான் ராயாட்டின் தேர்தல் கொள்கை அறிக்கை பலருக்கு கிடைக்காததால் பல வித சந்தேகங்கள் உலாவி வருகின்றன. அந்த அறிக்கையின்  சுருக்கத்தை இங்கு  வழங்குகிறோம்.

பக்காத்தானின் “மக்கள் தேர்தல் கொள்கை அறிக்கையின்”  தமிழ் பிரதியின் சுருக்கம்:

 

பக்காத்தானே மக்களின் நம்பிக்கை

மக்கள்  நல்வாழ்வுக்கு:

* எண்ணெய் விலை குறைப்பு.

* மின் கட்டணம் குறைப்பு.

* தண்ணீர் கட்டணக் குறைப்பு.

* டோல் கட்டணத்தை அகற்றுவது.

* ஆதிக்கப் போக்கை அகற்றுவது.

* வாகன விலையைக் குறைப்பது.

* 150,000 வாங்கும் சக்திக்கேற்ற வீடுகள் கட்டுதல்.

* தோட்டத்தொழிலாளர்கள் வீடுகள்  உட்பட அனைத்து மக்களின்  தேவைகளைக் கவனத்தில் கொண்டு முதல் வருடத்தில் வாங்கும் தகுதிக்கேற்ற வீடுகளை கட்ட முதலாவது ஆண்டில் 500 கோடி ரிங்கிட்டையும், இரண்டாம் ஆண்டு முதல் ஐந்தாம் ஆண்டு வரை ஆண்டுக்கு 200 கோடி ரிங்கிட்டையும்  ஒதுக்குதல்.

* அனைவருக்கும் இலவச கல்வி, PTPTN அகற்றுதல்.

* AES அகற்றப்படும், AES சம்மன் ரத்து செய்யப்படும்.

* பெல்டா குடியேற்றவாசிகளுக்கு நீதி.

* மக்களுக்கு எதிரான கொடுமையான சட்டங்களை அகற்றி நீதியை நிலைநாட்டுதல்.

* அரசு மருத்துவமனையில் அனைத்து மக்களுக்கும் இலவச மருத்துவம் வழங்குவதோடு 2 மற்றும் 3-ஆம் வகுப்பு கட்டணம் அகற்றுதல்.

* ஏழைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சமூக நலத்துறை வழி வழங்கப்படும் சமூக நலத்துறை உதவிகள் மாதத்திற்கு 300 ரிங்கிட்டிலிருந்து  550 ரிங்கிட்டாக உயர்த்துதல்.

 

மக்கள் சகோதரத்துவம்

* சமயங்கள் மற்றும் இஸ்லாம் அமைப்பின் மறுமலர்ச்சி

* கலாச்சாரமே தேசிய ஒற்றுமைக்கு அடித்தளம்

* தேசிய மகளிர் சேமநிதி: கணவன்மார்கள் தங்களின் சம்பள விகிதாசாரத்திற்கேற்ப (மாதம் RM10 முதல் RM100 வரை) குறிப்பிட்ட தொகையை இந்த சேமநிதியில் சேர்ப்பது சட்டப்படி கட்டாயமாக்கப்படும்.

* மூத்த குடிமக்களுக்கு உதவி: 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் ஆண்டுக்கு 1,000 வெள்ளி போனசாக வழங்கப்படும்.

* எரி பொருள் உற்பத்தி செய்யும் மாநிலங்கள் 20% உரிமத் தொகை பெறவுள்ள அதன் உரிமையை  நிலை நிறுத்துவது.

* தேசிய மொழியின் மேன்மை கட்டிக்காக்கப்பட்டு, தாய்மொழியின் உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டு, ஆங்கில மொழியின் தரம் மேம்படுத்தப்படும்.

* நாடு முழுவதும் மக்களால் நடத்தப்படும் பள்ளிகளுக்கு, தமிழ்ப்பள்ளிகள் உட்பட 1854 பள்ளிகளுக்கு (தற்போது வழங்கப்படும் நிர்வாகச் செலவினத்திற்கான மானியம் தவிர்த்து) கூடுதல் ஒதுக்கீடு வழங்கப்படும்.  இதற்காக 22 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படும்.

* கூட்டரசில் சபா-சரவாவுக்கு வழங்கப்பட்ட அந்தஸ்துக்கு மதிப்பளித்தல்

* கூச்சிங் பிரகடனத்தின் அம்சங்களுக்கேற்ப சபா-சரவா மக்களுக்கு திட்டங்கள் உடனடியாக அமல்படுத்தப்படும்.

* மலேசிய இந்தியர்கள் உட்பட  எல்லா மலேசியர்களும்  எதிர்நோக்கும்  பிரஜா உரிமை பிரச்சனைக்குப் புத்ரா ஜெயாவைக் கை பற்றிய நூறு  நாட்களில் தீர்வு காண்பது.

* பூர்வக் குடியினரின் நில உரிமை-சமூக நலன் பாதுகாக்கப்படும்.

* எரிபொருள் உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கான (Royalty) உரிமத்தொகை 5% லிருந்து 20% உயர்த்தப்படும்.

 

மக்கள் பொருளாதாரம்

* ஐந்து ஆண்டுகளில்  பத்து லட்சம் அந்நியத் தொழிலாளர்களைக் கட்டங்கட்டமாக குறைப்பதன் மூலம் 10 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை மலேசியர்களுக்கு உருவாக்குதல்.

* குறைந்தபட்ச சம்பளத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தொழிலாளரும் மாதம் ஒன்றுக்கு குறைந்த பட்சம் ரிம. 1,100ஐ சம்பளமாகப் பெறுவர்.

* மேற்கல்வி பெறாத 10 லட்சம் இளையோருக்கு மக்கள் முன்னோடித் திட்டத்தின் வாயிலாக டிப்ளோமா வரைக்குமான தொழில் திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.

* கைத்தொழில் மற்றும் தொழில்திறன் பயிற்சிகளுக்கு 5 பல்கலைக்கழகங்கள், நடப்பு பொருளாதார தேவைக்கேற்ப 25 தொழில்திறன் பள்ளிகள் நிர்மாணித்தல்.

* கல்வி மறுசீரமைப்பின் வழி பொருளாதார மேம்பாடு.

* தொழிற்சங்கம்-முதலாளிமார்கள்-அரசாங்கம் இடையிலான விவேக பங்காளித்துவத்தை பண்பாடாக்குவது.

* IKS உதவித் தொகை மற்றும் ஊக்குவிப்பு மறுசீரமைப்பு.

* 26 விழுக்காடு வரி செலுத்த வேண்டிய வருமான இலக்கான 100,000ஐ கூடுதலான வருமானத் தொகை ரி.ம. 400,000 ஆக உயர்த்தப்படும்.

* மக்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெங்கேராங்கிலுள்ள அனைத்து ரெப்பிட் திட்டங்களும் மறுஆய்வு செய்யும்.

* இராணுவ வீரர்களின் பொருளாதாரம்- சமூக நலனைப் பாதுகாத்தல்.

* டாக்சி தொழில்முனைவோரை வலுப்படுத்துதல்.

* ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% முதலீடு.

* மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசப் பொது போக்குவரத்து வசதி, கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் பஸ்களின் எண்ணிக்கையும் பயணத் தடங்களின் எண்ணிக்கையும் இரட்டிப்பாக்கும் வகையில் ஆட்சிக்கு வந்த முதலாம் ஆண்டில் 200 கோடி ரிங்கிட் ஒதுக்கப்படும்.

* ஆதிக்கப்போக்கைத் தகர்த்தெறிந்து போட்டித் தன்மையை அதிகரிப்பதில் பக்காத்தான் ரக்யாட்டின்  பொருளாதார அணுகுமுறை கவனம் செலுத்தும். இதன் வழி விலைவாசியைக் குறைத்து பொருளாதாரத்தின் ஆக்கத்திறனை வலுப்படுத்த முடியும்.மேலும் பல புதிய தொழில்முனைவோரின் உருவாக்கத்திற்கு இது வழி வகுக்கும்.

 

மக்கள் அரசாங்கம்

* இஸ்லாம் அல்லாத சமயங்கள் மற்றும் இஸ்லாம் அமைப்பின் மறுமலர்ச்சி.

* அரசுப் பணியாளர்களுக்கான புதிய சம்பள மற்றும் சேவைத்திட்டம்.

* தூய்மையான, நீதியான, வெளிப்படையானத் தேர்தல்.

* தேர்தல் ஆணையம், போலீஸ் துறை மற்றும் போலீஸ் முறைகேடுகள்  மீதான  சுயேச்சை விசாரணை ஆணையம் ஆகியவற்றில் மறுசீரமைப்பு.

* நாடாளுமன்ற மறுமலர்ச்சி.

* ஊடக சுதந்திரமும் ஊடகவியலாளர்களின் நம்பிக்கையை மீட்டுக் கொடுத்தல்.

* AUKU-வை அகற்றுவதோடு கல்வி சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துதல்.

* மக்களுக்கு எதிரான அனைத்து கொடூர சட்டங்களும் அகற்றப்படும்.

* நாட்டில் ஊழலை வேரறுக்கும் கொள்கை (DEBARAN) அமல்படுத்தப்பட்டு ஒருங்கிணைந்த ஆக்ககரமான அணுகுமுறையோடு  இலஞ்சத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* மக்கள் கூட்டணியின் தேர்தல் அறிக்கை மக்கள் கூட்டணியின் முந்தைய கொள்கை ஆவணங்களுடன் பிணைப்பைக் கொண்டுள்ளதால் இந்தத் தேர்தல் அறிக்கையை அவ்வாவணங்களுடன் சேர்த்துப் படிப்பது உசிதமானது.

மக்கள் கூட்டணியின் கூட்டுக் கொள்கை, புக்கு ஜிங்கா, மக்கள் கூட்டணியின் வரவு செலவுத் திட்டம் மற்றும் கொள்கை அறிவிப்பில் இடம் பெற்றுள்ள அம்சங்களையே இந்தத் தேர்தல் அறிக்கையும் உள்ளடக்கியுள்ளது.

TAGS: