நுருல் இஸ்ஸா நிகழ்வில் பெர்சே அம்பிகா

1 nurulவாக்காளர் பட்டியல் குறைபாடு போன்ற கவலைகள் இருந்தாலும் லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா, எப்படியோ முயன்று பெர்சே அமைப்பின் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசனை தம் கூட்டம் ஒன்றுக்கு அழைத்து வந்திருந்தார்.

நேற்றிரவு பங்சாரில் ஒரு சிறிய இடத்தில் அக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார் 400 பேர் இடித்துப் பிடித்துக்கொண்டு கூடி நின்ற அந்த இடத்தில் நுருல் உரையாற்றினார். அம்பிகாவும் பேசினார்.

1 nurul1ஆனால், அம்பிகா எடுத்த எடுப்பிலே தாம் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். பிஎன் மேடையிலும் பேசத் தயார் என்றாரவர். ஆனால், அதில் ஒரு பிரச்னை: “என்னவென்றால், பக்காத்தான் ரக்யாட் மட்டும்தான் என்னை அழைக்கிறது”, என்றவர் குறிப்பிட்டதும் கூட்டத்தில் சிரிப்பலை.

“பிஎன் அல்லது அம்னோ அழைத்தால், கண்டிப்பாக போவேன். இங்கே பேசுவதைத்தான் அங்கும் பேசுவேன்”, என்றாரவர். தொடர்ந்து பேசிய அவர் போலீஸ் காவலில் நிகழும் மரணங்கள், ஊழல், தேர்தல் மோசடி ஆகியவை குறித்து கவலை தெரிவித்துக்கொண்டார்.

‘வாக்களிக்கத் திரண்டு வருவீர்’

வாக்காளர்கள் பெரிய அளவில் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும் என்று பெர்சே இணைத் தலைவரான அம்பிகா வேண்டிக்கொண்டார். அப்போதுதான், வாக்காளர் பட்டியலில் மோசடி இருக்குமானால் அதனால் பெரிய தாக்கம் ஏற்படாதபடி தடுக்க முடியும்.

தம் உரையில் எந்தத் தொகுதியையும் பெயர் குறிப்பிடாத அம்பிகா,“இத் தேர்தலில் ஒவ்வொரு வாக்குக்கும் மதிப்பு உண்டு”, என்றார்.

“பெர்சே, சுதந்திரமான, நியாயமான தேர்தலுக்குத்தான்  எப்போதும் குரல் கொடுத்து வந்துள்ளது. ஆனால், வரும் தேர்தல் சுதந்திரமான தேர்தலாகவோ நியாயமான தேர்தலாகவோ இருக்காது.

“ஆனாலும், நாம் மனம் தளரலாமா? கூடாது. போராட்டத்தைத் தொடர வேண்டும். மோசடியை எதிர்க்க வேண்டும்”, என்றவர் கூறினார்.

1 nurul2நுருல் இஸ்ஸா, லெம்பா பந்தாயில் பராமரிப்பு அரசாங்கத்தின் கூட்டரசு பிரதேச, நகர்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நொங் சிக்கை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

அவர் தம் தொகுதி வாக்காளர் பட்டியல் பற்றி அடிக்கடி கவலை தெரிவித்து வந்துள்ளார். 2008-இல் 58,000 ஆக லெம்பா பந்தாய் வாக்காளர் எண்ணிக்கை 2012-ஆம் ஆண்டு இறுதியில் 71,000 ஆக கூடியிருந்தது.

வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களில் நாலாயிரத்துக்கு மேற்பட்டவை ஐயத்துக்குரியவை என்று கூறப்படுகிறது. இவ்விவகாரத்துக்கு நீதிமன்றத்தில் தீர்வுகாணும் நுருல் இஸ்ஸாவின் முயற்சியும் பலனளிக்கவில்லை. வாக்காளர் பட்டியல் குறித்து கேள்வி எழுப்பும் அதிகாரம் இல்லை என்று நீதிமன்றம் கைவிரித்து விட்டது.

அதைத் தமதுரையில் நினைவுகூர்ந்த நுருல் இஸ்ஸா, கூட்டத்தினர் வாக்களிப்பதுடன் வாக்களிப்பில் மோசடிகள் நிகழ்வதைத் தடுப்பதிலும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

TAGS: