செய்தி இணையத் தளங்களுக்கான தடையை பிஎன் மீண்டும் அறிவித்தது

kiniபிஎன் தேசியத் தேர்தல்களுக்கு முன்னதாக இணைய ஊடக பத்திரிக்கையாளர்களுக்கு தான்  விதித்திருந்த தடையை மீண்டும் அறிவித்துள்ளது.

13வது பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு தினத்துக்கு இன்னும் 20 நாட்களே எஞ்சியிருக்கும் வேளையில்  ஆளும் கூட்டணி மிகவும் ‘உணர்ச்சிகரமான’ கால கட்டத்துக்குள் நுழைந்துள்ள வேளையில் அந்தத் தடை  அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்னோ தலைமையகத்தில் இன்று காலை பிஎன் பொதுத் தேர்தல் வேட்பாளர்களை பிரதமர் நஜிப் அப்துல்  ரசாக் அறிவிப்பதைப் பற்றிய செய்திகளை சேகரிப்பதற்கு மலேசியாகினி, மலேசியா இன்சைடர் ஆகிய செய்தி  இணையத் தளங்களுக்கும் இணையத் தொலைக்காட்சி அலைவரிசையான கினிடிவி-க்கும்  தடை விதிக்கப்பட்டுள்ளது.

‘உயர் நிலையிலிருந்து வந்த உத்தரவுகளின்’ அடிப்படையில் அந்தத் தடை அமைந்துள்ளதாக அம்னோ செயலகம்  மலேசியாகினியிடம் தெரிவித்தது.

அந்தத் தடை அண்மையில் தான் அமலாக்கப்பட்டது என்றும் அது கூறியது.

ஆளும் கூட்டணி வேட்பாளர் பட்டியலை நஜிப்பிடமிருந்து பெற்றுக் கொள்வதற்காக இன்று காலை எல்லா பிஎன் தலைவர்களும் தலைமையகத்தில் கூடியிருந்தனர்.

2008ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு பல பிஎன் நிகழ்வுகள் குறித்த செய்திகளைச் சேகரிப்பதற்கு இணைய ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

12வது பொதுத் தேர்தலில் “இணையப் போரில்” தான் தோல்வி கண்டுள்ளதை ஒப்புக் கொண்ட பின்னர்
அரசாங்கம் தனது நிலையைத் தளர்த்திக் கொண்டது.

அதற்கு பின்னர் அது இணைய ஊடகங்களை அங்கீகரீத்ததுடன் அண்மைய காலம் வரை தனது நிகழ்வுகளுக்கு அழைத்தும் வந்தது.

ஏப்ரல் 4ம் தேதி பிஎன் உச்சமன்றக் கூட்டத்துக்குப் பின்னர் நிகழ்ந்த நிருபர்கள் சந்திப்பிலும் இணைய
ஊடகங்கள் கலந்து கொள்ளத் தடை விதிக்கப்பட்டது.

TAGS: