பக்காத்தான் ராக்யாட் தேர்தல் கொள்கை அறிக்கை நாட்டைத் திவாலாக்கி விடும் என பிஎன் செய்துள்ள
ஆய்வு ஜோடிக்கப்பட்ட எண்ணிக்கைகள், தவறான ஊகங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளதாக பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி ராம்லி கூறுகிறார்.
பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையை ஆய்வு செய்த பிஎன் உள் அறிக்கை தமக்குக் கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அரசாங்க வருமானத்துக்கு ஏற்படக்கூடிய சாத்தியமான இழப்பை அது அளவுக்கு அதிகமாக மதிப்பீடு செய்துள்ளதாகத் தெரிகிறது என்றார் அவர்.
செலவுகள் அதிகரிப்பும் அளவுக்கு அதிகமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்றும் எதிர்த்தரப்புக் கூட்டணி சாதிப்பதற்கு எண்ணியுள்ள 45 பில்லியன் ரிங்கிட் சேமிப்பை அந்த ஆய்வு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் ராபிஸி சொன்னார்.
அவர் இன்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பிகேஆர் தலைமையகத்தில் நிருபர்களிடம் பேசினார்.
“தற்போது 202 பில்லியன் ரிங்கிட்டாக இருக்கும் நடைமுறைச் செலவுகள், பிஎன் அரசாங்கத்திம் நடப்புச்
செலவுகள், விரயங்கள் அடிப்படையில் நடைமுறைச் செலவுகள் 270 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டும் என பிஎன் மதிப்பிட்டுள்ளது.”
பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கை மீதான ஆய்வு கடந்த வெள்ளிக் கிழமை அடையாளம் தெரியாத மின் அஞ்சல் வழியாக தமக்குக் கிடைத்ததாக ராபிஸி தெரிவித்தார். அந்தத் தகவல் உண்மையானது எனத் தாம் நம்புவதாக அவர் சொன்னார். ஏனெனில் அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் உயர் நிலை பிஎன் தலைவர்கள் தெரிவித்த புள்ளி விவரங்களுடன் ஒத்துப் போவதாக அவர் கூறினார்.