அமெரிக்காவில் விடுமுறை நாள் விருந்தில் நண்பர்கள் கற்பழித்து, இணையதளத்தில் படம் வெளியிட்டதால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.
டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம், ஓடும் பஸ்சில் ஒரே பெண்ணை 6 காமுகர்கள் கற்பழித்து சிதைத்து, அந்த பெண் உயிரிழந்த சம்பவத்தின் வடு இன்னும் நம் நெஞ்சில் இருந்து அகன்று விடவில்லை. இப்படிப்பட்ட சம்பவம் வளர்ந்து வருகிற இந்தியாவில் மட்டுமல்ல, வளர்ந்து விட்ட அமெரிக்காவிலும் நடக்கத்தான் செய்கிறது என்பதற்கு உதாரணமாக ஒரு கொடூர சம்பவம் நடந்திருக்கிறது.
கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவள் அந்த 15 வயது சிறுமி. அவளது பெயர் ஆட்ரீ பாட். ஒரு விடுமுறை நாளில் இரவு விருந்துக்கு தனது நண்பரின் வீட்டுக்கு சென்றாள். அந்த விருந்தில் ஆட்ரீக்கு ஏற்கனவே அறிமுகமான சம வயது நண்பர்கள் 15 பேர் கலந்து கொண்டனர். அந்த விருந்திலே மது பரிமாறப்பட்டது.
அந்த மதுவின் போதையில் ஆட்ரீ, மாடியில் இருந்த ஒரு அறைக்குப் போய் தூங்கி விட்டாள். மது விருந்து முடிந்ததும் அந்த மாடி அறைக்கு சென்ற சக நண்பர்களுக்கு, தூங்கிக்கொண்டிருந்த ஆட்ரியைப் பார்த்ததும் ஆசை வந்தது.
ஒருவரைத் தொடர்ந்து ஒருவர் உல்லாசம் அனுபவித்தனர். அதை செல்போனில் படமும் பிடித்துக்கொண்டனர். அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து போய் விட்டார்கள்.
மதுவின் போதை இறங்கி ஆட்ரீ கண் விழித்துப் பார்த்தபோது, தான் சிதைக்கப்பட்டதை உணர்ந்தாள். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தாள். தொடர்ந்து அவள் தலையில் இடியை இறக்கியதுபோல, அவளை சக நண்பர்கள் சிதைத்த காட்சிகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது தெரிய வந்தது.
இதில் அவள் மனம் உடைந்து போனாள். வாழ்வதை விட சாவதே மேல் என்று ஆட்ரீ முடிவு எடுத்தாள். இது குறித்து ஒரு சமூக வலைத்தளத்தில், ‘‘என் வாழ்வில் ஒருபோதும் நடந்திராத மிக மோசமான சம்பவம் நடந்துவிட்டது. என் வாழக்கை நாசமாகி விட்டது’’ என குறிப்பிட்டு இருக்கிறாள். அதைத் தொடர்ந்து அவள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.
முதலில் மகள் எதற்காக தற்கொலை செய்து கொண்டாள் என்பது ஆட்ரீயின் குடும்பத்துக்கு தெரியவில்லை. பின்னர்தான் நடந்தது தெரியவந்தது. போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இப்போது 3 சிறுவர்களை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது. அதன் முடிவில்தான் அந்தச் சிறுமியை சிதைத்தது எத்தனை பேர் என்பது தெரிய வரும்.
இந்த சம்பவம் கலிபோர்னியா மாகாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்போது அங்கு பெண் பிள்ளைகளை விருந்து என்ற பெயரில் வெளியே அனுப்ப பெற்றோர் தயங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.