பிஎன் வேட்பாளர் பட்டியலில் இப்ராஹிம் அலி இல்லை, சைபுடின் இடம் பெற்றுள்ளார்

அலிபராமரிப்பு அரசாங்கத்தின் உயர் கல்வித் துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா தமது பாகாங் தெமர்லோ நாடாளுமன்றத் தொகுதியை தக்க வைத்துக் கொள்வதற்கு அங்கு மீண்டும் நிறுத்தப்படுகிறார்.

அந்தத் தகவல் இன்று அறிவிக்கப்பட்டது. முற்போக்கான சிந்தனைகளைக் கொண்ட அம்னோ தலைவர் என
வருணிக்கப்படும் சைபுடின் அம்னோ உச்சமன்ற உறுப்பினரும் ஆவார். அவர் பல முறை அம்னோ நிலைக்கு
மாறுபட்ட அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.

என்றாலும் பிஎன் வேட்பாளர் பட்டியலில் சர்ச்சைக்குரிய பிரமுகரான பெர்க்காசா தலைவர் இப்ராஹிம்
அலியின் பெயர் காணப்படவில்லை.

பிஎன் சின்னத்தில் தமது கிளந்தான் பாசிர் மாஸ் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு அவர்
மீண்டும் நிறுத்தப்படுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அந்தத் தொகுதியில் பாசிர் மாஸ் அம்னோ தொகுதித் துணைத் தலைவர் சே ஜொஹான் சே பா போட்டியிடுவார்.

பாகாங் பிஎன் -னும் கிளந்தான் பிஎன் -னும் இன்று தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்தன.

சைபுடினுடன் பாகாங்கில் நஜிப் விசுவாசி எனக் கருதப்படும் ரொம்பின் எம்பி ஜமாலுதின் ஜார்ஜிஸ் மீண்டும் அதே தொகுதியில் நிறுத்தப்படுகிறார்.

ஏற்கனவே மஇகா உதவித் தலைவர் எஸ்கே தேவமணி வசம் இருந்த கேமிரன் ஹைலண்ட்ஸ் நாடாளுமன்றத்  தொகுதியில் மஇகா தலைவர் ஜி பழனிவேல் போட்டியிடுவார்.

TAGS: