ஒருவருக்கு பிடித்தமான பீரின் சுவை கூட அவரது மூளையை தூண்டி, மேலும் அவரை குடிக்கத்தூண்டுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். பீரின் சுவையே அதை குடிப்பவரின் மூளையிலிருந்து டோபோமைன் என்கிற வேதிநொதிமத்தை உருவாக்கி அவர்கள் மேலும் அதிகமாக குடிக்கவேண்டும் என்கிற உணர்வை உருவாக்குவதாக இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
அதாவது பீரில் இருக்கும் ஆல்கஹாலின் தூண்டுதல் இல்லாமலே, பீரின் சுவை மட்டுமே மனிதர்களின் மூளையை தூண்டச் செய்து அவரை மேலும் அதிகமாக குடிக்கச் செய்வதாக 49 பேரிடம் செய்யப்பட்ட ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.
நரம்பியல் தொடர்பான மருத்துவ சஞ்சிகை ஒன்றில் வெளியாகியிருக்கும் ஆய்வின் முடிவுகளின்படி, ஏற்கெனவே பெற்றோர் குடிகாரர்களாக இருக்கும் குடும்ப உறுப்பினர்களிடம் இந்த பீரின் சுவையின் தூண்டுதல் கூடுதலாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் இருக்கும் இண்டியானா மருத்துவ கல்விகளுக்கான பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையான பானங்கள் குடிக்கும்படி செய்து அவர்களின் மூளையின் செயற்பாடுகள் பரிசோதிக்கப்பட்டது. இந்த பானங்களில் ஒவ்வொருவருக்கும் பிடித்த பீரும் அளிக்கப்பட்டது. இந்த பானங்களில் ஒன்றாக அளிக்கப்பட்ட 15 மிலி லிட்டர் பீர் அவர்களின் வாயில் 15 நிமிட நேரம் சிறிது சிறிதாக கொடுக்கப்பட்டது.
பெற்றோரின் குடிப்பழக்கம் காரணியா?
இவர்கள் இந்த பானங்களை குடிக்கும்போது இவர்களின் மூளையின் தூண்டுதலை அளக்கும் மூளைச் செயற்திறன்மானிகள் இவர்களுக்கு பொருத்தப்பட்டிருந்தது. அந்த மூளைச் செயற்திறன்மானிகளில் பதிவான தகவல்களின் அடிப்படையில் பார்த்த போது, பீரில் இருக்கும் ஆல்கஹால் மனிதர்களின் உடலில் செல்லாமலே, வெறும் பீரின் சுவையே மூளையை தூண்டி டோபோமைன் என்கிற வேதிப்பொருளை சுரக்கச் செய்வதை ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர்.
அதிகமான டோபோமைனை மூளை வெளியேற்றியதன் விளைவாக, இவர்கள் அதிகமாக குடிக்கவேண்டும் என்கிற தூண்டுதலை பெறுவதாக கூறும் ஆய்வாளர்கள், இதுவரை, பீரில் இருக்கும் ஆல்கஹால் உள்ளே போனால்தான் மூளையானது டோபோமைனை அதிகம் வெளியேற்றும் என்று நம்பிவந்த மருத்துவர்களுக்கு, ஆல்கஹாலின் தூண்டுதல் இல்லாமலே, பீரின் சுவை கூட மூளையை தூண்டவல்லது என்பது தங்களுக்குப் புதிய தகவல் என்கிறார்கள்.
இந்த சோதனையின் முடிவுகள், வெறும் ஆல்கஹாலால் உண்டாகும் குடிப்பழக்கத்திற்கு மட்டுமல்லாமல் மற்றவகையான போதைப் பொருட்களுக்கும் பொருந்துமா என்பதையும் தாங்கள் ஆராயவிருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
மனிதர்கள் கண்களால் காணும் காட்சிகள், மூக்கால் நுகரும் வாசம், ஒருவரின் பழக்கவழக்கங்கள் என்று பல காரணிகளால் தூண்டப்பட்டு ஆல்கஹால் குடிக்கிறார்கள் என்பது ஏற்கெனவே மருத்துவர்களுக்கு தெரியும் என்றாலும், ஆல்கஹாலின் சுவை மட்டுமே கூட மூளையை தூண்டி ஒருவரின் குடிக்கும் வேட்கையை தூண்டுகிறது என்கிற இந்த ஆய்வின் முடிவுகள் முக்கியமானவை என்கிறார் நியூகேஸல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பீட்டர் ஆண்டர்சன்.
பீரின் சுவை மூளையைத் தூண்டி பீரில் இருக்கும் ஆல்கஹாலை குடிக்கத் தூண்டுகிறது என்கிற இந்த ஆய்வின் முடிவுகள், குடிப்பழக்கத்தையும், குடிகாரர்களையும் புரிந்துகொள்ள மருத்துவர்களுக்கு உதவுவதன்மூலம், குடிக்கு அடிமையாவோருக்கான மறுவாழ்வு சிகிச்சையை வடிவமைக்கவும் உதவும் என்பது மருத்துவ ஆய்வாளர்களின் நம்பிக்கை.
-BBC