பொதுத் தேர்தலில் அரசாங்க மாற்றம் நிகழ்ந்தால் இனப் பதற்றம் அல்லது கலவரங்கள் மூளக் கூடும் என்ற அறிக்கைகளை வெளியிட்டு ‘மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதை’ நிறுத்துமாறு முன்னாள் தேசிய போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) மூசா ஹசான் அரசியல்வாதிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் நேற்று கோலாலம்பூரில் சுமூகமான, அமைதியான அதிகார மாற்றம் என்னும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசினார்.
அண்மையில் அம்னோ மகளிர் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஆகியோர் விடுத்த அறிக்கைகளை குறிப்பிட்டு அவர் உரையாற்றினார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அம்னோ பொதுப் பேரவையில் உரையாற்றிய ஷாரிஸாட் 1969 மே 13
கலவரங்கள் மீண்டும் நிகழக்கூடும் என எச்சரித்தார். டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கேலாங்
பாத்தாவில் நடத்தும் தமது பிரச்சாரத்தில் சீனர்களுக்கும் மலாய்க்காரர்களுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த முயலுவார் என மகாதீர் அண்மையில் தமது வலைப்பதிவில் எழுதியிருந்தார்.
“மக்கள் தாங்கள் விரும்பும் அரசாங்கத்தைத் தேர்வு செய்யும் போது அமைதியாக நடந்து கொள்ள வேண்டும் என தலைவர்கள் என்ற முறையில் அவர்கள் மக்களுக்கு அறிவுரை கூற வேண்டும்,” என மூசா குறிப்பிட்டார்.
அவர், ஒய்வு பெற்ற பின்னர் தமது கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவித்து வருகிறார்.
“என்னைப் பொறுத்த வரை அந்த அறிக்கைகள் கிட்டத்தட்ட தேச நிந்தனையைப் (menghasut) போன்றவை,” என அவர் மேலும் சொன்னார்.
இன அல்லது சமய பதற்ற நிலையைத் தூண்டும் அறிக்கைகளை விடுக்க வேண்டாம் என போலீஸ் படை எல்லா அரசியல் கட்சிகளையும் எச்சரிக்க வேண்டும். அந்தக் கட்சிகளும் அந்த அறிவுரைக்கு செவிசாய்க்க வேண்டும்.
போலீஸ் படை குறை கூறப்பட்டது
அத்தகைய சம்பவங்கள் நிகழும் போது போலீஸ் படை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மூசா குறை கூறினார்.
“போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிக்கைகளை மட்டும் வெளியிடக் கூடாது. மக்கள் அவ்வாறு செய்யும் போது நீங்கள் மௌனமாக இருக்கக் கூடாது,” என அவர் வலியுறுத்தினார்.
மே 5 தேர்தலில் அரசாங்க மாற்றம் ஏற்பட்டால் அமலாக்க முறை முழுமையாக திருத்தியமைக்கப்பட வேண்டும் என்றும் மூசா கருதுகிறார்.
“என்னைப் பொறுத்த வரையில் லஞ்சத்தை ஒழிப்பது மிகவும் முக்கியமான விஷயமாகும். நடப்பு அரசாங்கமும் அமைச்சரும் செய்யும் அதே வழியில் நீங்களும் செய்ய விரும்பினால் எந்த அர்த்தமும் இல்லை. நீங்கள் மாற்ற விரும்பினால் முழுமையாக மாற்றுங்கள்.” என்றார் அவர்.
போலீஸ் படையில் ‘மாற்றம் அவசியம்’ என வலியுறுத்திய மூசா, நாட்டின் நடப்பு குற்றச் செயல் நிலைமை குறித்து ‘மிகவும் கவலைப்படுவதாக’ சொன்னார்.