ஹிண்ட்ராப் அமைப்பின் அரசியல் களமான மலேசிய மனித உரிமைக் கட்சி, ஒர் அரசியல் கட்சியாகத் தன்னைப் பதிவு செய்து கொள்வதற்கு மேற்கொண்ட முயற்சிகளை அரசாங்கம் நிராகரித்ததை, நீதித்துறை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரி மீண்டும் விண்ணப்பம் செய்து கொண்டுள்ளது.
இன்று காலை தாக்கல் செய்யப்பட்ட அந்த விண்ணப்பத்தில் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனை முதலாவது பிரதிவாதியாகவும் சங்கப் பதிவதிகாரியை இரண்டவது பிரதிவாதியாகவும் கூட்டரசுப் பிரதேச சங்கப் பதிவதிகாரியை மூன்றாவது பிரதிவாதியாகவும் அந்தக் கட்சியின் இடைக்கால தலைமைச் செயலாளர் பி உதயகுமார் குறிப்பிட்டுள்ளார்.
“அடுத்த பொதுத் தேர்தலில் மலேசிய மனித உரிமைக் கட்சி என்ற பதாதையின் கீழ் போட்டியிட முடியும் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்”, என அவர் கோலாலம்பூர் ஜாலான் டூத்தா நீதிமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.
அந்த விண்ணப்பம் மெஸர்ஸ் எம் மனோகரன் அண்ட் கோ என்னும் வழக்குரைஞர் நிறுவனம் வழியாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சங்கப் பதிவதிகாரி பதிவுக்கான தனது விண்ணப்பத்தை நிராகரித்தது மீது மனித உரிமை கட்சி செய்து கொண்ட முறையீட்டுக்கு உள்துறை அமைச்சு பதில் அளிக்கத் தவறியதைத் தொடர்ந்து இந்த விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
ஒர் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படுவதற்கு எச்ஆர்பி சமர்பித்த விண்ணப்பத்தை சங்கப் பதிவதிகாரி நிராகரித்த பின்னர் நீதித்துறை மறு ஆய்வுக்கான முதலாவது விண்ணப்பத்தை கடந்த ஏப்ரல் மாதம் உதயகுமார் சமர்பித்தார்.
“அமைப்பு விதிகள் 99 விழுக்காடு டிஏபி-யைப் போன்றது”
அந்த விண்ணப்பத்துக்கு பதில் அளிக்குமாறு உயர் நீதிமன்ற நீதிபதி ரோஹானி யூசோப், சங்கப் பதிவதிகாரிக்கு ஆணையிட்டார்.
எச்ஆர்பி விண்ணப்பம் முறையாக இல்லை என்பதாலும் அது தேவைப்படும் அமைப்பு விதிகளை கொண்டிருக்கவில்லை என்பதாலும் தாம் அதனை நிராகரித்ததாக சங்கப் பதிவதிகாரி தமது பதிலில் குறிப்பிட்டிருந்தார்.
எச்ஆர்பி அமைப்பு விதிகளில் 99 விழுக்காடு டிஏபி-யின் விதிகளைப் போன்றது. டிஏபி-யின் அமைப்பு விதிகள் முறையாக இல்லை என அவர்கள் சொல்ல வருகின்றனரா? பின்னர் ஏன் டிஏபி 45 ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது?” என உதயகுமார் வினவினார்.