‘தண்டா புத்ரா’ திரைப்படத்தை மாணவர்கள் கட்டாயமாக பார்க்க வேண்டும் என்பதற்காக இன்று காலை ஜோகூர் UiTM என்ற மாரா தொழில்நுட்பப் பல்கலைகழகத்தில் எல்லா விரிவுரைகளும் ரத்துச் செய்யப்பட வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
“பட்டப்படிப்பு மாணவர்களுக்குக் கட்டாய நிகழ்வு: தண்டா புத்ரா திரையிடப்படுவது” என்னும் தலைப்பைக் கொண்ட குறிப்பு நேற்று அந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர் துறை வெளியிட்டது.
விரிவுரைகளில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு மாணவர்களுக்கு அனுமதி கொடுக்கப்படுவதாகவும் அந்தக் குறிப்பு தெரிவித்தது.
“அந்த நிகழ்வு வெற்றிகரமாக அமைய விரிவுரையாளர்கள் மாணவர் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க முடியும்” என்றும் அந்தக் குறிப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகாமட்டில் உள்ள அந்த பல்கலைக்கழக வளாகத்தின் தேவான் ஸ்ரீ தெமங்கோங்கில் இன்று காலை 9 மணிக்கும் நண்பகல் 12 மணிக்கும் இடையில் அந்தத் திரைப்படத்தை காட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயிரம் மாணவர்கள் அதில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சிகாமட் டிஏபி தலைவர் பாங் ஹோக் லியோங் நேற்றிரவு பூலோ காசாப்பில் செராமா ஒன்றின் போது அந்த விவரங்களை வெளியிட்டார்.