நஜிப்பின் வலையில் ஹிண்ட்ராப் விழுந்தது; BN-க்கு வேதமூர்த்தி முழு ஆதரவு!

najibஎதிர்வரும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பிஎன் -னை மீண்டும் அதிகாரத்துக்குத் திரும்பச் செய்யுமாறு ஹிண்ட்ராப் என்ற இந்து உரிமை நடவடிக்கை குழு இந்தியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆளும் கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவித்த ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி, தங்களுடைய நலன்களை பிஎன் மட்டுமே பாதுகாக்க முடியும் என்ற சொல்லை எல்லா இந்தியர்களும் பரப்பத் தொடங்க வேண்டும் என்றும் சொன்னார்.

நான்கு முக்கியப் பகுதிகளைக் கொண்ட, இந்திய சமூகத்துக்கான பிஎன் ஹிண்ட்ராப் ஐந்து ஆண்டு கால
பெருந்திட்டத்தை அமலாக்குவதற்கான புரிந்துணர்வுப் பத்திரத்தில் பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் இன்று கையெழுத்திட்ட சடங்கில் வேதமூர்த்தி பேசினார். அந்த நிகழ்வு கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸில் நடைபெற்றது.

அந்த ஆவணம் நான்கு முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. இடம் பெயர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் நலன்களை மேம்படுத்துவது, நாடற்ற பிரச்னைகளைத் தீர்ப்பது, கல்வி, வர்த்தக வாய்ப்புக்களுக்கு இடமளிப்பது  ஆகியவை அவை ஆகும்.

என்றாலும் ஹிண்ட்ராப்- பிஎன் ஒப்பந்தத்தில் அந்த இயக்கத்தின் பெருந்திட்டத்தில் இடம் பெற்றிருந்த பல  முக்கியமான பகுதிகள் காணப்படவில்லை. அவற்றுள் குறிப்பாக இனவாதம், போலீஸ் தடுப்புக் காவல்  மரணங்கள் ஆகிய அம்சங்களுக்குத் தீர்வு காணப்படவில்லை.

hindraf_bnஅந்த ஒப்பந்தத்தின் கீழ் பிஎன் கூட்டரசு அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளுமானால் அந்த புரிந்துணர்வுப்  பத்திரத்தின் விவரங்களை அமலாக்க பிரதமர் அலுலவலகத்தில் புதிய பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.

மாற்றம் “இந்த நாட்டை வழி நடத்தும் முகங்களில்’ மட்டுமின்றி மலேசியர்களுடைய வாழ்க்கையில் குறிப்பாக  ஏழை இந்தியர்களுடைய வாழ்விலும் ஏற்பட வேண்டும் என வேதமூர்த்தி சொன்னார்.

நாட்டைவிட்டு தப்பி ஓடி லண்டனில் ஐந்தாண்டுகளாக வாழ்ந்த வேதமூர்த்தி கடந்த ஆண்டு இறுதியில் திடீரென நாடு திரும்பியிருந்தார்.

அவர் கைது செய்யப்படலாம் என பேசப்பட்டபோதும் அதுபோன்ற எந்தவொரு பிரச்னையும் இன்றி அவர் மலேசியாவிற்குள் அனுமதிக்கப்பட்டார்.

2007-இல் விசாரணை அற்ற ISA சட்டத்தில் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காகவும் இண்டாரப் போராட்டத்தை அனைத்துலக ரீதியில் எடுத்துச் செல்வதற்காகவும் வேதமூர்த்தி நாட்டைவிட்டு வெளியேறியதாக கூறப்பட்டபோதும், அவரின் இன்றைய செயற்பாடுகள் அவை அனைத்தும் சுயநலத்திற்கே என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

TAGS: