டிஏபி-யின் மத்திய நிர்வாகக் குழுவுக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பில் ஆர்ஒஎஸ் பேச்சு நடத்துகின்றது

dap

ஆடிஏபி கட்சியின் மத்திய நிர்வாகக் குழுவை நிறுத்தி வைக்கும் கடிதத்தை ஆர்ஒஎஸ் (சங்கப்பதிவதிகாரி) மீட்டுக்  கொள்ள வேண்டும் என டிஏபி விடுத்த வேண்டுகோள் மீது ஆர்ஒஎஸ் விவாதம் நடத்தி வருகின்றது.

“நாங்கள் பின்னர் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்,” என அதன் தலைமை இயக்குநர் அப்துல்  ரஹ்மான் ஒஸ்மான் கூறினார். ஆனால் அடுத்து ஆர்ஒஎஸ் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை அவர்  தமது குறுஞ்செய்தியில் குறிப்பிடவில்லை.

ஏப்ரல் 17ம் தேதியிடப்பட்ட அந்தக் கடிதத்தை இன்று பிற்பகல் மூன்று மனிக்குள் மீட்டுக் கொள்ளுமாறு
ஆர்ஒஎஸ்-ஸை டிஏபி கேட்டுக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது.

கடந்த ஆண்டு நிகழ்ந்த டிஏபி கட்சித் தேர்தலில் ‘தொழில்நுட்ப குளறுபடியால்’ சிறிய தவறு நிகழ்ந்து விட்டது
எனக் கூறப்பட்ட பின்னர் அனுப்பப்பட்ட கட்சித் தலைமைத்துவ அணியை தான் அங்கீகரிக்கவில்லை எனத்
தெரிவிக்கும் ஆர்ஒஎஸ் கடிதம் அதற்கு அனுப்பப்பட்டது.

அந்தக் கடிதத்தை ஆர்ஒஎஸ் மீட்டுக் கொள்ளா விட்டால் தீவகற்ப மலேசியாவில் பாஸ் சின்னத்திலும் சபா,
சரவாக்கில் பிகேஆர் சின்னத்திலும் போட்டியிடுவது பற்றி டிஏபி சிந்தித்து வருகின்றது.dap1

மத்திய நிர்வாகக் குழுவை ஆர்ஒஎஸ் அங்கீகரிக்காத போதும் டிஏபி தனது சின்னத்தில் போட்டியிட முடியும்  என தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் கூறியுள்ள போதும் டிஏபி அவ்வாறு  சிந்திக்கிறது.

இதனிடையே ஆர்ஒஎஸ் முடிவை எதிர்த்து டிஏபி எந்த விண்ணப்பத்தையும் சமர்பிக்கப் போவதில்லை என  அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் கர்பால் சிங் மலேசியாகினியிடம் கூறியுள்ளார்.

என்றாலும் ஆர்ஒஎஸ் அந்தக் கடிதத்தை மீட்டுக் கொள்கிறதா என்பது மீது அதன் முடிவுக்காக தாங்கள்
காத்திருப்பதாக அவர் சொன்னார்.

“நிர்ணயிக்கப்பட்டுள்ள பிற்பகல் மூன்று மணி காலக் கெடுவுக்கு நாங்கள் காத்திருப்போம்,” என்றார் கர்பால்.

 

TAGS: