டிஏபி கட்சியின் மத்திய நிர்வாகக் குழு அணியை நிறுத்தி வைக்கும் கடிதத்தை சங்கப்பதிவதிகாரி (ஆர்ஒஎஸ்) மீட்டுக் கொள்ளத் தவறியதைத் தொடர்ந்து பொதுத் தேர்தலில் டிஏபி தீவகற்ப மலேசியாவில் பாஸ் சின்னத்திலும் சபா, சரவாக்கில் பிகேஆர் சின்னத்திலும் போட்டியிடும் என டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் அறிவித்துள்ளார்.
புதன் கிழமை அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தை மீட்டுக் கொள்ளுமாறு ஆர்ஒஎஸ்-ஸுக்கு கட்சி வேண்டுகோள்
விடுத்தது. ஆனால் இன்று பிற்பகல் வரையில் அந்த விவகாரம் மீது ஆர்ஒஎஸ் மௌனமாக இருந்தது.
“அதனைத் தொடர்ந்து நேற்று முடிவு செய்யப்பட்டது போல நாங்கள் செயல்படுவோம். தீவகற்பத்தில் பாஸ்
சின்னத்திலும் சபா சரவாக்கில் பிகேஆர் சின்னத்திலும் நாங்கள் போட்டியிடுவோம்,” எனத் தொடர்பு
கொள்ளப்பட்ட போது கர்பால் தெரிவித்தார்.
டிஏபி வேட்பாளர்கள் தீவகற்பத்தில் பாஸ் சின்னத்தை பயன்படுத்துவர் என்பதை தொடர்பு கொள்ளப்பட்ட போது பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலியும் உறுதிப்படுத்தினார்.
“தீவகற்ப மலேசியாவில் போட்டியிடும் எல்லா டிஏபி வேட்பாளர்களுக்கான அங்கீகாரக் கடிதங்களிலும் நான் கையெழுத்திட்டுள்ளேன்,” என்றார் அவர்.
அது பாஸ் கட்சிக்கு வரலாற்றுப்பூர்வமான நிகழ்வு என வருணித்த முஸ்தாபா ஆர்ஒஎஸ் நடவடிக்கைகளினால் அது கட்டாயமாகியுள்ளது எனக் குறிப்பிட்டார்.
பிகேஆர் அங்கீகாரக் கடிதங்கள் கோலாலம்பூரிலிருந்து விமானம் மூலம் சரவாக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக
சரவாக் டிஏபி தலைவர் வோங் ஹோ லெங் சிபுவில் நிருபர்களிடம் கூறினார்.
பாஸ் அங்கீகாரக் கடிதங்களின் பிரதிகள் இன்று காலை வந்தததாகவும் கிராமப்புறங்களைச் சேர்ந்த
வேட்பாளர்களுக்கு அவை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார். பிகேஆர் கடிதங்கள் உரிய
நேரத்தில் கிடைக்காமல் போகலாம் என்ற அச்சம் காரணமாக அவ்வாறு செய்யப்பட்டது.
பினாங்கில் பிற்பகல் மூன்று மணி வாக்கில் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-கை நிருபர்கள்
சந்தித்தனர். கட்சித் தலைமைத்துவத்துடன் விவாதித்த பின்னரே தாம் கருத்துச் சொல்ல முடியும் என அவர்
கூறினார்.
டிஏபி கட்சியின் மத்திய நிர்வாகக் குழுவை நிறுத்தி வைக்கும் கடிதத்தை ஆர்ஒஎஸ் (சங்கப்பதிவதிகாரி) மீட்டுக் கொள்ள வேண்டும் என டிஏபி விடுத்த வேண்டுகோள் மீது விவாதம் நடத்துவதாக ஆர்ஒஎஸ் இன்று காலை கூறியது.
“நாங்கள் பின்னர் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்,” என அதன் தலைமை இயக்குநர் அப்துல்
ரஹ்மான் ஒஸ்மான் கூறினார். ஆனால் அடுத்து ஆர்ஒஎஸ் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை அவர்
குறிப்பிடவில்லை.
ஏப்ரல் 17ம் தேதியிடப்பட்ட அந்தக் கடிதத்தை இன்று பிற்பகல் மூன்று மனிக்குள் மீட்டுக் கொள்ளுமாறு
ஆர்ஒஎஸ்-ஸை டிஏபி கேட்டுக் கொண்டது.
கடந்த ஆண்டு நிகழ்ந்த டிஏபி கட்சித் தேர்தலில் ‘தொழில்நுட்ப குளறுபடியால்’ சிறிய தவறு நிகழ்ந்து விட்டது
எனக் கூறப்பட்ட பின்னர் அனுப்பப்பட்ட கட்சித் தலைமைத்துவ அணியை தான் அங்கீகரிக்கவில்லை எனத்
தெரிவிக்கும் ஆர்ஒஎஸ் கடிதம் அதற்கு அனுப்பப்பட்டது.
அந்தக் கடிதத்தை ஆர்ஒஎஸ் மீட்டுக் கொள்ளா விட்டால் தீவகற்ப மலேசியாவில் பாஸ் சின்னத்திலும் சபா, சரவாக்கில் பிகேஆர் சின்னத்திலும் போட்டியிடுவது பற்றி டிஏபி சிந்திப்பதாகவும் கூறப்பட்டது.
மத்திய நிர்வாகக் குழுவை ஆர்ஒஎஸ் அங்கீகரிக்காத போதும் டிஏபி தனது சின்னத்தில் போட்டியிட முடியும் என தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் கூறியுள்ள போதும் டிஏபி அவ்வாறு தெரிவித்தது.
இதனிடையே ஆர்ஒஎஸ் முடிவை எதிர்த்து டிஏபி எந்த விண்ணப்பத்தையும் சமர்பிக்கப் போவதில்லை என கர்பால் சிங் மலேசியாகினியிடம் கூறியுள்ளார்.