என்ஜிஒ: மதம் மாற்ற முயற்சிக்காக முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்

டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய வளாகத்தில் நிகழ்ந்த சர்ச்சைக்குரிய நன்றி தெரிவிக்கும் விருந்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என முஸ்லிம் அரசு சாரா அமைப்பு ஒன்று கோரியுள்ளது.

போதுமான ஆதாரம் இல்லாததால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்றாலும் அந்த நிகழ்வில் முஸ்லிம்களுடைய நம்பிக்கைகளையும் சமயத்தையும் கீழறுப்புச் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது என்பது சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா நேற்று வெளியிட்ட அறிக்கையிலிருந்து தெளிவாகத் தெரிவதே அதற்குக் காரணம் என இஸ்மா என அழைக்கப்படும் Ikatan Muslimin Malaysia கூறியது.

“கிறிஸ்துவமய மருட்டலுக்கு” எதிராக தமது கண்காணிப்பில் இஸ்லாத்தின் கௌரவம்  பாதுகாக்கப்படும் என சுல்தான் உறுதி அளித்துள்ளதை இஸ்மா வரவேற்பதாகவும் அது விடுத்த அறிக்கை குறிப்பிட்டது.

“அந்த நிகழ்வைத் தொடர்ந்து எழுந்த பிரச்னைகளினால் முஸ்லிம்கள் கவலை அடைந்துள்ளனர். அந்த மருட்டல் நிறுத்தப்படா விட்டால் அது கவலைக்குரிய விஷயமாகி விடும்”, என இஸ்மா தலைவர் அப்துல்லா ஸாய்க் அப்துல் ரஹ்மான் கூறினார்.

“மேன்மை தங்கிய சுல்தான் ஜயிஸ் நடவடிக்கைகளை செயல் முறை அடிப்படையில் கண்ணோட்டமிட்டிருப்பது உணர்ச்சிகரமான அந்தப் பிரச்னை மீது அவர் கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகிறது.”

டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய வளாகத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி ஹரப்பான் கம்யூனிட்டி என்ற சமூக நல அமைப்பு ஏற்பாடு செய்த நன்றி தெரிவிக்கும் விருந்தில் ஜயிஸ் என்ற சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை சோதனை நடத்தியது.

முஸ்லிம்கள் அந்த நிகழ்வில் கிறிஸ்துவ சமயத்துக்கு மாற்றப்படுவதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து  புலனாய்வை மேற்கொண்டதாக ஜயிஸ் கூறியது. அந்த விருந்தில் கலந்து கொண்ட 12 முஸ்லிம்களையும் அது விசாரணை செய்தது.

TAGS: