13வது பொதுத் தேர்தலில் பல இடங்களில் பல்முனைப் போட்டி

13 geவரப்போகும் 13வது பொதுத் தேர்தலில் பல்முனை போட்டிக்குப் பஞ்சமிருக்காது எனத் தெரிகிறது. பல இடங்களில்  நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் போட்டிபோட பல வேட்பாளர்கள் வரிந்துகட்டிக்கொண்டு இறங்கியிருக்கிறார்கள்.

பல்முனைப் போட்டி நிகழும் சில இடங்களைப் பார்ப்போம்:

ஜோகூர்

கேலாங் பாத்தா(நாடாளுமன்ற) இருபெரும் அரசியல் ஜாம்பவான்களான ஜோகூர் மந்திரி புசார் அப்துல் கனி ஒத்மானும் டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங்கும் களமிறங்கும் அத்தொகுதியில் ராஜேந்திரன் ராமசாமி,55, என்னும் சுயேச்சை வேட்பாளர் ஒருவரும் போட்டியில் குதித்துள்ளார்.

கூலாய்- மும்முனை போட்டி காணும் இன்னொரு நாடாளுமன்றத் தொகுதியாகும். அங்கு தியோ நை சிங் (டிஏபி), நடப்பு செர்டாங் எம்பி தே சின் ஹெய்ன் (மசீச) ஆகியோருடன் கே. சுரேந்திரன் என்னும் சுயேச்சை வேட்பாளரும் போட்டியிடுகிறார்.

பெங்கேராங்- மும்முனை போட்டி. அஸ்லினா ஒத்மான் (அம்னோ), இந்தான் தெங்கு அப்துல் ஹமிட் (பிகேஆர்), முகம்மட் அஸமான் ஜோகாரி (சுயேச்சை) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

சிலாங்கூர்

காஜாங் (சட்டமன்றம்) அதிகமான வேட்பாளர்கள் களமிறங்கும் இடமாகும். அறுவர் போட்டியிடுகின்றனர்-  லீ பான் செங் (மசீச), லீ சின் சே (பிகேஆர்), முகம்மட் இஸ்மாயில் (பெர்ஜாசா) ஆகியோருடன் மூன்று சுயேச்சைகள் (ஒங் யான் பூ, இவான் ஜெப்ரி அப்துல் மஜிட், முகம்மட் காலிட் காசிம்)

பேராக்

கோலா கங்சார்  நாடாளுமன்றத் தொகுதியில் யாரும் எதிர்பாராத வகையில் அம்னோ மகளிர் துணைத் தலைவர் கமிலியா இப்ராகிம்,  சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்குகிறார். அம்னோவிலிருந்து விலகி விட்டதாகவும் அவர் அறிவித்துள்ளார். அவர், கலில் இதாம் லிம் (பாஸ்), முகம்மட் கைரில் அனுவார் வான் முகம்மட் (அம்னோ) ஆகியோரை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

சுங்கை சிப்புட்டில் அதன் நடப்பு எம்பி டாக்டர் எம். ஜெயகுமாருக்கும் (பிஎஸ்எம்) எஸ்.கே. தேவமணிக்கும் (மஇகா) நேரடி போட்டி என்று நினைத்துக்கொண்டிருந்தால் இப்போது இன்சான் தானா ஆயர் (கித்தா) கட்சியிலிருந்து எஸ்.பி. நாகலிங்கம் மூன்றாவது வேட்பாளராக வந்துள்ளார்.

பினாங்கு

பெர்மாத்தாங் பாவ் (நாடாளுமன்றம்) பக்காத்தான் ரக்யாட் தலைவர் அன்வார் இப்ராகிம் (பிகேஆர்) போட்டியிடும் இடம். அங்கு அவரை மஸ்லான் இஸ்மாயில் (அம்னோ), அப்துல்லா ஜவாவி சம்சுதின் (சுயேச்சை) ஆகிய இருவர் எதிர்க்கின்றனர்.

தாசெக் குளுகோர் (நாடாளுமன்றம்) இங்கு  விவசாயம், .விவசாயம் சார்ந்த தொழில்களுக்கான முன்னாள் துணை அமைச்சரும் நடப்பு எம்பியுமான முகம்மட் ஷரிப் ஒமார் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக ஷாபுடின் யாக்யாவும் (அம்னோ), அப்துல் ரஹ்மான் மைடினும் (பாஸ்) களமிறங்குகிறார்கள்.

கெடா

பாடாங் செராய் (நாடாளுமன்றம்) ஐவர் போட்டியில் குதித்துள்ள  களம். அதன் நடப்பு எம்பி( பிகேஆரிலிருந்து விலகி சுயேச்சை எம்பி ஆன) என். கோபாலகிருஷ்ணனுடன் என். சுரேந்திரன் (பிகேஆர்), ஹெங் சியாய் கை(மசீச), ஹமிடி அபு ஹசன் (பெர்ஜாசா), ஒத்மான் வாவி (சுயேச்சை) ஆகியோர் மோதுகின்றனர்.

அலோர் ஸ்டார் இங்கு நான்குமுனை போட்டி. நடப்பு எம்பி சோர் சீ ஹுவாங் (மசீச), கூய் ஹிஸ்யா-லியோங் (பிகேஆர்), அப்துல் பிசோல் முகம்மட் இசா (பெர்ஜாசா), ஜவஹர் ராஜா பின் அப்துல் வாஹிட் (பெர்சாமா) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கோலாலம்பூர்

லெம்பா பந்தாயில் மும்முனை போட்டி. நடப்பு பிகேஆர் எம்பி நுருல் இஸ்ஸா அன்வாரை எதிர்த்து ராஜா நொங் சிக் சைனல் அபிடின் (அம்னோ), பங்சார் வணிகரான ரோஸ்லி பாபா(சுயேச்சை) ஆகியோர் களமிறங்குவர்.

பண்டார் துன் அப்துல் ரசாக் (நாடாளுமன்றம்) சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம்,  டான் கொக் எங் (மசீச) ஆகியோருடன் இரண்டு சுயேச்சைகளும் அங்கு களம் காண்கிறார்கள்.

கெப்போங்கில் மும்முனை போட்டி டான் செங் கியாவ் (டிஏபி), ஏ.சந்திரகுமணன் (பிபிபி) ஆகியோருடன் சுயேச்சை வேட்பாளர் ஈ போ பிங்கும் போட்டியில் குதித்துள்ளார்.

பத்து–  ஐவர் மோதும்  நாடாளுமன்றத் தொகுதி இது. சுவா தியான் சாங் (பிகேஆர்), டொமினிக் லாவ் (கெராக்கான்), ஹஷிம் அப்துல் கரிம் (பெர்ஜாசா), இரண்டு சுயேச்சைகள்- அட்டான் ஜாசின், நஸரியா அப்பாஸ் ஆகியோர் அங்கு போட்டி இடுகின்றனர்.

பகாங்

கேமரன் மலையில் ஐந்து-முனை போட்டி. மஇகா தலைவர் ஜி.பழனிவேலை எதிர்த்து டிஏபியின் எம்.மனோகரன், கே. கிஷோ குமார், டி.அழகு (இருவரும் சுயேச்சைகள்), பெர்ஜாசா\வின் முகம்மட் ஷொக்ரி மஹ்மூட் ஆகியோர் மோதுகின்றனர்.

TAGS: