கோலா கங்சார் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கும் அம்னோவிலிருந்து கட்சி நீக்கம் செய்யப்பட்ட அதன் மகளிர் துணைத் தலைவர் கமிலியா இப்ராகிமுக்கு தன்னுடன் சேர்ந்துகொள்ளுமாறு பிகேஆர் அழைப்பு விடுத்துள்ளது.
கமிலியாவுக்கு அந்த அழைப்பை விடுத்த பிகேஆர் துணைத் தலைவர் ரோட்சியா இஸ்மாயில் அந்த முன்னாள் அம்னோ தலைவி வென்றாலும் தோற்றாலும் பிகேஆர் கதவுகள் அவருக்குத் திறந்தே இருக்கும் என்றார்.
மகளிர் முன்னேற்றத்துக்குப் போராடும் தகுதியுள்ளவர் கமிலியா என்று பாராட்டிய ரோட்சியா (இடம்), அதற்கு மாற்றரசுக்கட்சியில் சேர்வதன்வழி அவருக்கு ஒரு வலுவான தளம் கிடைக்கும் என்றார்.
“எங்களுடையதுபோன்ற கொள்கையுடைவர்கள் எங்களுடன் சேர்வதை விரும்புகிறோம்”, என்றாரவர்.
ஒரு சுயேச்சையாக போட்டியிட கமிலியா செய்த முடிவு அம்னோ விழுந்த பலத்த அடி என்றவர் வருணித்தார்.
ஒரு வழக்குரைஞரான கமிலியா, கோலால் கங்சாரில் பிஎன்னின் வான் முகம்மட் கைரில் அனுவார் வான் அஹ்மட், பாஸ் கட்சியின் கலில் இதாம் லிம் ஆகியோருடன் ஒரு மும்முனை போட்டியில் இறங்கியுள்ளார். கோலா கங்சார் எம்பியாக ஆறு தவணைகள் இருந்துள்ள ரபீடா அசீஸ் இந்தத் தடவை போட்டியிடவில்லை.
சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த கமிலியா, அம்னோவில் வகித்த எல்லாப் பதவிகளிலிருந்தும் விலகிக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.