மெர்தேகா தினத்தன்று அரசாங்க விமானம் ஒன்றில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஆஸ்திரேலியாவுக்கு மேற்கொண்ட பயணம் அவரது தனிப்பட்ட முறையிலானது என இன்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
“ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 3 வரையிலான அந்தப் பயணம் அவரது தனிப்பட்ட பயணம்”, என வெளியுறவு அமைச்சு, பிகேஆர் பத்து உறுப்பினர் தியான் சுவாவுக்கு அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் கூறியுள்ளது.
என்றாலும் நஜிப் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அங்கு வசிக்கும் மலேசியக் குடிமக்களையும் கல்வி பயிலும் மலேசிய மாணவர்களையும் சந்தித்தாகவும் அந்த அமைச்சு தெரிவித்தது. அந்தச் சந்திப்புக்களுக்கு அங்குள்ள மலேசிய துணைத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.
“பெர்த்தில் உள்ள முஸ்லிம் அமைப்பு ஒன்றின் பேராளர்களுடனும் பிரதமர் கலந்துரையாடினார்.”
பிரதமர் பயன்படுத்திய ஏர்பஸ் ஏ319 ரக விமானம் 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதியிலிருந்து ஷாரிக்காட் பெனர்பாங்கான் மலேசியா பெர்ஹாட்டிடமிருந்து குத்தகைக்கு ( LEASE ) எடுக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
அகோங், பிரதமர், துணைப் பிரதமர் உட்பட மிக முக்கிய பெருமக்கள் பயணம் செய்வதற்காக அந்த விமானம் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ், பிகேஆர் லெம்பா பந்தாய் உறுப்பினர் நுருல் இஸ்ஸா அன்வாருக்கு வழங்கிய எழுத்துப்பூர்வமான பதிலில் கூறியிருந்தார்.
ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் 9.1 மில்லியன் ரிங்கிட்டை வாடகையாக அரசாங்கம் செலுத்தியுள்ளதாகவும் நஸ்ரி தகவல் வெளியிட்டார். உள்நாட்டிலும் வெளிநாட்டுக்கும் மொத்தம் 155 பயணங்கள் அந்த கால இடைவெளியில் மேற்கொள்ளப்பட்டன.
அந்தச் செலவில் ஜெட் எரிபொருள், நிறுத்துவதற்கான கட்டணம், கையாளுவதற்கான கட்டணம், ஊழியர்களுக்கான போக்குவரத்துச் செலவுகள் ஆகியவையும் அடங்கும் என்றும் நஸ்ரி தெரிவித்தார்.