மலாக்காவில் மாநிலச் சட்டமன்றதுக்காக கோட்டா லக்ஸ்மணா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த டிஏபி-இன் சிம் தொங் ஹிம், மனு செய்த 48-மணி நேரத்துக்குப் பின்னர் தாம் போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
இன்று மலாக்கா கட்சித் தலைமையகத்தில் டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங்குடன் செய்தியாளர் கூட்டமொன்றில் கலந்துகொண்ட சிம், கட்சி தேர்ந்தெடுத்த வேட்பாளரான லாய் குவென் பான்னுக்கு எதிராக தாம் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவது தவறு என்பதை ஒப்புக்கொண்டார்.
தம் செயலுக்காக கட்சி கோரியவாறு, மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். அவரும், சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த இன்னொருவரான தெராதாய் பிரதிநிதி ஜெனிஸ் லீ-யும் மன்னிப்பு கேட்காவிட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சி எச்சரித்திருந்தது.