சாபாவில் பல இடங்களில் பல்முனை போட்டிகளை எதிர்நோக்கினாலும் குறைந்தது 11 நாடாளுமன்றத் தொகுதிகளையாவது கைப்பற்ற முடியும் என்று சாபா பக்காத்தான் திடமாக நம்புகிறது.
செய்தியாளர்களிடம் பேசிய சாபா டிஏபி தலைவர் ஜிம்மி வோங், இப்போது கைவசமுள்ள கோட்டா கினாபாலு, துவாரான், பியுஃபோர்ட் ஆகியவற்றைத் தக்கவைத்துக்கொள்வதில் பிரச்னை இருக்காது என்று நம்புகிறார்.
கோட்டா கினாபாலுவை டிஏபி-இன் ஹியு கிங் சியு 2008-இல் வென்றார். துவாரான், பியுஃபோர்ட் ஆகியவற்றை முறையே வில்வ்ரெட் பும்புரிங்கும் லாஜிமும் வென்றனர்.
பும்ரிங்கும் லாஜிமும் பிஎன் வேட்பாளர்களாக அவற்றை வென்றனர். இப்போது அவர்கள் பக்காத்தானுடன் இணைந்துள்ளனர்.
பக்காத்தான் குறிவைக்கும் மற்ற எட்டு தொகுதிகள் வருமாறு: சண்டாகான், புடாடான், சிபாங்கார், தாவாவ், கோட்டா மருடு, தெனோம், கெனிங்காவ், பெனாம்பாங் ஆகியவையாகும்.
நாடாளுமன்றத்தில் ஓரு சிறிய பெரும்பான்மை பெற்றாவது ஆட்சி அமைப்பது பக்காத்தானின் நோக்கமாகும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இன்று கோட்டா கினாபாலுவில் தெரிவித்தார். அதற்காக சாபா, சரவாக், ஜோகூர் ஆகிய மூன்றிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் இப்போதிருப்பதைக் காட்டிலும் குறைந்தது பத்து நாடாளுமன்றத் தொகுதிகளைக் கூடுதலாகப் பெறுவது அதன் திட்டமாகும்.
“குறைந்தது 15 நாடாளுமன்றத் தொகுதிகளை வெல்லலாம் என்று நினைக்கிறேன். அதற்கான வாய்ப்பு இருக்கிறது”, என்று வொங் கோட்டா கினாபாலுவில் உள்ள டிஏபி தலைமையகத்தில் கூறினார்.
எஸ்ஏபிபி, ஸ்டார் ஆகியவையும் வேட்பாளர்களைக் களமிறக்குவதால் பல இடங்களில் பல்முனை போட்டி நிலவினாலும் அதனால் பாதிப்பதில்லை என்று கூறிய அவர், “போட்டி உண்மையில் பக்காத்தானுக்கும் பிஎன்-னுக்கும்தான்”, என்றார்.