அன்வார்: ஒர் இந்தியர் கொடுத்த முத்தம் சுல் நூர்டினைக் காப்பாற்றாது

zulkfliஒரு முத்தம் வெறும் முத்தம் தான். பிஎன் ஆதரவாளரான ஒர் இந்தியர் கொடுத்த முத்தம் பிஎன் ஷா அலாம் நாடளுமன்றத் தொகுதி வேட்பாளர் சுல்கிப்லி நூர்டினைக் காப்பாற்றப் போதுமானது அல்ல என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.

“முழுக்க முழுக்க இன வெறி, மற்ற சமயங்களை இழிவுபடுத்துவது போன்ற பண்புகளைக் கொண்ட இது போன்ற அரசியல்வாதிகள் நம்மிடையே இருப்பது மிக அரிதாகும்.”

“ஆனால் அதில் என்ன ரகசியம் ? பிஎன் தலைவர் முகமட் நஜிப் அப்துல் ரசாக் அவரை ஏன் நிறுத்த வேண்டும் ? மனதைக் குழப்புகின்றது ?,” என பெட்டாலிங் ஜெயாவில் நிருபர்களிடம் அன்வார் கூறினார்.

மலாய் உரிமை போராட்ட அமைப்பான பெர்க்காசா உதவித் தலைவரான சுல்கிப்லி மீது இந்தியர்கள் “முழு வெறுப்படைந்துள்ளனர்” எனக் குறிப்பிட்ட அன்வார் வெறும் முத்தத்தினால் அதனைப் போக்க முடியாது என்றார்.    கடந்த வார இறுதியில் 13வது பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் நியமன நாளன்று சுல்கிப்லியின் கன்னத்தில் பிஎன் ஆதரவாளரான இந்தியர் ஒருவர் முத்தமிட்டது படம் பிடிக்கப்பட்டது.

அந்த முத்தம் தமது தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்ட ‘திருந்திய’ வேட்பாளரை ஏற்றுக் கொண்டு விட்டனர் என்பதைக் காட்டுவதாக நேற்றிரவு செராமா நிகழ்வு ஒன்றில் நஜிப் கூறியிருந்தார்.

இனிமேல் ஷா அலாமில் இந்தியர்களுக்காக கோவில்களையும் பள்ளிக்கூடங்களையும் கட்டுவதின் மூலம்  இந்தியர்களுடைய விவகாரங்களுக்கு தோள் கொடுப்பார் என்றும் நஜிப் சொன்னார்.

மிகவும் தீவிரமான அறிக்கைகளை வெளியிடுவதில் பேர் போன சுல்கிப்லியை சிலர் இனவாதி என முத்திரை குத்தியுள்ளனர். இந்துக்களையும் அவர்களது சமயத்தையும் அவர் இழிவுபடுத்துவது கேமிராவில் பதிவு  செய்யப்பட்டது. அதற்காக அவர் மன்னிப்பும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

TAGS: