டமன்சாரா நெருக்கடிக்கு ‘சித்தாந்த வேறுபாடுகளே’ காரணம்

1 anwarகோட்டா டமன்சாராவில் வேட்பாளர் நியமனத்தில் பிஎஸ்எம்-மும் பாஸ் கட்சியும் முட்டி மோதிக்கொண்டிருப்பதற்கு இரண்டு கட்சிகளினதும் “சித்தாந்த வேறுபாடுகள்தாம்” காரணம் என்கிறார் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்.

“பாஸுக்கும் பிஎஸ்எம்முக்குமிடையில் சித்தாந்த வேறுபாடுகள் இருப்பதால் அது பற்றி விவாதிக்க மேலும் சில நாள்கள் தேவைப்படும்”, என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

1 anwar1அவ்விவகாரத்துக்கு விரைவில் தீர்வுகாண முடியும் என்று நம்பிக்கை தெரிவித்த அன்வார் (வலம்), பிஎஸ்எம் செமிஞி, ஜெலாபாங் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு உரிமை கொண்டாடுவதை விட்டுக் கொடுக்க வேண்டும் என்றார்.

அந்த சோசலிசக் கட்சிக்கு ஏற்கனவே, சுங்கை சிப்புட்டிலும் கோட்டா டமன்சாராவிலும் முறையே ஒரு நாடாளுமன்றத் தொகுதியையும் சட்டமன்றத் தொகுதியையும் பிகேஆர் கொடுத்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ். அருள்செல்வன் செமிஞியிலும் துணைத் தலைவர் எம். சரஸ்வதி ஜெலாபாங்கிலும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இதனால், பிஎஸ்எம், பக்காத்தான், பிஎன் ஆகியவற்றுகிடையில் பல்முனைப் போட்டி உருவாகும்.

பிகேஆர் இரண்டு தொகுதிகளை பிஎஸ்எம்முக்கு கொடுத்ததை “பிகேஆரின் பெரிய தியாகம்” என அன்வார் வருணித்தார்.

பிஎஸ்எம் அதன் வேட்பாளரை- இப்போது அத்தொகுதியை வைத்திருக்கும் டாக்டர் முகம்மட் நாசிரை- கோட்டா டமன்சாராவில் நியமனம் செய்ய அனுமதிப்பது என பக்காத்தான் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்தது.

ஆனால், வேட்பாளர் நியமன நாளன்று பாஸ் கட்சியின் ரிட்சுவான் இஸ்மாயிலும் அத்தொகுதியில் போட்டியிட தம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

2008-இல் அத்தொகுதியில் பிகேஆர் சின்னத்தில் போட்டிபோட்ட முகம்மட் நாசிர் 1,075 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

TAGS: