‘புத்ராஜெயாவிலிருந்து பிஎன்-னை துரத்துவதற்கு ஒரு 58 பில்லியன் ரிங்கிட்தான் காரணம்’

najibஉங்கள் கருத்து : ‘அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள மக்கள் வரிப்பணத்தை பயன்படுத்தும் இந்த கிறுக்குத்தனம் நிற்க  வேண்டும், வாக்காளர்கள் மட்டுமே நஜிப்பை நிறுத்த முடியும்’

ஆதரவை வாங்குவது- நஜிப்பின் 13வது பொதுத் தேர்தல் ‘வர்த்தக மயம்’

கிம் குவேக்: தேர்தலை இலக்காகக் கொண்டு நஜிப் செய்து வரும் மாபெரும் செலவுகளை ஒருவர் முதன்  முறையாக கணக்கெடுத்துள்ளார். உண்மையில் உலகில் இது நீண்ட கால தேர்தல் பிரச்சாரமாகும்.

அந்தச் செலவுகளைத் தொகுத்த பிரிட்கெட் வெல்ஷ்-க்கு மிக்க நன்றி. ஆம் பிஎன் தலைவர் நஜிப் ரசாக் இந்த
நாட்டை உருமாற்றியுள்ளார் என்பது உண்மையே-அதாவது மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவில்லை  மாறாக நமது ஜனநாயக ஆளுமை மதிப்பைக் குறைத்துள்ளார். நமது பொருளாதார பிரச்னைகளுக்கான அடிப்படைக் காரணங்களை சமாளிப்பதற்குப் பதில் வாக்காளர்களைக் கவரும் நோக்கத்துடன் அவர் குறுகிய கால நிவாரணங்களை அவ்வப்போது கொடுப்பதற்கு நமது மாபெரும் வளங்களை சூறையாடி வருகிறார்.

அதன் விளைவாக நாட்டின் கடன் நிலைமை மோசமடைந்து அபாய கட்டத்தை எட்டியுள்ளது மட்டுமின்றி நமது  அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் நமது பொருளாதாரமும் மோசமடைந்துள்ளது. பிஎன் மீண்டும்
ஆட்சிக்கு திரும்பினால் என்ன நடக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே பயமாக உள்ளது.

அடையாளம் இல்லாதவன்_4031 : விருப்பம் போல் செய்யப்படும் அடுத்தடுத்த செலவுகள் பற்றிய தகவல்களுக்கு நன்றி. நம் நாடு நொடித்துப் போவதற்கு முன்பு நஜிப் எவ்வளவு பணத்தைச் செலவு செய்யப் போகிறார் ?  அல்லது நாடு நொடித்து போகும் கிரீஸ் பாதையில் சென்று கொண்டிருக்கிறதா ?

அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள மக்கள் வரிப்பணத்தை பயன்படுத்தும் இந்த கிறுக்குத்தனம் நிற்க வேண்டும், வாக்காளர்கள் மட்டுமே நஜிப்பை நிறுத்த முடியும்.

ஸ்விபெண்டர் : சுருக்கமாகச் சொன்னால் விசுவாசத்தையும் மரியாதையையும் விலைக்கு வாங்க முடியாது என்பதே  நஜிப்புக்குப் புரியவில்லை. நல்ல காரியங்களும் நல்ல வார்த்தைகளுமே அவற்றைக் கொண்டு வரும். உதவி  நடவடிக்கைகள் மிகவும் குறுகிய காலத்துக்கே நன்மை அளிக்கும்.

அம்னோ/பிஎன் அரசாங்கம் நம்மையும் நமது பிள்ளைகளையும் எதிர்கால மலேசியத் தலைமுறையினரையும் கொள்ளையடிப்பது தெரிகிறது. நாம் எல்லையில்லாத இந்த உலகில் நல்ல வாழ்வை பெறுவதற்கான  வாய்ப்பையும் அம்னோ/பிஎன் பறிக்கிறது.

எஸ்கே : பிஎன் தேர்தலில் வெற்றி பெற்றால் 200 ரிங்கிட் கொடுப்பதற்காக ஒரே மலேசியா குழு தங்கள் பெயர்கள், அடையாளக் கார்டு எண்கள், தொலைபேசி எண்கள் ஆகியவற்றைத் தருமாறு பொது மக்களை வெளிப்படையாக வற்புறுத்துவதை நான் நேரில் பார்த்துள்ளேன். தேர்தலில் வெற்றி பெற என்ன வெட்கக் கேடான வழி !

கேஎஸ்என் : ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரக்கணக்கான பிஎன் கொடிகளும் நஜிப் படங்களும் மற்ற தேர்தல் சுவரொட்டிகளும் ஒர் அடி இடைவெளியில் கட்டப்பட்டிருப்பதைக் காணலாம். அவற்றை தயாரிக்கவும் தொங்கவிடவும் பிஎன் பில்லியன் கணக்கில் இல்லை என்றாலும் மில்லியன் கணக்கில் செலவு செய்திருக்க வேண்டும்.

அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்பதை கண்டு பிடிப்பதில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஏன் அக்கறை காட்டவில்லை ? அது யாருடைய பணமாக இருந்தாலும் வெறும் விரயமாகும். விவேகமில்லாத அந்தச் செலவுகள் வாக்காளர்களை நிச்சயம் கவரப் போவதில்லை.

அந்த மிதமிஞ்சிய செலவுகள் அச்சத்தையே காட்டுகின்றது. மே 5ம் தேதி பிஎன்-னை உண்மையான அதிர்ச்சி தாக்கப் போகிறது.

சந்திரன் சுகுமாரன் : இதனை ‘அனைத்து ஊழலுக்கும் அன்னை’ எனச் சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும் ?

சின்ன அரக்கன் : பணம் வலிமையான ஆயுதம் என்பது உண்மை தான். பணம் எதனையும் செய்யும் என்பது
அரசியல்வாதிகளுக்கு நன்கு தெரியும். அதே வேளையில் அது அவர்களுடைய அரசியல் வாழ்க்கையையும்
எதிர்காலத்தையும் அழித்து விடும்.

மக்களிடமிருந்து ஆதரவை ‘விலைக்கு வாங்கும்’ எந்த அரசாங்கமும் பண பலத்தின் மூலம் மக்கள் நம்பிக்கையைப் பெற்று விட்டதாக எண்ணும் எந்த அரசாங்கமும் காலப் போக்கில் பலவீனமடைந்து விடும். ஏனெனில் அதற்கு தனது சொந்தத் தகுதியில் ஆற்றலில் நம்பிக்கை இருக்காது.

2009ம் ஆண்டு தொடக்கம் மக்களிடம் செல்வாக்கை நிலை நிறுத்த நஜிப்பின் கீழ் பிஎன் அரசாங்கம் பெரிய பெரிய செலவுகளைச் செய்து வருகின்றது. அதன் ‘பிரச்சார யுத்திகளுக்கு’ பில்லியன் கணக்கான ரிங்கிட் செலவாகிறது. அது நாட்டின் கருவூலத்தைப் பாதிக்கிறது.

பிஎன் தனது பண பலத்தின் மூலம் வெற்றி பெற்று நஜிப் மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டால் இது வரை இல்லாத ‘மிகவும் விலை மதிப்புள்ள’ பிரதமராக அவர் இருப்பார்.

கண்டர்பிரிகியான் : மலேசிய வாக்காளர்களைக் கவர நஜிப் ‘I Love BN’ என்ற சுலோகத்திற்குப் பதில் ‘I Love PM’ என்னும் சுலோகத்தைப் பயன்படுத்துகிறார்.

அது பல பிஎன் உயர் தலைவர்களை உறுத்தியுள்ளது. பிஎன் பிரச்சாரமாக இல்லாமல் நஜிப்பின் சிறப்பு விளக்கக் கண்காட்சியாக அவர்கள் அதனைப் பார்க்கின்றனர். பல பிஎன் ஆதரவாளர்களையும் அது ஆத்திரமடையச் செய்துள்ளது.

பச்சை விளக்கு காட்டப்பட்டவுடன் சீசரை குத்துவதற்குத் தங்கள் கத்திகளை பல பிஎன் உயர் தலைவர்கள் கூர்மையாக்கி வருவதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.

TAGS: