செய்தியாளர்கள்மீது சீறிப் பாய்ந்தார் சொய் லெக்

1 soi lekநேற்றிரவு, ஜோகூர் ஜெயாவில் ஒரு விருந்தில் உரையாற்றிய  மசீச தலைவர் டாக்டர் சொய் லெக்-கை அதன்பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகள் சினமடைய வைத்தன. அதன் விளைவாக அவர் செய்தியாளர்கள்மீது சீறி விழுந்தார்.

அவ்விருந்தில் உரையாற்றிய சொய் லெக், அரசாங்கத்தை மாற்றுவது என்பது ஆடைமாற்றுவது போன்றதல்ல என்பதை விருந்துக்கு வந்திருந்த 6,000 பேருக்கு நினைவுறுத்தினார்.

“பணிப்பெண்களை மாற்றுவதற்குக்கூட நன்றாக யோசிக்க வேண்டியுள்ளது. எனவே, அரசாங்கத்தை மாற்றுவதைச் சாதாரண  விசயமாக நினைக்கக்கூடாது”, என்றவர் குரலை  ஏற்றி இறக்கி வலியுறுத்தினார்.

1 soi lek 1சரி, இவ்வளவு மெனக்கெட்டுப் பேசுகிறாரே, அவரது பேச்சைக் கூட்டத்தினர் கவனித்தார்களா என்றால் அவர்களின் கவனமெல்லாம் மேசையில் இருந்த உணவின்மீதுதான் இருந்தது.

சுவாவே அவர்களின் கவனத்தை வலிந்து தம் பக்கம் திருப்ப வேண்டியதாயிற்று.

ஒரு இடத்தில் நஜிப் அப்துல் ரசாக்கின் தலைமையில் பிஎன் அரசு சிறப்பாக சேவையாற்றியுள்ளது என்று குறிப்பிட்டு அதைக் கூட்டத்தினர் பாராட்டுவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால், கூட்டம் அசையவில்லை.

“ஏன், இவ்வளவு அமைதியாக இருக்கிறீர்கள்?”, என்றவர் வாய்விட்டுக் கேட்ட பின்னர், கூட்டத்தில் சிலர் கரவொலி எழுப்பிப் பாராட்டு தெரிவித்தனர்.

பின்னர் நடந்த செய்தியாளர் கூட்டத்தில், விருந்தில் அவரது பேச்சுக்கு நல்ல வரவேற்பு இல்லாதது பற்றிச் செய்தியாளர்கள் குறிப்பிட்டதும் சொய் லெக் சினமடைந்தார்.

1 soi lek 2“ஆமாம், எழுதுங்கள்… எல்லாரும் என்னைப் பார்த்து கூச்சலிட்டதாக எழுதுங்கள். சீனர்கள் சாப்பிடும்போது பேசினால் அவர்கள் நீங்கள் பேசுவதையா கேட்பார்கள்?

“நாங்கள் ஆரவாரமாக நடந்துகொள்வதில்லை. சாப்பிடும்போது நீங்கள் பேசினால், அதை அவர்கள் கேட்கத்தான் செய்வார்கள். அவர்கள் (ஆதரவைப் புலப்படுத்த) எழுந்து நின்று குதிக்க வேண்டும் என்பதில்லை.

“மவுனமாகவுள்ள பெரும்பான்மை பற்றி நீங்கள் கேள்விப்பட்டதில்லையா? நிறைய பேர் பல்வேறு விவகாரங்களில் மவுனமாகத்தான் இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் அவற்றை ஆதரிக்கவில்லை என்பது பொருளல்ல”, என்று பொறிந்து தள்ளினார்.

வந்திருந்த கூட்டம் திருப்தி அளிக்கிறதா என்று வினவியதற்கு, “எனக்குத் தெரியவில்லை. நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். நான் என்ன சொன்னாலும் அதற்கு முரணாகத்தானே எழுதப் போகிறீர்கள்.

“அதனால் இதற்கு நான் பதில் சொல்லப்போவதில்லை. ஒவ்வொரு நாளும் ஒரே விவகாரத்தைத்தானே புரட்டிப் புரட்டிப் போடுகிறீர்கள். அது உருப்படியான செய்தியாகவும் இருக்காது”.

 

TAGS: