37 ஆண்டுகளுக்கு லுமுட் கடற்படைத் தளத்தை தமது இல்லம் என முதல் அட்மிரல் முகமட் இம்ரான் அப்துல் ஹமிட் அழைந்து வந்தார்.
நேற்று லுமுட் நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் சின்னத்தில் போட்டியிடும் அவர் அந்தத் தளத்துக்குள்
பிரச்சாரம் செய்ய முயன்ற போது அதன் கதவுகள் அவருக்கு மூடப்பட்டன.
இம்ரானுடைய நிகழ்ச்சி நிரலின் படி அந்தத் தளத்தில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை நடத்த வேண்டும். ஆனால் கட்சி சட்டையுடன் அவர் நுழையக் கூடாது என அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அவர் தமது திட்டத்தை ரத்துச் செய்து விட்டு லுமுட் கடற்படைத் தளத்தின் நுழைவாயிலிருந்து ஒரு
கிலோமீட்டர் தொலைவில் உள்ள உணவு விடுதி ஒன்றில் தமது பிரச்சாரக் குழுவினருடன் நண்பகல் உணவை உட்கொண்டார்.
அந்த உணவு விடுதியில் காணப்பட்டவர்களில் பெரும்பாலோர் கடற்படை அதிகாரிகள் ஆவர். இம்ரான்
ஒவ்வொரு மேசையாகச் சென்று அவர்களுடன் கைகுலுக்கியதுடன் நல்வாழ்த்துக்களையும் கூறினார்.
அதே வேளையில் இம்ரான் குழுவினர் பிரச்சார கையேடுகளை விநியோகம் செய்தார்கள்.
“நான் என் சட்டையை மாற்றிக் கொண்டால் நுழைய முடியும். ஆனால் என் அடையாளம் தெரிந்து விடும். காரணம் அவர்களுக்கு என் முகம் நன்றாகத் தெரியும். நான் உள்ளே போனால் என்னை யாராவது பின் தொடருவார்கள். பிஎன் -னுக்கு எதிரான ஒர் அரசியல் கட்சியில் நான் சேர்ந்ததே இதற்கு எல்லாம் காரணம், அவ்வளவு தான்,” என்றார் அவர்.
“என்றாலும் எனக்குச் செல்வாக்கும் அனுபவமும் உள்ளது. நான் கடற்படை அதிகாரிகளை எப்போதும்
கவனித்து வந்துள்ளேன். என் செல்வாக்கை நிலை நிறுத்த முடியும் என நான் நம்புகிறேன். கடற்படை
அதிகாரிகளில் 50 முதல் 60 விழுக்காட்டினர் என்னை ஆதரிக்கின்றனர்,”
கடற்படைத் தளத்துக்கான இரண்டு நுழைவாயில்களிலும் கடந்த இரண்டு நாட்களாக காலை எட்டு மணிக்கும்
மாலை 5 மணிக்கும் பிகேஆர் குழுவினர் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்வதாக இம்ரானுடைய
பிரச்சார நிர்வாகி கைரில் அஸ்ஹார் கைருதின் சொன்னார்.
“கடற்படை அதிகாரிகளுடைய வாக்குகளை பெறுவது எங்களுக்கு மிகவும் சிரமமானது. ஆகவே நாங்கள்
முடிந்த வரை முயற்சி செய்கிறோம்.”
இம்ரான் லுமுட் நாடாளுமன்றத் தொகுதியில் பிஎன் -னின் கொங் சோ ஹா-வை எதிர்த்து நிற்கிறார். 2008ல்
அவர் மிகவும் குறுகிய 298 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.
நேற்று பிற்பகல் கொங், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் -உடன் அந்த தளத்துக்குள் சென்றார். அங்கு மகாதீர் மே 5 பொதுத் தேர்தலில் பிஎன் -னுக்கு ஆதரவு தேடி உரையாற்றினார்.
விருந்தினர் என்ற முறையில் கொங் அங்கிருந்த பல அதிகாரிகளுடன் கைகுலுக்கினார்.
லுமுட் தொகுதி ஆயுதப்படைகளைச் சேர்ந்த 12,718 வாக்காளர்களைக் கொண்டுள்ளது. போலீஸ் படையைச்
சேர்ந்த 569 வாக்காளர்களும் உள்ளனர். அவர்களுடைய மொத்த எண்ணிக்கை அந்தத் தொகுதியில் உள்ள
மொத்தம் 88,300 வாக்காளர்களில் 15 விழுக்காடு ஆகும்.
அந்த கடற்படைத்தளம் லுமுட் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் பங்கோர் சட்ட மன்றத் தொகுதியில்
அமைந்துள்ளது. பங்கோர் தொகுதியில் நடப்பு பேராக் பராமரிப்பு அரசாங்க முதலமைச்சரும் நடப்பு
உறுப்பினருமான ஜாம்ரி அப்துல் காதிர் போட்டியிடுகிறார்.