கோட்டா ராஜா நாடாளுமன்றத் தொகுதியில் இண்ட்ராப் தலைவர் பி.உதயகுமார் ஒரு சுயேச்சையாகக் களமிறங்குவதால் ஒரு காலத்தில் தன் கோட்டையாக விளங்கிய அத்தொகுதியைத் திரும்பக் கைப்பற்ற முழுமூச்சான முயற்சியில் இறங்கியுள்ள மஇகாவுக்கு ஒரு சிக்கல். இப்போது அங்கு வெற்றிபெற அத்தொகுதி இந்தியர்களை மட்டும் அது நம்பி இருக்க இயலாது. இந்தியர்-அல்லாத வாக்காளர்களையும் கவர வேண்டும்.
உதயகுமார் நீண்டகாலமாக ஒதுக்கப்பட்ட இந்தியர்களுக்காகக் குரல் கொடுப்பவர் என்று பெயர் பெற்றிருக்கிறார்.
இண்ட்ராப் பிளவுபட்டதால் அவர் தனிமரமாகி விட்டாலும், நாட்டில் அதிகமான இந்திய வாக்காளர்களைக் கொண்டுள்ள (29விழுக்காடு) அத்தொகுதியில் கணிசமான இந்தியர் வாக்குகளை அவரால் கவர்ந்திழுக்க முடியும் என்றே தோன்றுகிறது.
மஇகாவின் தலைமைச் செயலாளருடனும் அத்தொகுதியின் நடப்பு எம்பி-ஆன பாஸ் கட்சியின் டாக்டர் சித்தி மரியா முகமட்டுடனும் ஒப்பிடும்போது தம் வெற்றிவாய்ப்பு “குறைவுதான்” என்பதை ஒப்புக்கொள்ளும் உதயகுமார் அங்கு வெற்றிபெற வேண்டுமானால் மலாய்க்காரர், சீனர் வாக்குகளும் அவருக்கு ஆதரவாக திருப்ப வேண்டும்.
அத்தொகுதி இந்தியர்கள் பெரும்பாலும் குறைந்த வருமானம் உள்ளவர்கள். அவர்களின்மீதே எப்போதும் கவனம் செலுத்தி அவர்களின் நிலையை உயர்த்தவே போராடி வந்திருப்பதால் அவர்கள் உதயகுமாரை ஆதரிப்பது புரிந்துகொள்ளக்கூடியதே. மலாய்க்காரர்களும் சீனர்களும் அவரை ஆதரிப்பார்களா?ஆனாலும் “மனிதாபிமான முறையில்” ஆதரிக்கலாம் என்று நம்புகிறார் அவர்.
“வளர்ந்த நாடுகளில் பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் நலன் காப்பர். இங்கும் அது நிகழலாம்”, என்றாரவர்.
முருகேசனின் ஐந்து வாக்குறுதிகள்
உதயகுமார் இந்தியர் வாக்குகளைப் பெறுவதில் கவனம் செலுத்தி ஒரு காப்பிக் கடையிலிருந்து இன்னொரு காப்பிக் கடைக்குச் சென்று சிறுசிறு கூட்டத்தில் உரையாடி வரும் வேளையில், முருகேசன் மஇகா அத்தொகுதியை பிஎன்னுக்கு மீட்டுத்தர வேண்டும் என்ற குறிக்கோளுடன் பல இன வாக்காளர்களையும் சந்தித்து வருகிறார்.
முருகேசனின் தேர்தல் பணியாளர்கள் வாக்காளர்களைக் கவர இப்போதுதான் விருந்துகள், புட்சால் போட்டிகள் போன்றவற்றையும் மற்ற நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்யத் தொடங்கியுள்ளனர். முன்னாள் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துனர் என்பதும் ஊழல் புகார்கள் இல்லாதவர் என்பதும் தமக்கு ஆதரவைப் பெற்றுத் தரும் என்றவர் நம்புகிறார்.
அத்துடன் ஐந்து வாக்குறுதிகளையும் அவர் முன்வைத்துள்ளார். தம்மை வெற்றிபெற வைத்தால் அவற்றை நிறைவேற்றி வைப்பதாக அவர் உறுதி கூறுகிறார். அவையாவன: பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தல், குற்றச்செயல்களைக் குறைத்தல், நீண்ட காலமாக இருந்துவரும் வெள்ளப்பெருக்கு பிரச்னைக்குத் தீர்வு காணுதல், ஐந்து 1மலேசியா கிளினிக்குகள் அமைத்தல், அரசாங்கக் குழந்தை பராமரிப்பு மையங்களை அமைத்தல்.
அரசாங்கம் செல்வாக்கு இழந்திருந்தாலும் பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமரான நஜிப் அப்துல் ரசாக்கின் அபரிதமான மக்கள் செல்வாக்கு தம்மை வெற்றிபெற வைக்கும் என்று முருகேசன் நம்புகிறார். அதனால்தான் கோட்டா ராஜாவின் சில பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள பிஎன் பதாதைகள் ‘Undilah perdana menteri’ (பிரதமருக்கு வாக்களியுங்கள்).என்று கூறுகின்றன.
முருகேசனுக்கு சாதகமாக அளவற்ற வளம் இருக்கிறது, எல்லா வசதிகளையும் கொண்ட தேர்தல் குழுவும் இருக்கிறது.
அண்மையில் நஜிப்பும் கோட்டா ராஜாவுக்கு வருகை மேற்கொண்டு முருகேசனுக்கும் அவரின் “வாக்குறுதிகளுக்கும்”ஆசி கூறினார்.
தனி செல்வாக்கு
ஆனால், முருகேசனிடம் தனிப்பட்ட செல்வாக்கு இல்லை. அது, அத்தொகுதியின் நடப்பு எம்பியான பாஸின் டாக்டர் சித்தி மரியா மஹ்மூட்டிடம் நிறையவே உள்ளது.
காலை நேரங்களில் கிள்ளானுக்கும் ஷா ஆலத்துக்குமிடையில் பரந்து விரிந்து கிடக்கும் தம் தொகுதியின் தொலைதூர இடங்களுக்கு வருகை புரிவதை அவர் வழக்கமாக வைத்துள்ளார்.
கோட்டா ராஜா எம்பி-ஆக ஐந்தாண்டுகளுக்குமுன் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளிலிருந்தே தொகுதிக்காக உழைக்கத் தொடங்கிவிட்டதாகக் கூறும் அவர், கிட்டதட்ட அங்கு உள்ள எல்லா இடங்களுக்கும் சென்றிருக்கிறார்.
வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து அவர் வீட்டுக்குச் செல்வதுகூட இல்லை. கிள்ளான், செந்தோசாவில் உள்ள தம் அலுவலகத்திலேயே தங்கி விடுகிறார். வீடு சுங்கை பூலோவில் உள்ளது. அங்கிருந்து தொகுதிக்குச் செல்ல 45-நிமிடம் ஆகும். எனவே, அந்த நேரத்தை மிச்சப்படுத்த இந்த ஏற்பாடு.
“ஏனென்றால் வாக்குகள் முக்கியம். இப்போது 30,000 புதிய வாக்காளர்கள் இருக்கிறார்கள். 2008-இல் வாக்காளர்களிடம் எடுபட்ட விசயங்கள் இவர்களிடம் எடுபடாமல் போகலாம். எனவே, அவர்களையும் சந்திப்பது அவசியமாகிறது”, என்று சித்தி மரியா கூறினார்.
“அவர்கள் (உதயகுமாரும் முருகேசனும்) இந்தியர் வாக்குகளை இழுத்துக்கொள்வார்கள். ஏனென்றால், இங்குள்ளவர்களில் பலர் இண்ட்ராபின் தீவிர ஆதரவாளர்கள். இன்னொரு சுயேச்சை வேட்பாளர் அஸ்மான், ஒரு இந்திய முஸ்லிம். அவருக்கும் ஆதரவாளர்கள் உண்டு. ஒரு சிறிய எண்ணிக்கையில் இந்திய முஸ்லிம் வாக்குகள் அவர் பக்கம் செல்லும்”, என்றாரவர்.
ஆனாலும், உற்சாகத்துடன் காணப்படும் மரியா, தேர்தல் பரப்புரை என்பது “போட்டியின் இறுதிக் கட்டம்தான்” என்று குறிப்பிட்டார்.
“மக்களின் வாக்குகளைப் பெற கண்ணைக் கவரும் வகையில் ஏதாவது செய்யத்தான் வேண்டும் என்பதில்லை. இங்குள்ள இந்திய வாக்காளர்களும் என்னை நம்புகிறார்கள்.
“யாரிடமும் சென்று அவர்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்பதை நான் கேட்பதில்லை. கேட்காமலேயே மக்களுக்குப் பணி செய்து செய்து வருகிறேன். நஜிப், இந்தத் தொகுதிக்கு வந்து சேவை செய்யப்போவதில்லை. முடிந்தவரை எல்லாரையும் சந்தித்து வருகிறேன்”, என்றாரவர்.
‘மஇகா பிரச்னையின் ஒரு பகுதி’
உள்ளுக்குள் ஒன்றை வைத்துகொண்டு வெளியில் வேறு ஒன்றைச் சொல்பவரல்ல மரியா. எதுவானாலும் மனத்தில் உள்ளதைப் பட்டென்று சொல்லி விடுவார். முருகேசனின் வாக்குறுதிகளை “குப்பை” என்றவர் வருணித்தார்.
“சாக்கடைகளை மேம்படுத்தியுள்ளோம். வெள்ளம் ஏற்படுவதைக் குறைக்கும் முகமாக நீர்பிடிப்புக் குளங்கள் அமைத்துள்ளோம். குண்டர்தனத்தைப் பொருத்தவரை மஇகாவும் அப்பிரச்னைக்கு ஒரு காரணம். சில மஇகா தலைவர்களுக்கு இங்குள்ள குண்டர் கும்பல்களுடன் தொடர்பு இருக்கிறது.
“உள்ளூர் பொதுப்போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டங்களை வைத்துள்ளோம். அவற்றுக்கு நில பொதுப்போக்குவரத்து ஆணையத்தின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. இங்கு இரண்டு 1மலேசியா கிளினிக்குகள் உள்ளன. ஆனால், அவற்றில் போதுமான மருந்துகள் இல்லை என்று புகார்கள் வந்துள்ளன.
“எம்பி ஆனவுடன் எல்லாவற்றையும் ஒரே நாளில் செய்துவிட முடியாது. ஒரு எம்பியால் ஓரளவுக்குத்தான் செய்ய முடியும்.
“என்னால் சிலவற்றைச் செய்ய இயலாமல் போனதற்குக் காரணம் என்னவென்பதை மக்களிடம் எடுத்துக்கூறி வருகிறேன். இத்தொகுதிக்கான எம்பி ஒதுக்கீடு எங்கு சென்றது என்பதற்கு நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட பதிலை அவர்களிடம் காண்பிக்கிறேன். அப்பணம் என்னிடம் வரவில்லை. யாரிடம் கொடுக்கப்பட்டதோ அவரிடம் கேளுங்கள் என்று சொல்கிறேன்”.
தம் தொகுதி மக்களுடன் அமர்ந்து பசியாறிக்கொண்டே இவ்வளவையும் கூறினார் மரியா.
கோட்டா ராஜாவில் வெற்றி யாருக்கு என்பதை முன்னறிந்து கூறமுடியாதிருப்பதற்கு புதிய வாக்காளர்களின் வருகையும் ஒரு காரணமாகும். 2008-இல் மரியா மஇகாவின் எஸ்.விக்னேஸ்வரனை 20,751 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி கொண்டபோது இங்கிருந்த வாக்காளர் எண்ணிக்கை 71,887.
இப்போது அது 105,995 ஆகக் கூடியுள்ளது. இவர்களில் 44 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள், 29 விழுக்காட்டினர் இந்தியர்கள், 25 விழுக்காட்டினர் சீனர்கள்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் அமைந்திருந்தாலும் நகர்ப்புற மக்கள் தேசிய விவகாரங்களுக்குக் கொடுக்கும் முன்னுரிமையை இவர்கள் கொடுப்பதில்லை. இங்குள்ளவர்களுக்கு உள்ளூர் விவகாரங்கள்தான் முக்கியமானவை. பெரும்பாலோருக்கு அன்றாடப் பிழைப்பைப் பார்த்துக்கொள்வதே பெரும்பாடாக உள்ளது.
இங்கு போட்டியிடும் வேட்பாளார்கள் கோட்டா ராஜாவின் மூலை முடுக்கெல்லாம் தங்களை அறிமுகம் செய்துகொள்ளவும் அதன்வழி மக்களின் வாக்குகளைப் பெறவும் கடுமையாக உழைக்க வேண்டும்.
கோத்த ராஜாவில் பாஸ் பெரும்பான்மையில் வெல்லப்போவது உறுதி.