திங்கள்கிழமை இரவு சிரம்பானில் டிஏபி செராமாவுக்குத் திரண்ட மாபெரும் கூட்டம், மே 5 தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் சிரம்பானிலும் ராசாவிலும் வெல்லும் என்பதை மட்டுமல்ல அது மாநில ஆட்சியைக் கைப்பற்றப்போவதையும் காண்பித்தது என்கிறார் நெகிரி செம்பிலான் டிஏபி தலைவர் அந்தோனி லொக்.
அன்றிரவு சிரம்பான் மார்கெட்டுக்கு எதிரில் டிஏபியின் செராமாவைச் செவிமடுக்க, இலேசான மழையிலும், 10,000-க்கு மேற்பட்டோர் திரண்டார்கள்.
செராமா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தையும் தாண்டி கூட்டம் நிரம்பி வழிந்தது.
“இது நெகிரி செம்பிலானில் வரப்போகும் மாற்றத்தின் அடையாளமாகும். இது வரலாற்றுச் சிறப்புமிக்க இரவு. 20, 30 ஆண்டுகளில் நெகிரி செம்பிலான் மார்கெட்டுக்கு எதிரில் இவ்வளவு பிரம்மாண்டமான கூட்டம் கூடியது இதுவே முதல் தடவை”, என லொக் (வலம்) கூறினார்.
சிரம்பானும் ராசாவும் பக்காத்தான் கோட்டைகள் என்பதால் இவ்வளவு பெரிய கூட்டம் கூடுவது இயல்பே. இதைப் பார்த்து பக்காத்தான் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. ஏனென்றால் பிஎன் அதன் பரப்புரைகளை முடுக்கி விட்டு வருகிறது.
மலேசியாகினி இதனைக் கண்கூடாக கண்டது. நெடுஞ்சாலை டோல் சாவடியிலிருந்து சிரம்பான் நகரின் மையப்பகுதிவரை பிஎன் கூட்டணியின் பதாதைகள் சாலை நெடுகிலும் காணப்படுகின்றன.
முன்பு சிரம்பானில் முக்கிய இடங்களில் எல்லாம் பக்காத்தான் கூட்டணியின் கொடிகளும் பதாதைகளும் மட்டும்தான் கண்ணில் படும்.
சிரம்பான், ராசா நாடாளுமன்றத் தொகுதிகளுக்கிடையில் 11 சட்டமன்ற இடங்கள் அடங்கியுள்ளன.
இவற்றில் இரண்டே இரண்டில் மட்டும்- லெங்கெங், லாபு ஆகியவற்றில்- பிஎன் வெற்றிபெற்றது.
வெங்கெங்கில் பிஎன்னின் பிடி ஆட்டம் கண்டுள்ளது. அங்குள்ள அம்னோ உறுப்பினர்களுக்கு இஷாக் இஸ்மாயில் வேட்பாளராக நிறுத்தப்படுவது பிடிக்கவில்லை. இதனால், இப்போது அம்னோ முன்னாள் உறுப்பினர் சுல்கிப்ளி அப்துல்லா அங்கு சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
பக்காத்தானும், அது அம்பாங்கானிலும் சிக்காமாட்டிலும் முறையே 165, 499 வாக்குகள் வேறுபாட்டில் மயிரிழையில் வெற்றிபெற்றதை மறந்துவிடக் கூடாது.
மாநில பிகேஆர் தலைவர் கமருல் பஹாரின் அப்பாஸ் அம்பாங்கான் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து அங்கு பல பிகேஆர் நடவடிக்கை மையங்கள் மூடப்பட்டன என்பதையும் அது கருத்தில் கொள்ள வேண்டும்.
சிக்காமாட்டில், அதன் நடப்பு சட்டமன்ற உறுப்பினர் அமினுடின் ஹருன் இளம் வயதினரான புத்ரி அம்னோவின் வான் சல்வாத்தியிடமிருந்து போட்டியை எதிர்நோக்குகிறார்.