தாயிப் ஒய்வு பெறுவது பற்றிப் பேசுவதற்குத் தயாராக இல்லை

taibசரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட், இரண்டு ஆண்டுகளில் ஒய்வு பெறுவதாக 2011ம் ஆண்டு  ஏப்ரல் மாதம் வாக்குறுதி அளித்த போதிலும் தாம் ஒய்வு பெறும் தேதி குறித்து எதுவும் இப்போது உறுதியாகச் சொல்ல  மறுக்கிறார்.

சிபுவில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்த போது ஒய்வு பெறும் திட்டம் பற்றி அவரிடம் வினவப்பட்டது. அதற்கு  அவர் இன்னொரு கேள்வி மூலம் பதில் அளித்தார்.

“நான் ஒய்வு பெற வேண்டும் என நீங்கள் விரும்புகின்றீர்களா ? நீங்கள் எப்போது ஒய்வு பெறப் போகின்றீர்கள் ? என்னிடம் சொல்லுங்கள்,” எனக் கூறிய அவர், நான் விலகுவதற்குச் சிறந்த நேரத்தை நான்  முடிவு செய்வேன்,” என்றார்.

2011ம் ஆண்டு சரவாக் சட்டமன்றத்துக்கான தேர்தல் நடைபெற்ற போது அவர் எப்போது பதவி விலகுவார் என்ற கேள்வி தாயிப்பிடம் இடைவிடாமல் எழுப்பப்பட்டு வந்தது. பக்காத்தான் ராக்யாட்டும் அந்த விவகாரத்தை முக்கியமான பிரச்சார ஆயுதமாக பயன்படுத்தியது.

தாயிப்புக்கு இப்போது 76 வயதாகிறது. அவர் கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் சரவாக்கை ஆட்சி செய்துள்ளார். மலேசிய வரலாற்றில் ஒரு மாநிலத்தில் தலைமை நிர்வாகியாக நீண்ட காலம் பணியாற்றியுள்ள பெருமை
அவரையே சாரும்.

அந்த விவகாரம் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பிஎன் வாய்ப்புக்களை மங்கச் செய்து விடும் எனக்
கவலைப்பட்ட பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக், தாயிப்புடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆனால்
கால வரம்பு ஏதும் விதிக்கப்படவில்லை.

ஆனால் நெருக்குதல் அதிகரித்ததைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் விலகுவதாக அறிவித்தார்.

சரவாக் தேர்தலில் பிஎன் சிறந்த பெரும்பான்மையைப் பெற்றதும் தாயிப் தாம் ‘தவணைக்கால’ மத்தியில்
விலகுவதாக உறுதியில்லாமல் தெரிவித்தார்.

TAGS: