சுஹாக்காம் அறிக்கையை வெளியிடுமாறு டிஏபி நஜிப்புக்கு சவால்

லிம்மலேசியாவில் உள்ள சுதேசி சமூகங்களுடைய நில உரிமைகள் மீது சுஹாக்காம் எனப்படும் மலேசிய மனித  உரிமை ஆணையம் தயாரித்த அறிக்கையை வெளியிடுமாறு டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், பராமரிப்பு  அரசாங்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு சவால் விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையை வெளியிடுவதை நிறுத்தி வைக்கும் ‘உரிமை’ பராமரிப்பு அரசாங்கத்துக்கு கிடையாது என  லிம் நேற்று கோத்தா கினாபாலுவில் கூறினார்.

“நஜிப் அந்த அறிக்கை மீது தனிப்பட்ட கவனம் செலுத்துமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். அந்த
அறிக்கையை வெளியிடுவதற்கு எந்த ஆட்சேபமும் இல்லை என அவர் அடுத்த 24 மணி நேரத்துக்குள்
அறிவிக்க வேண்டும்,” என லிம் நிருபர்களிடம் கூறினார்.

சபா, சரவாக்கிலும் உள்ள சுதேசி சமூகங்கள், தீவகற்ப மலேசியாவில் ஒராங் அஸ்லி மக்கள் ஆகியோருடைய
நில உரிமைகள் பற்றி சுஹாக்காம் நடத்திய ஆய்வு முடிவுகளைக் கொண்ட அந்த அறிக்கையின் விவரங்களை
தகவல்களை அம்பலப்படுத்தும் சரவாக் ரிப்போர்ட் இணையத் தளம் அண்மையில் கசிய விட்டுள்ளது.

சுதேசி மக்களுக்குப் பாதகத்தை ஏற்படுத்தியுள்ள மோசடிகளும் அதிகார அத்துமீறல்களும் நிகழ்ந்துள்ளதற்கான  ஆதாரங்களை சுஹாக்காம் ஆய்வு கண்டு பிடித்துள்ளது.