பிகேஆர் வேட்பாளருடைய புதல்வியின் கார் எரியூட்டப்பட்டது

carபிகேஆர் வேட்பாளர் டாக்டர் சேவியர் ஜெயகுமாருடைய புதல்விக்குச் சொந்தமான இரண்டு கார்கள் மீது  கும்பல் ஒன்று நேற்றிரவு மண்ணெண்ணெய் கொள்கலங்களை வீசியது. அதனால் அந்தக் கார்கள்  சேதமடைந்தன. நேற்று கிள்ளான் தாமான் கொளாங் ஜெயாவில் உள்ள அவரது வீட்டில் இரவு மணி 11  வாக்கில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

அந்தச் சம்பவம் நிகழ்ந்த போது தேர்தல் ஏஜண்டான 30 வயது சங்கீதா ஜெயகுமார், செராமா நிகழ்வுக்குப்  பின்னர் தமது தந்தையுடன் பக்காத்தான் ராக்யாட் சேவை மய்யத்தில் கூட்டம் ஒன்றில் கலந்து  கொண்டிருந்தார்.

இரண்டு ஆடவர்கள் (ஒருவர் பாராங்கத்தியை வைத்திருந்தார்) வாகனம் ஒன்றிலிருந்து இறங்கி வீட்டின்
நுழைவாயில் கேட்டில் ஏறியதாக அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாத அண்டை வீட்டுக்காரர் சொன்னார்.

“அவர்கள் கேட்டில் ஏறுவதற்கு முன்னர் கூச்சல் போட்டதால் என் நாய் குரைக்கத் தொடங்கியது.”

“நான் அண்டை வீட்டுக்காரரை எச்சரிக்க சத்தம் போட்டேன். ஆனால் ஒதுங்கியிருக்குமாறு என்ன
மருட்டியதுடன் இல்லை என்றால் என் வீட்டுக்குள் மண்ணெண்ணெய் கொள்கலன்களை வீசப் போவதாகவும்
அவர்கள் எச்சரித்தனர்.”

கணவர், குழந்தை, பணிப்பெண் ஆகியோர் வீட்டில் இருந்தார்கள்

car1சம்பவம் நிகழ்ந்த போது சங்கீதாவின் கணவர் டாக்டர் அர்னில் ஸ்ரீமானும் ஒரு வயதுக் குழந்தையும் வீட்டுப் பணிபெண்ணும் வீட்டில் இருந்தனர்.

“சத்தம் கேட்டதும் நான் ஜன்னல் வழியாக பார்த்த போது அவர்கள் கெட்ட வார்த்தைகளை சொன்னதுடன்  என்னையும் மருட்டினர்,” என அர்னில் சொன்னார்.

“சந்தேகத்துக்குரிய அந்த நபர்கள் என் மனைவியின் காரின் பின்புறக் கண்ணாடியை உடைத்து
மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்தது.”

“பொது மக்கள் கூடத் தொடங்கியதால் அவர்கள் அவசரமாக மண்ணெண்ணெய் கொள்கலன்களை இன்னொரு
காரின் மீது வீசி விட்டு ஒடி விட்டனர்,” என்றார் அவர்.

சில நிமிடங்களில் தீயணைப்புத் துறை அங்கு வந்து நெருப்பை அணைத்தது.

car2அந்தச் சம்பவம் அரசியல் நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும் எனத் தாம் நம்புவதாக நடப்பு ஸ்ரீ  அண்டலாஸ் தொகுதி உறுப்பினர் சேவியர் கூறினார்.

“என் புதல்வி அரசியலில் என்னுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இத்தகைய  கலாச்சாரத்தை அரசியல் களத்தில் உள்ள இரு தரப்பும் ஊக்குவிக்கக் கூடாது.”

இதனிடையே சம்பவம் நிகழ்ந்த இடத்திற்குச் சென்ற போலீசார் அதனை தீ வைப்புச் சம்பவம் என  வகைப்படுத்தி விசாரித்து வருகின்றனர்.

மே 5 பொதுத் தேர்தலில் தமது ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்றத் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ள சேவியர்
ஐந்து முனைப் போட்டியில் இறங்கியுள்ளார். மஇகா இளைஞர் தலைவர் டி மோகன், மனித உரிமைக் கட்சியின் பி உதயகுமார், சுயேச்சைகளான கேஎஸ் கொட்டப்பன் சுப்பையா, ஹானாபியா ஹுசின் ஆகியோரே மற்ற நால்வர்கள் ஆவர்.

-மலாய் மெயில்

TAGS: