அன்வாரின் முன்னாள் ‘உற்ற தோழர்கள்’ பிஎன் வேட்பாளரை ஆதரிக்கிறார்கள்

1mazlanபெர்மாத்தாங் பாவ் பிஎன் வேட்பாளரான மஸ்லான் இஸ்மாயில், அத்தொகுதியைக் கைப்பற்றுவதற்கு உதவியாக அன்வார் இப்ராகிமின் “உற்ற தோழர்களை”த் தமக்குப் பக்கபலமாக சேர்த்துக்கொண்டிருக்கிறார்.

அன்வாரின் தோழர்கள் என்று சொல்லப்படும் அவ்விருவரும்- கல்வியாளர் சித்திக் பாபாவும் இஸ்லாமிய ஆய்வாளர் அய்டிட் hasan aliகசாலியும்- முன்னாள் பாஸ் கோம்பாக் சித்யா சட்டமன்ற உறுப்பினர் அசன் அலியுடன் (வலம்)  சேர்ந்து நேற்றிரவு தாமான் பாவில் நடைபெற்ற ஒரு செராமாவில், அன்வாரைத் தாக்குத் தாக்கென்று போட்டுத் தாக்கினர்.

முன்னாள் பினாங்கு பாஸ் இளைஞர் தலைவர் ஹபிஸ் நூர்டின் தலைமையில், ‘அன்வாரின் முன்னாள் உற்ற தோழர்களின் செராமா’ என்ற தலைப்பில் நடைபெற்ற அந்நிகழ்வில் ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.

மூன்று மணி நேரம் நடைபெற்ற அந்நிகழ்வில் அன்வாரின் முன்னாள் நண்பர்கள் இருவரும், முன்னாள் பிரதமருக்குப் பதிலாக டெலிகாம் மலேசியா பெர்ஹாட்டின் முன்னாள் இயக்குனர் மஸ்லானைத்தான் ஆதரிக்க வேண்டும் என வாக்காளர்களிடம் வலியுறுத்தினர்.

அந்நிகழ்வில் பேசிய மஸ்லான், ஏப்ரல் 20ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, அன்வார் அத்தொகுதி மக்களைக் கைவிட்டுச் சென்றுவிட்டார் என்று சாடினார். அவர் தம் சொந்த மாநிலத்தைவிட்டு நாட்டின் மற்ற பகுதிகளில்தான் சுற்றி வருக்கிறார்.

“இதற்குமுன் அவரின் துணைவியார் பெர்மாத்தாங் பாவ் முன்னாள் எம்பி டாக்டர் வான் அசீசா வான் இஸ்மாயில், 1999-இலிருந்து 2008வரை அத்தொகுதியைக் கவனிக்காமல் போட்டு வைத்திருந்தார். அதன்பின் அன்வார் மேலும் ஐந்தாண்டுக்காலம் கவனிக்காதிருந்தார்”, என்றாரவர்.

“இது சரியல்ல. அவருக்கு அத்தனை வாக்குகளைப் போட்ட மக்களுடன் தேர்தல் பரப்புரை காலத்தில்கூட 15 நாள்கள் இருக்கக் கூடாதா?”, என்று மஸ்லான் (இடம்) வினவினார்.

அத்தொகுதி மக்கள் அவர்களின் எம்பி மே 3-இல் திரும்பி வந்ததும் அவரிடம், “மீரி, பேராக், ஜோகூர் வாக்குகளுடன் ஒப்பிடும்போது எங்கள் வாக்குகளை இளக்காரமாக  நினைக்கிறீர்களா என்று கேளுங்கள்”, என்றார்.

தாம் வெற்றிபெற்றால் மே 5 இரவுமணி 10-க்கு நன்றிநவிலும் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்வதாக மஸ்லான் கூறினார்.

“அதன்பின் அன்வாரை விரிவுரை செய்ய அனுப்புவோம். தேர்தலில் தோற்றால் அதைத்தானே செய்யப்போவதாகக் கூறியுள்ளார்”.

மஸ்லான் தாம் வெற்றிபெற்றால் இன, சமய, அரசியல் வேறுபாடின்றி அனைவருக்கும் பணி செய்வதாக உறுதி கூறினார்.

 

TAGS: