மலேசியாகினியை திறப்பதை இணையச் சேவை நிறுவனங்கள் (ISPs) ‘கட்டுப்படுத்தியுள்ளன’

kiniமே 5 பொதுத் தேர்தலுக்கான அதிகாரத்துவப் பிரச்சார காலம் தொடங்கியது முதல் இணையச் சேவையை வழங்கும் பல மலேசிய நிறுவனங்கள் வழியாக மலேசியாகினியை திறப்பது ‘கட்டுப்படுத்தப்பட்டுள்ளது’.

அதன் விளைவாக வாசகர்கள் மலேசியாகினி வாசிப்பதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். அது ஒரு நிமிடம் கிடைக்கும். அடுத்த நிமிடம் அது காணாமல் போகும்.

இணையத் தள வாசகர்களைக் கட்டுப்படுத்துமாறு அந்த ஐஎஸ்பி-க்களுக்கு ஆணையிடப்பட்டிருக்க வேண்டும் அல்லது அவற்றுக்குத் தெரியாமல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என மலேசியாகினி நம்புகின்றது.

என்றாலும் Time Internet, YES YTL என்ற இரண்டு இணையச் சேவை நிறுவனங்கள் வழி மலேசியாகினியை வாசிப்பது பாதிக்கப்படவில்லை. அதேவேளையில் மலேசியாகினியின் அனைத்துலக வாசகர்களும் எந்த சிரமத்தையும் எதிர்நோக்கவில்லை.

அந்த செய்தி இணையத் தளத்தை மூடுவதற்குக் கடந்த காலத்தில் DDOS எனப்படும் சேவை விநியாக மறுப்பு
நடவடிக்கைகள் பயன்படுத்தப்பட்டன. இப்போது இது மலேசியாகினியை நிறுத்துவதற்கு புதிய விநோதமான
வழியாகத் தோன்றுகிறது.

kini1“இது போன்ற கீழறுப்பு தந்திரங்களினால் நாங்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளோம்,” என மலேசியாகினியின் தலைமை நிர்வாக அதிகாரி பிரமேஷ் சந்திரன் கூறினார்.

இணையத்தை தணிக்கை செய்யப் போவதில்லை என மலேசிய அரசாங்கம் அடிக்கடி வாக்குறுதி அளித்து  வந்துள்ளது. நடப்பு நிலைமை அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகத் தோன்றுகிறது என அவர் சொன்னார்.

சட்ட விரோதமாகக் கட்டுப்பாடுகள் அமலாக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய ஐஎஸ்பி-க்கள் தங்கள் முறைகளை முழுமையாக சோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் கருதுகிறார்.

மலேசியாகினி மலேசிய பல்லூடக, தொடர்பு ஆணையத்திடம் (MCMC) வரும் திங்கட்கிழமை அதிகாரப்பூர்வமாக  புகார் செய்வதுடன் கட்டுப்பாடுகளுக்கான ஆதாரங்களையும் வழங்கும்.

இணையச் சேவை நிறுவனங்கள் (ISPs) அரசியலிலிருந்து விலகியிருப்பதோடு தங்கள் இணைப்புக்களை கீழறுப்புச் செய்யும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தங்களது ஊழியர்கள் பின்பற்றாமல் இருப்பதையும் உறுதி  செய்ய வேண்டும் என்றும் பிரமேஷ் கேட்டுக் கொண்டார்.

அந்தக் கட்டுப்பாட்டை முறியடிப்பதற்கு பல வழிகளை மலேசியாகினி இப்போது ஆய்வு செய்து வருகின்றது.

வாசகர்கள் www.malaysiakini.com, www.mkini.co வழி மலேசியாகினியை கிடைப்பதை சோதனை செய்யலாம்.
அந்த இரண்டாவது முகவரி நேற்று ஏற்படுத்தப்பட்டது. இது வரை அதற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.

மலேசியாகினி வாசகர் எண்ணிக்கை கடந்த வாரம் 1.2 மில்லியனை எட்டியது. மே 5 தேர்தல் நெருங்க நெருங்க அந்த எண்ணிக்கை கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.