‘பக்காத்தான்- சுலு ஊடுருவல் தொடர்புகளை தற்காப்பு அமைச்சர் நிரூபிக்க வேண்டும்’

musலாஹாட் டத்து ஊடுருவலுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் உடந்தையாக இருந்ததாக தாம் சொல்வதை தற்காப்பு  அமைச்சர் முகமட் ஸாஹிட் ஹமிடி நிரூபிக்க வேண்டும் அல்லது வாயை மூடிக் கொள்ள வேண்டும் என பாஸ்  கட்சி இன்று வலியுறுத்தியுள்ளது.

“அவரிடம் ஆதாரம் இருந்தால் அவர் அதனைக் காட்ட வேண்டும். வெறுமனே ஊதக் கூடாது,” என அந்தக்  கட்சியின் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி கோலாலம்பூரில் நிருபர்களிடம் கூறினார்.

ஆயுதமேந்திய சுலு பயங்கரவாதிகள் சபாவுக்குள் ஊடுருவியதுடன் மூன்று பக்காத்தான் தலைவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என ஸாஹிட் கூறிக் கொண்டுள்ளது பற்றி முஸ்தாபா கருத்துரைத்தார்.

இன்னொரு விவகாரத்தில் இஸ்லாமிய ஹுடுட் சட்ட அமலாக்கம் தொடர்பில் தங்கள் கட்சிகளுக்கு இடையில் நிலவும் கருத்து வேறுபாடுகள் மீது அறிக்கைகளை வெளியிடுவதை பாஸ், டிஏபி தலைவர்கள் நிறுத்திக் கொள்ள  வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

“ஹுடுட் அம்னோ விரித்துள்ள வலையாகும். நாம் என்ன சொன்னாலும் அம்னோவுக்கு ஆதரவான ஊடகங்கள் அதனை பெரிதாக்கி விடும்.”mus1

“நமது கவனம் அம்னோவுக்கு எதிரான, பிஎன் -னுக்கு எதிரான போராட்டத்தில் இருக்க வேண்டும். அந்த  விவகாரம் போன்ற விஷயங்கள் நம் கவனத்தைத் திசை திருப்பக் கூடாது. இல்லை என்றால் நாம் அம்னோ  வலையில் விழுந்து விடக் கூடிய அபாயம் உண்டு,” என்றார் அவர்.

அந்த விவகாரம் மீது பக்காத்தான் பொது நிலையை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. அதனால் அதனை மேலும்  கிளறக் கூடாது என முஸ்தாபா வலியுறுத்தினார்.

ஹுடுட் சட்டத்தை டிஏபி ஒப்புக் கொள்ளவில்லை என்பதை ஏற்றுக் கொண்ட அவர், பாஸ் போராட்டத்தின் அடிப்படையான இஸ்லாத்தின் ஒரு பகுதி ஹுடுட் என்பதை அந்தக் கட்சி மதிப்பதாக சொன்னார்.

இணக்கம் இல்லை என்பதை ஒப்புக் கொள்ளும் முடிவு 2011ம் ஆண்டிலேயே எடுக்கப்பட்டு விட்டது என்றும் பிஎன்-னுக்கு எதிரான பொதுவான போராட்டத்திலும் பொதுக் கொள்கை வடிவமைப்பில் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ள விஷயங்களில் பக்காத்தான் கவனம் செலுத்த வேண்டும் என்றும் முஸ்தாபா கேட்டுக் கொண்டார்.

TAGS: