Umcedel ஆய்வு முடிவுகளை நஜிப் நிராகரிக்கிறார்

najib1பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக், தாம் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமைக் காட்டிலும்  நான்கு புள்ளிகள் பின்னால் இருப்பதாக மலாயாப் பல்கலைக்கழகத்தில் இயங்கும் ஒரு துறை நடத்திய ஆய்வு  முடிவுகளை நிராகரித்துள்ளார்.

“நான் அந்தக் கருத்துக்கணிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. நாங்கள் சொந்தக் கருத்துக்கணிப்பை பெற்றுள்ளோம்,” என்றார் அவர்.

சிலாங்கூர் ரவாங்கில் ஆயிரம் பேர் கலந்து கொண்ட நண்பகல் விருந்து நிகழ்வில் அவர் பேசினார்.

மலாயாப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஜனநாயக, தேர்தல் மய்யம் (Umcedel ) அண்மையில் நடத்திய ஆய்வின் கீழ் பேட்டி  காணப்பட்டவர்களில் 43 விழுக்காட்டினர் பிரதமராவதற்கு அன்வார் தகுதி பெற்றுள்ளார் என்றும் 39  விழுக்காட்டினர் நஜிப் தகுதி பெற்றுள்ளார் என்றும் கருதுவதாக வெளியான செய்தி குறித்து அவர் கருத்துரைத்தார்.

அந்த ஆய்வு முடிவுகள் குறித்து சில கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த ஆய்வின் கீழ் 1,407 பேர் பேட்டி காணப்பட்டதாகச் சொல்வது மிகக் குறைந்த எண்ணிக்கை என்றும் ஆய்வு முடிவுகளை பக்காத்தான் ராக்யாட் தில்லுமுல்லு செய்திருக்கலாம் என்றும் அவர்கள் எண்ணுகின்றனர்.

najibஉள் சதி ஏதுமில்லாமல் இருந்தால் பிஎன் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் எனத் தாம் உறுதியாக நம்புவதாக நஜிப் தொடர்ந்து கூறினார்.

“ஆனால் உள் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும். இல்லை என்றால் பொதுத் தேர்தலில் நமது அடைவு நிலைக்கு மருட்டல் ஏற்படலாம்.”

“நாம் ஒற்றுமையாக இருந்து கடுமையாக உழைத்தால் நமக்கு ஏன் நல்ல முடிவு கிடைக்கக் கூடாது என்பதற்குக்  காரணமே இல்லை,” என்றார் நஜிப்.

பக்காத்தான் ராக்யாட் மாநிலங்களில் பிஎன் அடைவு நிலை பற்றி வினவப்பட்ட போது அது எதிர்நீச்சலாக இருப்பதை நஜிப் ஒப்புக் கொண்டார்.

“மாநில அரசாங்கத்தை மாற்றுவது எளிதல்ல என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் எங்கள் தேர்தல் எந்திரம் இலட்சியத்துடன் இயங்குகிறது. நமது நோக்கங்களை அடைய நாங்கள் முடிந்ததைச் செய்வோம்.”

துணைப் பிரதமர் முஹைடின் யாசின் நாளை ஜோகூருக்குச் செல்லவிருப்பது பற்றிக் குறிப்பிட்ட நஜிப். அது பிஎன் அந்த மாநிலத்தில் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதற்கான அறிகுறி அல்ல என்றார்.

“இல்லை. ஜோகூர் ஒரு போர்க்களம் என்பது எங்களுக்குத் தெரியும். ஏனெனில் டிஏபி தலைவர்கள் அதனை அவ்வாறு தேர்வு செய்துள்ளனர்.”

“நாங்கள் ஜோகூரில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. முழுமையான வெற்றியை அடைய நாங்கள் ஒவ்வொரு  மாநிலத்துக்கும் செல்கிறோம்.”

TAGS: