கிராமப்புற சட்டமன்றத் தொகுதியான பெனாகாவில் நேற்றிரவு பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கலந்து கொண்ட செராமா நிகழ்வுக்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடினர். அந்த எண்ணிக்கை ஹாடியை வியப்பில் ஆழ்த்தி விட்டது.
பிஎன் நடவடிக்கை மய்யத்துக்கு அருகில் அதன் நீல நிறக் கொடிகளும் பதாதைகளும் வேட்பாளர்களுடைய
சுவரொட்டிகளும் வைக்கப்பட்டிருந்த திடலில் கூட்டத்தினர் குடும்பம் குடும்பமாக பாய்களில் அமர்ந்திருந்தனர்.
இஸ்லாம் பல இன சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என ஹாடி தமது உரையில் கூறினார். அதே வேளையில் முஸ்லிம் அல்லாதாருடனான தொடர்புகளில் முஸ்லிம்கள் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.
“நீங்கள் உங்கள் சொந்த சமூகத்தை நேசிப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் மற்றவர்களிடம் கொடூரமாக நடந்து கொள்ள வேண்டாம்,” என அவர் முஸ்லிம்களுக்குச் சொன்னார்.
“அதனால் தான் பாஸ் மாறுபட்ட சித்தாந்தம், சமயம், வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கொண்ட மற்றவர்களுடன் இணைந்து செயல்படுகின்றது. ஆனால் நமது வழிகளைப் பின்பற்றுமாறு நாம் மற்றவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது. அதே போன்று மற்றவர்களும் நம்மைக் கட்டாயப்படுத்தக் கூடாது.”
முஸ்லிம் அல்லாதார் இஸ்லாத்துடன் தொடர்புடைய துறைகள் தவிர்த்த மற்ற துறைகளில் பதவி வகிக்கவும்
அமைச்சர்களாக இருக்கவும் வகை செய்யப்பட்டிருந்தாலும் கூட்டரசு அரசாங்கம் ‘மலாய் முஸ்லிம்
அடிப்படையை’ கொண்டது என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளதாக ஹாடி குறிப்பிட்டார்.
ஹாடி இரண்டு நோக்கங்களுக்காக பினாங்கிற்கு வருகை அளித்துள்ளதாகத் தோன்றுகிறது. வரும் ஞாயிற்றுக்
கிழமை தேர்தலில் புத்ராஜெயாவை பக்காத்தான் ராக்யாட் கைப்பற்றுமானால் அந்தக் கூட்டணியில் சீனர்களை பெரும்பான்மையாகக் கொண்ட டிஏபி வலுவான அமைப்பாக இருக்க முடியாது என பாஸ் ஆதரவாளர்களுக்கு உறுதி அளிப்பது முதல் நோக்கமாகும்.
சுங்கை ஆச்சே தொகுதி மீது பாஸ் கட்சிக்கும் பிகேஆர் கட்சிக்கும் இடையில் எழுந்த பதற்றத்தை தணிப்பது
இரண்டாவது நோக்கமாகும். மாநில பாஸ் இளைஞர் தலைவர் யூஸ்னி மாட் பியா, பிகேஆர் கட்சியின் பத்ருல் ஷிஷாம் ஷாஹாரினுக்கு ஆதரவாக தேர்தலில் அந்தத் தொகுதியில் போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொண்டார்.
“மொத்தமுள்ள 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஸ் 73லும் டிஏபி 50 இடங்களிலும் பிகேஆர் 99 இடங்களிலும் போட்டியிடுகின்றன. பக்காத்தானில் 145 மலாய் முஸ்லிம்கள் எம்பி பதவிகளுக்குப் போட்டியிடுகின்றனர். ஆனால் பிஎன் -னில் 131 மலாய் முஸ்லிம்கள் மட்டுமே நிற்கின்றனர். முஸ்லிம் அல்லாதாரைப் பொறுத்த வரையில் பக்காத்தான் 77 பேரை நிறுத்தியுள்ளது. பிஎன் 99 பேரை இறக்கியுள்ளது,”
என ஹாடி சொன்னார்.
“பிகேஆர் கட்சியில் சபா, சரவாக்கைச் சேர்ந்தவர்கள் உட்பட பல்வேறு இனவம்சாவளிகளும் இருப்பதால் அது
அதிகமான இடங்களில் போட்டியிடுகின்றது. ஆகவே நாங்கள் வெற்றி பெற்றால் பக்காத்தானில் டிஏபி ஆதிக்கம் செலுத்தும் என எப்படிச் சொல்ல முடியும் ?”