நஜிப்: பாஸ் தலைவர்கள் சத்தம் போடுவார்கள்; செயல்பட மாட்டார்கள்

1 pm13வது பொதுத் தேர்தலில் கிளந்தான் மக்கள் பாஸ் கட்சியை நிராகரிக்க வேண்டும் என்று நஜிப் அப்துல் ரசாக் கோரிக்கை விடுத்துள்ளார். அக்கட்சித் தலைவர் மக்களை ஏமாற்றி வந்துள்ளார் என்று கூறிய அவர், 23-ஆண்டு ஆட்சிக்காலத்தில் கொடுத்த வாக்குறுதி எதையும் அக்கட்சி நிறைவேற்றியதில்லை என்றார்.

அக்கட்சித் தலைவர்  உரத்த குரலில் சுலோங்களை முழக்கமிடுவாரே தவிர மாநில மக்களுக்கு முன்னேற்றத்தைக் கொண்டுவர எதுவும் செய்ததில்லை என்றாரவர்.

“23 ஆண்டுகளாக மக்களிடம் பொய் சொல்லி வந்திருக்கிறார்கள். கோட்டா பாரு- கோலா கிராய் விரைவுச்சாலை அமைக்க நிதி திரட்ட விரும்புகிறார்கள். நிதி திரட்டி நெடுஞ்சாலை அமைக்க முடியும் என்று நினைக்கிறார்களா? அதற்கு ரிம2 பில்லியன் செலவாகும்….நடக்கிற காரியமா”. பராமரிப்பு அரசின் பிரதமரான நஜிப் அப்துல் ரசாக், இன்று பாசிர் பூத்தேயில் எஸ்எம்கே சுங்கை பெதாயில் 1மலேசியா மக்கள் கூட்டத்தில் பேசினார்.

1 pm120,000 பேர் திரண்டிருந்த அக்கூட்டத்துக்கு கிளந்தான் மாநில பாரிசான் நேசனல் (பிஎன்) தலைவர் முஸ்தபா முகமட்டும் (வலம்) துணைத் தலைவர் ஆவாங் அடெக் உசேனும் கலந்துகொண்டார்கள்.

ஞாயிற்றுக்கிழமை வாக்களிப்பில் கிளந்தான் மக்கள் பிஎன்னுக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்தால், பிஎன் முன்பே உறுதி அளித்துள்ள ஏழு வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று நஜிப் குறிப்பிட்டார்.

அந்த ஏழு வாக்குறுதிகளும் வருமாறு: கோட்டா பாரு- கோலா கிராய் விரைவுச்சாலை அமைத்தல்,  மாநிலத்தின் அடையாளச் சின்னமாக விளங்கும் ஒரு பள்ளிவாசலைக் கட்டுதல்,  ஒரு விளையாட்டு அரங்கம் அமைத்தல், மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழக வளாகம் கொண்ட ஒரு நகரை உருவாக்குதல், கட்டுப்படியான விலையில் 3,000 வீடுகளைக் கட்டித்தரல்,  கோட்டா பாருவுக்கு ரபிட் பஸ் சேவையைக் கொண்டுவருதல், தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வுகாணுதல்.

“13வது பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி பெற்றால் விரைவுச்சாலை, மாநில பள்ளிவாசல் ஆகியவை கட்டித்தருவோம். மற்ற வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். கட்டுப்படியான விலை வீடுகள் கட்டித்தரப்படும் என்று முன்பே சொன்னேன். கோட்டா பாருவில் அதற்கான  வேலை தொடங்கி விட்டது.

“பாசிர் பூத்தே போன்ற இடங்களிலும் அவற்றைக் கட்டுவோம். ஏழு வாக்குறுதிகள் ஒரு தொடக்கம்தான், வேறு பல திட்டங்களையும் அமல்படுத்துவோம்”, என்றார்.

கை சுத்தமானவர்

கிளந்தான் மந்திரி புசாராவதற்கு முஸ்தபாவே சிறந்த தேர்வு என்று நஜிப் குறிப்பிட்டார். அவர் கை சுத்தமானவர் என்றும் நேர்மையானவர் என்றும் அமைச்சராக இருந்தவர் என்றும் அனைத்துலக அளவில் பரந்த அனுபவம் உள்ளவர் என்றும் போற்றினார்.

மாநில மக்களின் நன்மைக்காக  முஸ்தபா பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவார், நிறைய முதலீடுகளைக் கொண்டு வருவார் என்ற நம்பிக்கை தமக்கு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.

-பெர்னாமா

 

TAGS: