கெராக்கான் மாநாட்டுக்கு முன்னதாக பதில்களை எதிர்பார்க்கிறார்கள் பேராளர்கள்

கெராக்கான் தேசியப் பேராளர் மாநாடு, இந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள வேளையில் பேராளர்கள் பலரும்- அரசியல் பார்வையாளர்களும்கூட -ஐந்து முக்கிய கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டிருக்கின்றனர்.கட்சி தன் எதிர்காலத்தைத் தீர்மானிக்க இந்தக் கேள்விகளுக்குத் தெள்ளத்தெளிவான பதில்கள் கிடைப்பது அவசியம் என்பது அவர்களின் நினைப்பு.

கட்சியின் முதல்-தவணை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் கோ சூ கூன் அடுத்த ஆண்டில் மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவாரா?- இதுதான் முதலாவதும் முக்கியமானதுமான கேள்வி.

கோ, குறைந்தது இரண்டு தவணைகளுக்காவது கட்சியைத் தலைமையேற்று வழிநடத்தப்போவதாக ஏற்கெனவே கூறியது உண்மைதான்.  ஆனால் அதற்கான அறிகுறிகள் எதனையும் அவர் இதுவரை வெளிப்படுத்தவில்லை எனக் கட்சி உறுப்பினர்கள் கருதுகிறார்கள்.

பலருக்கு அவர், அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிடுவாரா என்ற சந்தேகம்கூட உண்டு.தமக்கென்று பதவி எதுவும் இல்லாமல் கட்சியை வலுப்படுத்துவதில் அவர் கவனம் செலுத்தக்கூடும் என்றவர்கள் நினைக்கிறார்கள்.

“எல்லாம் இரண்டாம் தவணைக் காலத்துக்கும் அவர் கட்சிக்குத் தலைமையேற்க விரும்புகிறாரா என்பதைப் பொறுத்துள்ளது.கட்சியைத் தொடர்ந்து வழிநடத்த விரும்பினால் அவர் போட்டியிடத்தான் வேண்டும்”, என்கிறார் அரசியல் ஆய்வாளர் சியா சீ கியான். பெர்னாமாவுக்கு அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறு கூறினார்.

இரண்டாம் தவணைக்கும் தலைவராக இருந்து கட்சியை வழிநடத்த கோ முடிவுசெய்தால் அவர், கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசத்தில் பத்து தொகுதியில் அல்லது பினாங்கில் பத்து கவானில் போட்டியிடக்கூடும் என்பது அவரது கணிப்பு.

“அவர் தஞ்சோங்(பினாங்கு)-க்குக்குத் திரும்பிப்போக விரும்ப மாட்டார் என்றுதான் நினைக்கிறேன். அது, அவர் எங்கு போட்டியிட விரும்புகிறார்- கோலாலம்பூரிலா பினாங்கிலா என்பதைப் பொறுத்துள்ளது. பினாங்கு என்றால் பத்து கவான் அவர் போட்டியிட நல்ல இடம்”, என்றாரவர்.

2008 பொதுத் தேர்தலில் கோ பத்து கவானில்தான் போட்டியிட்டார்.ஆனால், இப்போது பினாங்கின் 2ஆம் துணை முதலமைச்சராகவுள்ள பேராசிரிய பி.இராமசாமியிடம் தோற்றுப்போனார்.

அடுத்த பொதுத்தேர்தலிலும் கட்சியை வழிநடத்தப்போவதாக ஏற்கனவே கூறியுள்ள அவர் அதைப் பற்றி மேற்கொண்டு எதுவும் சொல்லாது மெளனம் சாதிப்பதைக் கண்டு கட்சி உறுப்பினரும் தலைவர்களும் கவலை கொண்டிருக்கிறார்கள்.அவர் அதைப் பற்றி ஒரு முடிவெடுத்திருக்கலாம். ஆனால், முன்னெச்சரிக்கை மிக்கவர் என்பதால் பதிலைத் தமக்குள்ளேயே வைத்துக்கொண்டிருக்கிறார்.

அவர் சிம்பாங் ரெங்காமில் ஜோகூர்) போட்டியிடலாம் என்ற பேச்சுக்கூட அடிபடுகிறது. அது பாதுகாப்பான இடம் என்றும் கூறப்படுகிறது.

“ஆனால், அவர் சிம்பாங் ரெங்காமில் போட்டியிடுவதைக் கட்சித் தலைவர்களும் உறுப்பினர் பலரும் விரும்பவில்லை.அவர் அவ்வாறு செய்வது முறையாகாது என்பது அவர்களின் நினைப்பு”, என்று கட்சியின் உள்வட்டாரம் ஒன்று தெரிவித்தது.

கட்சித் தலைவருக்கு அடையாளம் கடினமான தொகுதியில்தான் போட்டியிடுவதுதான்

பலரும், கோ போட்டி நிரம்பிய கடினமான தொகுதியில் களமிறங்கி வெற்றிபெறுவதையே விரும்புகிறார்கள்.அதுதான் கட்சிக்குள்ளும், பிஎன்னிலும்கூட, அவருக்கு மதிப்பையும் மரியாதையையும் பெற்றுத்தரும்.

கெராக்கான் இளைஞர் தலைவர் லிம் சி பின் (இடம்) இளைஞர் தலைவர் பதவியைத் தற்காக்கப் போவதில்லை என்றும் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் இரண்டு மாதங்களுக்குமுன்பே அறிவித்துள்ளார்.

கெராக்கான் முன்னாள் தலைவர் டாக்டர் லிம் கெங் ஏய்க்-கின் ஒரே மகனான லிம், 2008 தேர்தலில் பத்து நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவுக்கு எதிராகப் போட்டியிட்டுத் தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

2008 பொதுத் தேர்தலில் கெராக்கான் வென்ற இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளையும்-சிம்பாங் ரெங்காம்(ஜோகூர்), கிரிக்(பேராக்) தக்கவைத்துக்கொள்வதும் கடினம் என்றுதான் தோன்றுகிறது.கிரிக் அம்னோவிடமிருந்து இரவல் பெறப்பட்ட தொகுதி. அது அம்னோவிடமே திரும்பக் கொடுக்கப்பட்டு அதற்குப் பதிலாக முன்பு மக்கள் முற்போக்குக் கட்சி(பிபிபி)க்குக் கொடுக்கப்பட்ட தைப்பிங் தொகுதி மீண்டும் கெராக்கான் கைக்குத் திரும்பும் என்று ஆருடம் கூறப்படுகிறது.

இங்கு இன்னொரு கேள்வி- இப்போது கிரிக்கின் எம்பி-ஆகவுள்ள கெராக்கான் மகளிர் தலைவியின் நிலை என்னவாகும், அடுத்த தேர்தலில் அவரை ஒரு வேட்பாளராக தக்கவைத்துக்கொள்ள கட்சி விரும்பினால் அவர் எங்கு போட்டியிடுவார் என்ற கேள்வி எழுகின்றது.

பேராளர் மாநாட்டில் பேராளர்கள் இதை ஒரு விவகாரமாக்கி கோ-விடம் விளக்கம் கோரும் சாத்தியம் உண்டு. அதைத் தவிர்க்க இயலாது எனக் கெராக்கான் தலைமைச் செயலாளர் தெங் சாங் இயோ கூறுகிறார்.

“பேராளர்கள் அதைப் பற்றிப் பேசுவதைத் தடுக்கவியலாது. அது அவர்களின் உரிமை”, என்றாரவர் அவர்.

என்றாலும், கட்சிக்கு எது நல்லதென்று நினைக்கிறாரோ அதைத்தான் கோ செய்வார் என்று கட்சி உதவித் தலைவர் மா சியு கியோங் உறுதியாக நம்புகிறார்.

“கோ, தம் முடிவை முன்கூட்டியே அறிவிக்காததும் சரியான அணுகுமுறைதான். காலம் கனிவதற்குமுன் ஏன் எல்லாவற்றையும் வெளியில் தெரிவிக்க வேண்டும். கட்சியின் நலனை மனத்தில் வைத்திருப்பவர் அவர்.. அதனால், கட்சிக்கு உகந்த சிறந்த முடிவைத்தான் செய்வார்”, என்று கூறினார். 

இன்னொரு கேள்வி- பொதுத் தேர்தலில் சிறந்த அடைவுநிலை காணாவிட்டால் அமைச்சரவையில் இடம்பெறுவதில்லை என்று மசீச முடிவு செய்துள்ளதே. அந்நிலைப்பாட்டையே கெராக்கானும் கைக்கொள்ளுமா?

அது பற்றிக் கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை என்றுதான் கோ கூறியுள்ளார்.

இந்நிலையில் கட்சியின் நடப்பு விவகாரங்கள் குறித்து கட்சியின் மூத்த உறுப்பினர்கள், கட்சியின் ஆயுள்கால உறுப்பினர் மன்றத்தில் உள்ளவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள அரசியல் பார்வையாளர்கள் பெரிதும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். கெங் ஏய்க்கைத் தலைவராகக் கொண்ட  கெராக்கான் ஆயுள்கால உறுப்பினர் மன்றம் அக்டோபர் 15-இல் கூடுகிறது.

இப்படி கெராக்கானைப் பற்றிப் பல கேள்விகள் எழுகின்றன. கோ,  இவற்றுக்குத் தெள்ளத்தெளிவான பதில்களை முன்வைப்பதே முறையாகும் என்று கட்சியில் பலரும் நினைக்கிறார்கள்.

-[பெர்னாமா

TAGS: