‘மூன்று முத்தான முழுப் பொய்கள்’

XavierJayakumar-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், மே 3, 2013.

செந்தோசா தமிழ்ப்பள்ளிக்கான  நிலத்தை கல்வி  இலாக்காவிடம்  ஒப்படைக்காதது ஏன்,  என்று இன்றைய  தமிழ் நேசன் வழி கேள்வி எழுப்பியுள்ள  டி . மோகன். ஒரே அறிக்கையில்  மூன்று  பொய்களைக் கூறியுள்ளார்.

முதல் பொய்: இரண்டு, மூன்று வருடங்களாக  இந்தியர்களை பார்க்கும்  இடமெல்லாம்  நாங்கள் மத்திய  அரசாங்கம் பள்ளிக்கூடம் கட்டவில்லை என்று கூறியுள்ளதாகச் சொல்லியிருப்பது முதல் பொய். அந்தப் பள்ளிக்கு 2009 ம் ஆண்டு ஆகஸ்டு   20 ஆம் தேதி மாநில ஆட்சிக்குழு அந்நிலத்தை அங்கீகரித்தது.  ஆக,  கடந்த 3 ஆண்டு  7 மாதங்களாக அது குறித்து மக்களுக்கு எடுத்துச் சொல்லி வருகிறோம்.

இரண்டாவது  பொய்:  4.05 ஏக்கர் என்பதாகும், நாங்கள் வழங்கியது 2.7 ஏக்கர் நிலம் மட்டுமே. அதைத்தான்  மக்களிடம் சொன்னோம். நீங்கள் நான்கு ஏக்கருக்கு மேல்  நிலத்தைத் தேடினால் எந்த இலாக்கா பதில் சொல்லும்.

மூன்றாவது பொய்: சில மாதங்களுக்குமுன் கல்வி இலாக்காவில் போய்த் தேடியதாக டி. மோகன் கூறுவது. உங்களிடம் விவரங்கள் முறையாக இல்லா விட்டால், அரசாங்க அதிகாரிகள் எப்படித் தேடித் தருவார்கள்?   கடந்த  24 ஆம் தேதி ஏப்ரல் மாதம் 2013 கிள்ளான் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி நிகழ்ச்சிக்கு  வருகை புரிந்த என். எஸ். ராஜேந்திரன் பலர் முன்னிலையில்  கொடுத்த ஒரு கடிதத்தை வைத்துக் கொண்டு  தான் தேடியதாகப் பத்திரிக்கையில்  அறிக்கை விடுவது ஏன்?

இந்தியர்கள் 1950 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை, நீங்கள் என்ன நாடகம்  நடத்துகின்றீர்கள் என்பதனைப் படமெடுத்து ஆதாரத்துடன் ஒப்படைக்கும்  அளவுக்கு முன்னேறி உள்ளனர் என்பதனை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்படி, ராஜேந்திரனுக்கு  தமிழ்ப்பள்ளிகள் மீது  அக்கறை இருந்தால், அந்த நிலம் குறித்து ஏதும் தகவல் வேண்டும் என்றால் நேரடியாக மாநில அரசுக்குக் கடிதம் எழுதியிருக்க வேண்டும். மாநில ஆட்சிக்குழுவில் ஒரே இந்தியராக இருக்கும் நான்  அது குறித்து முழுவிவரங்களை  அவரிடம் ஒப்படைத்திருப்பேன். பக்காத்தான் அரசை அணுகினால் ம.இ.கா தலைவர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்றால்,  குறைந்தது பள்ளி வாரியத்திடமாவது விசாரித்திருக்க வேண்டும். அதை விடுத்து மாநில அரசுக்கு எழுதினோம்  அவர்கள்  கொடுக்க வில்லை  என்று ஒப்புக்குக்  கதைகள் வாசிக்கக் கூடாது.

ஆக, ஒரு விசயத்தில் இத்தனை பொய் புரட்டுகளைச் செய்யும் டி.மோகனின் புரட்டுத்தனங்களை  மக்கள் நன்கு கவனித்து வருகின்றனர்.

இந்தத் தேர்தலுக்காக  மட்டும் இந்த வட்டாரத்தில் சுற்றி வருபவன்  நான்  அல்ல, அப்பகுதி மக்களுடன்  வாழ்ந்து வருகிறேன்.  அவர்களின் துன்பங்களில் என்றும்  அக்கறை கொண்டு செயல்படுபவன். அதனால்  இப்பிரச்சனையைக்  கடந்த 27-06-2011ல் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தமிழ்ப்பள்ளிகள் மீதான வட்ட மேஜை மாநாட்டில் பேசியுள்ளேன்.

நாடாளுமன்ற அமைச்சர் நஸ்ரி அசிஸ்சுடன் ம.இ.காவை பிரதிநிதித்து இரண்டு துணை அமைச்சர்களான  தேவமணியும், சரவணனும் கலந்து கொண்டனர். ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரனால் ஏற்பாடு செய்யப்பட்ட இம்மாநாட்டுக்கு அக்கட்சியின் ஆலோசகர் லிம் கிட் சியாங், பினாங்கு மாநிலத் துணை முதலமைச்சர் டாக்டர் ராமசாமியுடன் ஜ.செ.க., பி.கே.ஆர் கட்சி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

ஆனால் அவர்கள் எவருக்கும் கடந்த 34 மாதங்களாகத் தோன்றாத ஒரு கேள்வி, தமிழ்ப்பள்ளிக்கட்ட  நிலத்தை மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற ஒரு மாபெரும் கண்டுபிடிப்பை . ராஜேந்திரனும் மோகனும் சேர்ந்து புரிந்துள்ளனர். வாழ்கத் தமிழ்ப்பள்ளிகள்!

அன்புடன் ஒரே ஒரு கேள்வி: ராஜேந்திரனும், டி. மோகனும் எனக்கு மட்டும் ரகசியமாக சொல்வார்களா? கடந்த 1-5-2013 இல்  ச. சாமிவேல்  அடிக்கல் நாட்டிய சிரம்பான் தீவி  ஜெயா தமிழ்ப்பள்ளிக்கான நிலத்தை என்று தொழிலாளர் மேம்பாட்டு கூட்டுறவு கழகம் மத்திய அரசிடம் ஒப்படைத்தது என்ற விவரத்தை மட்டும் சொல்லுங்கள்.

TAGS: